Saturday, October 20, 2012

வெல்லம்... ரத்த சோகையை வெல்லும்!

பழங்குடி மக்களின் உடல்நலம் கருதி இனி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ரேஷன் கடைகளில் வெல்லம் வழங்கத் திட்டமிட்டு இருக்கிறது அரசு. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஓர் இனிப்புச் செய்தி. ரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. வெல்லத்தின் துணையுடன் ரத்தசோகையை எப்படி வெல்வது? ஈரோடு அரசு சித்த மருத்துவர் ஆர்.கண்ணன், உணவியல் நிபுணர் குந்தலா ரவி சொல்லும் வழிகள் உங்களுக்காக!


ரத்தசோகை?

இரும்புச் சத்துக் குறைவுதான் ரத்தசோகைக்கு முக்கியக் காரணம். உடல் வெளுக்கும். நகம் வெளுக்கும். முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள்.

இரும்பு வெல்லம்!

பனைவெல்லத்தைவிடவும் கரும்பி-ல் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும் 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரும்புச் சத்தும் கால்சியமும் சேரும்போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும். தவிர பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு.

நீடித்த பலன்!

சீனியை உட்கொள்ளும்போது சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேரும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கிவைத்துத் தேவைப்படும்போது தரும்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது சோர்வாகவும், படபடப்பாகவும் இருக்கும். அந்த நிலையில் வெல்லம் சாப்பிட்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வாதம், பித்தம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தைத் துணை மருந்தாகத் தரலாம். வெல்லத்தைச் சமையலில் பயன்படுத்தும்போது சுவை அதிகரிக்கும்.
ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்து, காலை மற்றும் இரவு அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால், வயிற்றுக் கடுப்பு கழிச்சல் தீரும். குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தைச் சிறிது அளவு உட்கொள்ளலாம்.

Thursday, October 18, 2012

மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு

மதுரை ஆதீனத்துக்கு தன்னால் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் (அடடடா), தான் பதவி விலகும் இந்த முடிவை அவர் எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை.

ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார்.

இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. இதுவரை எதற்கும் பயப்படாமல் இருந்த நித்யானந்தா, தமிழக அரசு நீதிமன்றத்தில் தன்னைப் பற்றி எடுத்து வைத்து வரும் கருத்துக்களைக் கண்டு ஆடிப் போயுள்ளதாகத் தெரிகிறது.

நித்யானந்தா ஒரு நடத்தை கெட்ட பேர்வழி என்று சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுரை ஆதீனத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கடுப்பாகியுள்ள அரசு, ஆதீன மடத்துக்கு விரைவில் ஒரு செயல் அலுவலரை நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நித்யானந்தாவை விரட்டி விடா விட்டால் மடம் தனது கட்டுப்பாட்டில் இருந்து போய்விடும் என்ற பீதியில் அருணகிரிநாதர் உள்ளார்.

இந்த அச்சத்தை அவர் நித்யானந்தா தரப்புக்கும் தெரிவித்துவிட்டதோடு, இடத்தைக் காலி செய்யவும் சொல்லி கதறி வருவதாகத் தெரிகிறது.

இதையடுத்து இப்போது திருவண்ணாமலையில் தங்கியுள்ள நித்தியானந்தா தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும், மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பொறுப்பில் இருந்து விலகிவிட அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று மாலை அவர் தனது முடிவை அறிவிக்கலாம் என்கிறார்கள்.

இளைய ஆதீனமாகத் தொடர்ந்தால் தமிழக அரசின் நடவடிக்கை தன் மீதும் பாயும் என்ற பயமும் நித்யானந்தாவை ஆட்டுவித்து வருவதாகத் தெரிகிறது.

டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி ?

தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடையே போதிய
விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி?

வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.

இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர். ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும். அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.


சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாகவும், வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம். அரசு இயந்திரங்களை நம்பாமல், பொதுமக்கள் சுகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.

Monday, October 15, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanctuary !!

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 480 சதுர கி.மீ. இந்த சரணாலயத்தின் முக்கிய நோக்கம் - அழிவில் இருக்கும் பெரிய வகை அணில்களை பாதுகாப்பது.

இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், ஒரு சிறு பகுதி மதுரை மாவட்டத்திலும் உள்ளது.

இந்த சரணாலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு பலவகையான மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. மேலும் இங்கு தனிப்பாறை எனுமிடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், குரங்கு, பறக்கும் அணில், கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன. இங்கு இருக்கும் பெரிய வகை அணில்களை இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணமுடியும். இங்கு இருக்கும் அணில்கள் ஒன்றரை கிலோ எடையுள்ளவை, இவை பெரும்பாலும் புளியையே விரும்பி உண்ணும்.

இங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த சரணாலயத்தில் தற்போது 200 வகையான மரங்கள், செடிகள் உள்ளன. மேலும் 18 வகையான பாம்புகள், 15 வகையான ஊரும் விலங்குகள், 56 வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளன.

இந்த சரணாலயத்திற்கு அருகில் பிலவாக்கல் மற்றும் கொய்லார் அணைகள் உள்ளன. மேலும் இதன் அருகில் மீன்வெட்டிப் பாறை அருவியும் உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே பலர் மலைக்குச் செல்கின்றனர்.

எப்படி செல்வது?

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம்.

அருகில் உள்ள ரயில் நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில்.

அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபின்னர் இந்த சரணாலயம் செல்வதற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் அல்லது நடந்தே மலை மீது ஏறலாம்.

Sunday, October 14, 2012

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..!!!

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம்பூவின் பயன்கள்:
-----------------------------------
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

கூலி வேலை செய்தவரின் சாதனை !!!

ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தை கொழு கொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான், சமையல்காரர். தாய் லீ - லீ, வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர், குடும்பத்தின் நிலையையையும், குழந்தையின் அழகையும் பார்த்து தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழை பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.

அந்த குழந்தைக்கு சான் காங் - காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு 'ஹாங்காங்கில் பிறந்தவன்' என்று அர்த்தம். இந்நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடக பள்ளியில் காங் - காங் சேர்ந்தான். தனது ஏழாவது வயதிலேயே கராத்தே குங்பூ என மார்ஷியல் கலைகள் அனைத்தையும் கற்றான். தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். 8 வயதில் 'பிக் அன்ட் லிட்டில் வாங்க்ஷன்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தான்.

அவனின் 18 வயதில் புருஸ்லீ நடித்த 'என்டர் தி டிராகன்' படத்தில் சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டான்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட காங் - காங் உடனே ஓடி வந்து குதித்து புருஸ்லீயை கவர்ந்தார்.

அதன் வாய்ப்புகள் கிடைக்காததால் கட்டிட வேலைகளில் உதவியாளராக கூலி வேலை செய்தார். தினக்கூலியாக வேலை பார்த்தாலும் இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர்கள் ஒருவர் 'லிட்டில் ஜாக்' என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி' ஆனது. ஹாங்காங்கில் இருந்து உடனே தந்தி வர ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர் 'பிஸ்ட் ஆப் ப்யூரி' என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்தது. அந்த சாதனையாளரின் பெயர் தான் ஜாக்கி சான்

Friday, October 12, 2012

கற்றது கையளவு...

புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்..
அப்போது அங்கு வந்த புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தன் புத்தரிடம், “குருவே, நான் இந்த உலகத்தைத்
தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.. எப்படி?” என்று கேட்டார்..

புத்தர் அவரிடம், “இந்த மரத்தில் ஏறி தழைகளைப்
பறித்து வா!” என்றார்..

ஆனந்தன் அந்த மரத்தின் மேல் ஏறி கைகொள்ளும்
அளவுக்குத் தழைகளைப் பறித்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்..

புத்தர் அவரைப் பார்த்து, “ஆனந்தா, இப்போது உன்
கையில் என்ன உள்ளது?” என்று கேட்டார்..

“தழைகள் குருவே” என்றார்..

“அப்படியானால்.. மரத்தில்...?”
என்று திருப்பிக் கேட்டார் புத்தர்..

“மரத்தில் நிறைய தழைகள் இருக்கின்றன” என்றார் ஆனந்தன்..

உடனே புத்தர்,
“ஆனந்தா, இந்த உலகத்தைத்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே...
அது இதுதான்..
நான் உனக்குப் போதித்தது உன்
கையிலுள்ள அளவுதான்..
நான் உனக்குப்
போதிக்காதது மரத்திலுள்ள தழைகளின் அளவு..
அவ்வளவையும் என்னால் போதிக்க முடியாது..
நீ இந்த உலகத்தை
உன் அனுபவத்தால்தான் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்..