கடந்த நான்கு இதழ்களில் பங்குச் சந்தை பற்றிய அடிப்படை விஷயங்களைப் பற்றி
நான் எழுதியதை படித்த வாசகர்கள் ஏராளமான கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி
இருக்கிறார்கள். கேள்விகளை ஒன்றுவிடாமல் படித்தபோது ஒரு விஷயம் தெளிவாகப்
புரிந்தது. அது, இந்த வாசகர்கள் அனைவரும் பங்குச் சந்தைக்கு மிகப்
புதியவர்கள். ஏற்கெனவே அரசல்புரசலாக கேள்விப்பட்ட பங்குச் சந்தை பற்றி
இப்போதுதான் முதல் முறையாக விளக்கமாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு
இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே அவர்கள் கேட்ட இரண்டு முக்கியமான
கேள்விகளுக்கு இந்த இதழில் பதில் அளிக்க விரும்புகிறேன்.
முதல் கேள்வி, திண்டுக்கல்லில் இருந்து செந்தில்குமார் கேட்டிருக்கிறார்.
''பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக
விரும்புகிறேன். இது சாத்தியமா?'' என்று கேட்டிருக்கிறார். இந்த வாசகர்
மட்டுமல்ல, பலரும் இந்த மாதிரி நினைக்கிறார்கள். பங்குச் சந்தை பற்றி நம்
மக்களிடம் பரவலாக இரண்டு விதமான கருத்துக்கள்தான் இருக்கிறது. ஒன்று, அது
சூதாட்டம். மற்றொன்று; குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகும் வழி. இந்த இரண்டு
அணுகுமுறையும் தவறு. பங்குச் சந்தை முதலீடு நீண்ட கால முதலீடு என்பதை
முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அந்தத் தொழிலைப் பற்றி அனைத்து
விஷயங்களையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உங்களுக்கு சில ஆண்டுகள்
பிடிக்கிற மாதிரித்தான் பங்குச் சந்தை முதலீடும். எடுத்த எடுப்பி லேயே
உங்களால் வெற்றிக் கொடி நாட்டி கோடி கோடியாக குவித்துவிட முடியும் என்கிற
கனவு தயவு செய்து வேண்டாம். பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில்
அடைந்த வெற்றியை பற்றித்தான் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பகிர்ந்து
கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் தோல்விகளை பல நேரங்களில்
தங்களுக்குள்ளேயே அமுக்கிவிடுகிறார்கள். ஆகவே, குறுகிய காலத்தில் பங்குச்
சந்தையில் நான் பெரும் பணம் சம்பாதித்துவிட்டேன், என்று யாராவது சொன்னால்,
நம்பவே நம்பாதீர்கள்.
அது போலவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் 30%, 50% லாபம் கிடைக்கும்
என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இன்னும் சிலர், எங்கள் சாஃப்ட்வேரை
பயன்படுத்தினால், உங்களுக்கு 25% லாபம் உறுதி, என்றெல்லாம் சொல்கின்றனர்.
அந்த சாஃப்ட்வேரை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம்
சம்பாதிக்கிறீர்களோ என்னவோ, அவர்கள் நிச்சயம் பணம்
சம்பாதித்துவிடுகிறார்கள்.
உறுதியான லாபம் கொடுக்கும் ஒரு சாஃப்ட்வேரை ஒருவரால் தயார் செய்ய முடியும்
என்றால் அதை வைத்து அவரே லாபம் சம்பாதிக்கலாமே! 5 ஆயிரம், 10 ஆயிரம்
ரூபாய்க்கும் யாரோ ஒருவருக்கு கொடுப்பானேன்? இது மாதிரியாக பங்குச்
சந்தையில் யாரும் கோடீஸ்வரன் ஆனவர்கள் இல்லவே இல்லை. அப்படி ஓரிருவர்
ஆகியிருந்தாலும் பின் நாட்களில் அந்தப் பணத்தை கட்டாயம் தொலைத்திருப்பார்.
சுருக்கமாக, குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் கோடிக் கணக்கில் பணம்
சம்பாதிப்பது கடினம். அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தோடு பங்குச் சந்தையில்
முதலீட்டை மேற்கொள்ளாதீர்கள். அப்படியானால் பங்குச் சந்தையில் முதலீடு
செய்ததன் மூலம் யாருமே இதுவரை கோடீஸ்வரர் ஆனதில்லையா? என்று நீங்கள்
கேட்கலாம். வெளிநாடுகளில் வாரன் பஃபட், ஜார்ஜ் சோரஸ், இந்தியாவில் ராகேஷ்
ஜுன்ஜுன்வாலா என பல நூறு கோடீஸ்வரர்களை பங்குச் சந்தை உருவாக்கி
இருக்கிறது. ஆனால், இவர்கள் யாருமே குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி
விடவில்லை. பத்து, இருபது ஏன் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்குச்
சந்தையில் முதலீடு செய்ததன் மூலமே கோடீஸ்வரராக ஆகியிருக்கிறார்கள். எனவே,
குறுகிய காலத்தில் பங்குச் சந்தை மூலம் கோடீஸ்வரர் ஆகும் ஆசையை
விட்டுவிடுங்கள்.
அடுத்த கேள்வியை, விழுப்புரத்திலிருந்து தர்மராஜன் கேட்டிருக்கிறார்.
''நான் ஏன் பங்குச் சந்தயில் முதலீடு செய்ய வேண்டும்?'' என்பதே அவர் கேட்ட
கேள்வி.
பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. இந்த வளர்ச்சியினால்,
உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. உணவுப் பொருட்கள்
விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசியமான
ஒவ்வொன்றும் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு 10
கொடுத்து வாங்கிய பொருள் இன்று 11. அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது.
இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம்.
நீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க
விகித்தைத் தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு
லட்ச ரூபாய் வங்கி பிக்ஸட் டெப்பாஸிட்டில் போடுகிறீர்கள். 8% உங்களுக்கு
வட்டி கிடைக்கிறது என்றால் 10% பணவீக்கத்தோடு அதை ஒப்பிடும்போது உங்களுக்கு
2% வருமான இழப்பு ஏற்படுகிறது. உங்களுக்கு 12% வட்டி கிடைத்தால் பணவீக்கம்
10% போக, 2% வருமானம் கிடைக்கும். ஆனால், வருத்தத்துக்குரிய உண்மை
என்னவென்றால், 12% வட்டி கொடுக்கிற வங்கிகள் ஏறக்குறைய இல்லை என்றே
சொல்லிவிடலாம்.
ஆனால், பணவீக்கத்தை வெல்லக்கூடிய ஒரு நல்ல முதலீடு பங்கு சார்ந்த முதலீடு
என்பது உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. சரியான பங்குகளில் நீண்ட
காலத்துக்கு முதலீடு செய்தால் உங்கள் வருமானம் நிச்சயமாக பணவீக்கத்தைத்
தாண்டியதாகத்தான் இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்
என்பதற்கு இதுவே முக்கியமான காரணம்.
பங்குச் சந்தை முதலீட்டில் ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக சிறிதளவாவது ஈடுபட
வேண்டும். ஏனென்றால் அந்த முதலீட்டினால் நீங்கள் உலகப் பொருளாதாரத்தோடு
உறவு உண்டாக்கிக் கொள்கிறீர்கள். நிறுவனங்களைப் பற்றி தெரிந்து
கொள்கிறீர்கள். பல வகையான தொழில்களைப்
பற்றி, நடப்புக்களைப் பற்றி, வாய்ப்புக்களைப் பற்றி, புதிய தொழில்களைப்
பற்றி, நிர்வாகம் பற்றி, உலக நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள்.
பங்கு முதலீட்டினால் லாபம் வருவது ஒருபுற மிருக்க, அதன் மூலம் கிடைக்கும்
அனுபவம், லாபத்தைவிட முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு எம்.டி. படித்த
டாக்டர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். இந்த சந்திப்பின் நோக்கம் அவர்
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய. ஆனால், அவருக்கு தனியாக தொழில் தொடங்க
வேண்டும் என்று ஆசை. பின்நாட்களில் தொழில் தொடங்கும்போது, பங்கு
முதலீட்டின் மூலம் கிடைத்த அனுபவம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாவது
உதவியாக இருக்கும் என்று நம்புகிறார் அவர்.
பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இப்படி பல நன்மைகள்
கிடைக்கும் போது நாம் அதைத் தவறவிடுவது புத்திசாலித்தனமான முடிவாக
இருக்குமா?
நன்றி: நாணயம் விகடன்
0 comments:
Post a Comment