Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Wednesday, March 7, 2012

மாற்றத்தின் அறிகுறி...

 

முடிவுகள் வெளியாகி இருக்கும் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டதற்குக் காரணம், எதிர்பார்ப்பு முலாயமா, மாயாவதியா என்பதாக இல்லாமல், ராகுல் காந்தியால் காங்கிரஸூக்கு மீண்டும் எழுச்சி ஏற்படுமா இல்லையா என்பதாக இருந்ததுதான். காட்சி ஊடகங்கள் மிகைப்படுத்தி வர்ணித்ததுபோல ஒருவேளை ராகுல் காந்தியின் பிரசாரத்தால் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், அது அகில இந்திய அளவில் காங்கிரஸூக்குப் புத்துணர்ச்சி அளித்து மக்களவைத் தேர்தலுக்கு வழிகோலி இருக்கக் கூடும்.
குஜராத், பிகாரை அடுத்து இப்போது உத்தரப் பிரதேசத்திலும் "ராகுல் மாஜிக்' வேலை செய்யாத நிலையில் மன்மோகன் சிங் அரசு வழக்கம்போல எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும், பிரச்னைகளுக்கும் இடையில் தத்தளித்த வண்ணம் பதவியைப் பற்றிக் கொண்டு திசை தெரியாமல் இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று நம்பலாம். ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 403 இடங்களில் 224 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சியும், மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் 28 இடங்களுடன் காங்கிரஸூம் சட்டப் பேரவையில் இடம் பிடிக்கின்றன. கடந்த சட்டப் பேரவையில் 21 இடங்கள் மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சி, 2009 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களைப் பெற்றதால் இந்தத் தேர்தலில் நூறுக்கும் அதிகமான இடங்களை வென்றுவிடக் கூடும் என்கிற நம்பிக்கை ராகுல் காந்திக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ராகுல் காந்தி மட்டுமல்லாமல், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் என்று நேரு குடும்பமே மேடையேறிப் பொதுக்கூட்ட மேடையைப் பொருள்காட்சி மேடையாக்கியும்கூட வெற்றி கிட்டாமல் போனதுதான் துரதிர்ஷ்டம் - அவர்களுக்கு! பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைக் கூற முடியும். முதலாவதாக, மாயாவதியால் அவர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராகச் செயலாற்ற முடியவில்லை. கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம், எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் "சர்வ சமாஜ்' கட்சியாகத் தனது பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்று அவர் விடுத்த அறைகூவல்தான். பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்), முஸ்லிம்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பலரை பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக்கி 2007-ல் வெற்றி பெற்ற மாயாவதி, சமார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதவ் வகுப்பினரின் ஆட்சியை நிறுவ முற்பட்டாரே தவிர "சர்வ சமாஜ்' ஆட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் சரி, ஜாதவ் அல்லாத பாசி, கோங்கர், வால்மீகி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது ஆட்சியாக மாயாவதியின் ஆட்சியைக் கருதவில்லை. மேலும், மாயாவதி ஒரு மாயா உலகத்தில் வாழ்ந்தபடி ஆட்சி நடத்தினார் என்பது அவர்மீது பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. பத்து அடி உயர மதில்களுக்குள் இருந்துகொண்டு, தனது அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத முதல்வராக மாயாவதி ஆட்சி நடத்தியதாக அவரது கட்சிக்காரர்களே இப்போது குற்றம் கூறுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மட்டுமே தனது ஆலோசகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாகவும் தெரிகிறது. முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை, மக்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்த்தி இருப்பதாகக் கூறிவிட முடியாது. முலாயம் வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துவிடும் என்கிற பயம் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இருந்தாலும், அவரது சமாஜவாதி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதற்கு அவர் மாயாவதியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள், மின்வெட்டு, பரவலான லஞ்ச ஊழல், "தலித்' "தலித்' என்ற கோஷத்துடன் நடக்கும் முறைகேடுகள் இவையெல்லாம் முலாயம்சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை. காங்கிரஸூக்கோ, பாஜகவுக்கோ வாக்களிப்பதன் மூலம் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டு மீண்டும் மாயாவதி ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்பதில் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் குறியாக இருந்தனர் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் வித்தியாசமான நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்ததும் இன்னொரு காரணம். ராகுல் காந்தியைப்போல அந்நியத்தனம் இல்லாமல் மக்களில் ஒருவராகத் தெரிந்த அந்த இளைஞர் சமாஜவாதி கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட உதவினார் என்றும் கூற வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜவாதி கட்சியும், பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் - பாஜக கூட்டணியும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸூம் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. உத்தரகண்டில் 32 இடங்களில் காங்கிரஸூம், 31 இடங்களில் பாஜகவும் வென்று இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய ரீதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இருக்கும். அதனால், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது இயலாது. இனிமேல், தனது நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்திக்கு கூட்டம்தான் கூடுமே தவிர, வாக்குகள் பெற்றுத்தர முடியாது என்பது மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி. எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைமையில் நிலவும் பூசல்கள் மேலும் வலுப்பெறுமானால், காங்கிரஸின் நிலைமை பாஜகவுக்கும் ஏற்படக் கூடும். மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!
கருத்துகள்

ku ku ku .. poo
By jeeva
3/7/2012 7:55:00 AM
ஒரு சினிமால் காரணம் எதுவும் சொல்லாமல் நடிகர் வடிவேலுவை பார்த்து, நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட; நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட என்று கூறினார்கள். எதுக்கு சரிபட்டு வரமாட்டான் என்று கடைசி வரை கூறவே இல்லை. வடிவேலு எதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன் என கேட்டு கேட்டு அழுததுதான் மிச்சம். அதுபோல் நன்கு ஆட்சி நடத்திய மாயாவதியையும் ஆட்சியை விட்டு மக்கள் நீக்கிவிட்டார்கள். மக்கள் ஆப்பை பிடிங்கிய குரங்காக மாறியிருகிறார்கள். இனி வழியை தங்கி கொள்ளவேண்டியதுதான்.
By நாகேஷ் குமார்
3/7/2012 7:17:00 AM
மக்கள் மீண்டும் முலாயம் சிங் ஆட்சியை கொண்டுவந்து விட்டார்கள். இனி போலீஸ் ரவ்டிகளாக மாரபோகிறார்கள் அல்லது ரவடிகளுக்கு உடந்தையாக இருக்க போகிறார்கள். இது உண்மை.
By ரமேஷ்
3/7/2012 7:03:00 AM
மாயாவதி ஆட்சிதான் மக்களுக்கு பிடிக்கவில்லை. ஏன் குண்டர்களின் அட்டகாசம் உள்ளடிக்கிய முலாயம் சிங் கட்சியை தேர்வு செய்தார்கள்? மக்கள் BJP-க்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மக்கள் இன்னும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள். இனி UP குண்டர்களின் அட்காசம் கொண்ட முதல் மாநிலமாக திகழபோகிறது. மக்களே பொறுத்திருந்து பாருங்கள்.
By ராமசாமி
3/7/2012 6:58:00 AM
கடந்த சமாஜவாதி கட்சி முலாயம் சிங் யாதவின் ஆட்சியில், நொய்டாவில் பல சிறுவர்களின் கை கால்கள் சாக்கடையில் கண்டெடுகபட்டது, இப்ப நினைத்தாலும் பகிர் என்கிறது. அது முலாயம் சிங் ஆதரவுடன் வியாபார நோக்கில் செயப்பட்டது என்று முடிவில் தெரியவந்தது. இன்னும் முலாயம் சிங் கட்சி ஆட்சியிலே ஏறவில்லை, நேற்று இரவு முலாயம் சிங் கட்சிகாரர்கள் பத்திரிகைகாரர்களையும் பொது மக்களையும் அடித்து உதைத்தது நேரடியாக பார்க்க நேர்ந்தது. அவர்கள் 50 மேற்பட்ட media camera -களை உடைத்தெறிந்தார்கள். இதை BJP பார்த்து முலாயம் சிங் கட்சி என்றாலே hooliganism -க்கு பேர்போனது என்று NDTV-யில் பேட்டியளித்தது.
By சிங்காரம்
3/7/2012 6:45:00 AM
பாஜக-வும் ஒன்றும் பெரியதாய் சாதித்து விடவில்லை, காங்கிரஸ்-ஐ குறை கூற. உபியில் 51 இலிருந்து 47 ஆகவும், உத்தரகாண்டில் 35 இலிருந்து 31 ஆகவும், பஞ்சாபில் 19 இலிருந்து 12 ஆகவும் அவர்கள் MLA க்களும் குறைந்திருப்பது, தேசிய கட்சிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. மாநிலங்களின் நலனை காக்க பிராந்திய கட்சிகளே எவ்வளவோ மேல் என மக்கள் நினைக்கிறார்கள். எனவே, பாஜகவும் காங்கிரஸ்-இன் இழப்பை எண்ணி புளகாங்கிதம் அடைந்து கொண்டிராமல், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஏன்? என self analysis செய்தால், உருப்படுவார்கள். இல்லையெனில், பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கும் சங்குதான்!
By சோம் தேவ்
3/7/2012 6:37:00 AM
மக்களை ரொம்பத்தான் சீப்பா நினைக்காதீங்க,ரொம்ப காலம் ஏமாத்த முடியாது . ஆளை கண்டோ முகத்தை பார்த்தோ போலியான ஊடகங்களின் விளம்பரத்தை கண்டோ மக்கள் யாரும் ஏமாறுவது இல்லை . இனியாவது வெற்றி பெற்ற கட்சிகள் நேர்மையான ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் .ஜெயித்து விட்டதால் நீங்கள் அகம்பாவம் கொண்டு மக்களை சிறுமையாக எண்ணுவீர்களே ஆயின் கொந்தளித்து உங்களை தூக்கி அடிக்கவும் தயங்க மாட்டார்கள் அப்பாவி மக்கள், எப்பவும் கண்காணிப்பில்தான் இருக்கிறீர்கள் என்பதை எந்த அரசியல்வாதியும் மறந்து விட வேண்டாம்
By saralatharani
3/7/2012 6:31:00 AM
இந்த தேர்தல் ராகுல் ஒரு டம்மி என்பதையும் மக்கள் நேரு காந்தி என்று சொல்லி ஏமாற்றுவதை விரும்பவில்லை என்பதையும்,நேரு, இந்திரா பெரோஸ் காந்தி க்கு கிடைத்த அனுதாபம் சோனியாவுக்கு இல்லை என்பதையும்,போபோர்ஸ்,ஆதர்ஷ்,2G,காமல்வெல்த் ஊழல்களால் நாறிப்போன இந்திரா காங்கிரஸ் அரசாள அனுமதிக்கவில்லை என்பதையும்,வட்ராகுடும்பத்தோடு வந்து எக்சிபிஷன் வைத்தது ரசிக்க வில்லை என்பதையும்,ராய் பரேலி யில் உதைத்த உதையில் நேரு குடும்பத்துக்கு தெள்ள தெளிவாக சொல்லி விட்டனர்.நேரு குடும்பத்துக்கு வெளியே ஒரு நல்ல தலைவராக கிடைத்து அவரிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு சோனியாவும் கூட்டமும் அரசியலை விட்டு ஒழிந்தாலன்றி இந்திரா காங்க்றேசுக்கு தேற வழி இல்லை.ஆயிரந்தான் ஆனாலும் துருவ கரடி உள்ளூர் கரடி ஆகாது.
By கிளிக்காடு
3/7/2012 6:30:00 AM
இச்செய்தில் சொல்ல பட்ட கருத்துகளை வரவேற்கிறேன். ஆனால் சிறு மாற்றங்கள் தேவை. மாயாவதி ஏழ்மை நிலையில் இருந்து, தன் அறிவு நுட்பத்தால், UP-யின் முதல்வராக 5 முறை பதவி வகுத்துள்ளார். மாற்று கட்சிகள் காங்கிரஸ் உட்பட மற்றும் சமூக ஆர்வலர்கள், மாயாவதி தாழ்ப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் துரோகம் இழைத்துவிட்டார் என்று கூக்குரல் போட்டனர். பழைய செய்திகளை புரட்டினால் தெரியும். கடந்த முலாம் சிங்க் ஆட்சியில் குண்டர்களின் அட்டகாசத்தையும் மற்றும் கொலை கொள்ளை ஆகியவைகளை மக்கள் பொருத்துகொள்ளமுடியாமல் தான் மாயாவதி ஆட்சியை ஏற்படுத்தினர். அதேபோல் மக்கள் முன்னேற்றத்திற்கு மாயாவதியும் நல் ஆட்சிதான் தந்தார். அவர் செய்த தவறு, அவர் சிலைகளையும் யானை சிலைகளையும் நிறுவினார் என்பதுதான் குற்ற சாட்டு. ஆனால் ஊழல் கட்சியான காங்கிரஸ், தேர்தல் கமிசன் உதவியுடன் மாயாவதி ஆட்சியை அகட்டி விட்டு, தம் கட்சியை ஏற்படுத்துலாம் என்று திட்டம் போட்டது, அது ஆப்பு அசைத்த குரங்கு போல் காங்கரஸ் ஆனது.
By அகலேஷ்வரன்
3/7/2012 6:28:00 AM
ராகுல் காந்தி என்ன சுதந்திரத்திற்கு பாடுபட்டவரா என்ன அவர் மேல் மக்களுக்கு எப்படி ஒரு ஈர்ப்பு இருக்க முடியும். தவறான அணுகுமுறை. ராஜீவ் காந்திமேல் மக்களுக்கு ஈர்ப்பு இருந்ததற்கு அவர் அம்மா இந்திராகாந்தியின் அகால மரணம் தான் கரணம். மற்றபடி தனிப்பட்ட முறையில் ராஜீவ் மேல் மக்களுக்கு ஈர்ப்பு என்பது இல்லை. மக்களை இனி வாரிசுகளை காட்டி ஏமாற்ற முடியாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியின் லட்சணம் ஊடகங்கள் முலமாக மக்களுக்கு அவ்வப்போது தெரிகிறது. இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதல பாதாளத்திற்கு போகப்போவது என்பது நிச்சயம். மகா ஊழல் காங்கிரஸ் கட்சி என்று மக்களிடம் பெயர் வாங்கிவிட்டது. இனி என்ன ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களை காப்பாற்ற வேண்டிய வேலைகளை செய்வது தான் அக்கட்சியின் தலைவர்களுக்கு தலையான வேலையாக இருக்கமுடியும். வாழ்க காங்கிரஸ்.
By ramalingam
3/7/2012 4:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Tuesday, March 6, 2012

தயக்கம் தேவையில்லை!

தயக்கம் தேவையில்லை!


ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைக் கடைசி நேரத்தில் தவிர்த்துவிடுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.  2009-ல் இதேபோன்ற நிலைமையை இலங்கை சந்திக்க நேர்ந்தபோது, இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டது. இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற்று, சிக்கலில் இருந்து தப்பியது. இந்த முறையும் அதேநிலையை இந்தியா மேற்கொள்ளாது என்று உலக நாடுகள் கருதுகின்றன.  இப்படி ஒரு தீர்மானத்தை, போர்க் குற்றங்கள் நிகழ்த்துவதில் எல்லாருக்கும் அண்ணனான அமெரிக்கா கொண்டுவருவதற்குக் காரணம், இலங்கையுடன் சீனா நெருக்கமாகி வருவதன் எதிர்வினைதான். இதில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதும் முன்னமே பேசி முடிவாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அது எத்தகைய நிலைப்பாடு - ஆதரவா? எதிர்ப்பா? புறக்கணிப்பா? என்பதுதான் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது.  அமெரிக்காவும் வேண்டும், அண்டை நாடான இலங்கையில் சீனா நெருங்கிவிடவும் கூடாது என்றால், இந்தியா இத்தீர்மானத்தைப் புறக்கணிப்பதையே விரும்பும் என்று கருதப்படுகிறது.  இவ்வளவு தீவிரமான விவகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுகுறித்த எந்தப் பேச்சும், விழிப்புணர்வும் அல்லது சலசலப்பும் காணப்படவில்லை. கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தைக்கூட இந்தியாவில் பிற மாநிலத்தவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தமிழர்கள் விவகாரமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்தபட்சம் இதை மனித உரிமைப் பிரச்னையாகக்கூட கருதவில்லை என்பதுதான் வேதனையானது.  அதையும்விட வேதனையானது, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மனநிலை! அரசியல் கட்சிகள் அளவில் பேசப்படும் இந்த விவகாரம், தமிழர்கள் அனைவரிடமும் உணர்வுபூர்வமான சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கசப்பான உண்மைக்குக் காரணம், அதிமுக, திமுக என்கிற இரண்டு பெரிய கட்சிகளின் தலைமைகளும் பிரதமருக்குக் கடிதம் எழுதியதுடன் தங்களது கடமையை முடித்துக்கொண்டு விட்டதுதான்.  இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான கடைசிக் கட்டப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள் என்பது பல வகைகளிலும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான், இத்தகைய ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுமத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் முன்பாகவே, இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 47 நாடுகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் இந்தியா கூறியிருப்பதன் சாராம்சம் இதுதான்: "ஒரு தனிப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு, இத்தகைய தீர்மானம் கொண்டுவருவது இந்த சபையின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது.'  மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, சத்யமூர்த்தி பவனில் அளித்த பேட்டியில், இரு தரப்பிலும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறலுக்கான எந்தவிதத் தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறியிருக்கிறார். "இரு தரப்பிலும் மனித உரிமை மீறல்', "எந்தவிதத் தீர்மானத்துக்கும் ஆதரவு' இப்படியெல்லாம் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக மத்திய அரசின் நிலைப்பாடு இருக்கும் என்பதைத்தான் இந்தப் பேட்டி வெளிப்படுத்துகிறது.  கேரளக் கடற்பகுதியில் இரண்டு மீனவர்களை இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள் என்றவுடன் அந்தக் கப்பலை கரைக்கு இழுத்துவந்து நிறுத்தி, காவலர்களைக் கைது செய்து, இத்தாலியின் அமைச்சர்கள், தூதர்கள் என எல்லோரையும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் படியேற வைக்க முடிகிறது. காரணம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகக் கேரளத்தைச் சேர்ந்த ஏ.கே. அந்தோனி இருக்கிறார். கேரளத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சுடப்பட்ட மீனவர்களுக்காகக் குரலெழுப்புகின்றன.  இதேபோல, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக இலங்கை ராணுவத்தினரைக் கடலில் மடக்கிப் பிடித்து, நமது கட்சிகள் ஒத்த குரலில் கோரிக்கை எழுப்பி இருக்குமா? இந்திய சட்டத்தின்படி நீதிபரிபாலனம் செய்ய ஒருநாளாகிலும் முயற்சி செய்திருப்பார்களா?  இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது பெயரளவுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதும்கூட, உலக அரங்கின் நெருக்கடியால்தான். இன்னமும்கூட, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழர் வாழும் மாகாணங்களுக்கு முழு அதிகாரம் தரப்படவில்லை. அனைத்தும் கொழும்பு மேற்பார்வையில்தான் நடைபெறுகிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவும், அதில் வெற்றிபெறவும் இந்தியா மனப்பூர்வமான முயற்சிகளைச் செய்யவில்லை. பெயரளவுக்கு அமைச்சர் கிருஷ்ணாவும் அரசுச் செயலர்களும் பயணம் போய் வருகிறார்கள், அவ்வளவே.  இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்தியா அமைதி காத்தது. அதெல்லாம் போகட்டும், குறைந்தபட்சம் இப்போதாகிலும், உலக அரங்கில் இலங்கையைப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகவாகிலும் வாக்களியுங்கள் என்பதுதான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  அமெரிக்காவுக்கு நம் மீது இருக்கும் அக்கறை, நமது தொப்புள் கொடி உறவு நாடான இந்தியாவுக்கு இல்லையே என்று இலங்கைவாழ் தமிழர்கள் நம்மைச் சபிக்காமல் இருக்க வேண்டுமானால், இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்!

Monday, March 5, 2012

சட்டம் மட்டுமே தீர்வல்ல!


வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதமும் தண்டனையும் பல மடங்காக உயர்த்தப்படவுள்ளது. அபராதத்தை மட்டுமன்றி, தண்டனைக் காலத்தையும் குற்றத்தின் தன்மைக்கேற்ப 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதாக உயர்த்தி இருப்பதும், ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவுக்கேற்ப அபராதம், தண்டனை இரண்டையும் அதிகரித்திருப்பதுதான் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள போக்குவரத்து வாகனச் சட்டத்திருத்தத்தின் சிறப்பு அம்சம். மிகவும் நுட்பமாக யோசித்தோமேயானால், இந்தப் புதிய சட்டத்திருத்தத்துடன் வேறு சில நடைமுறைகளையும் புகுத்தினால் மட்டுமே, இந்தியாவில் விபத்துகளும், சாலை மரணங்களும் குறையும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிட்டது, கார் விலை உயர்ந்துவிட்டது, வாகன எண்ணிக்கை பலப் பல மடங்கு உயர்ந்துவிட்டது, சாலை வரி உயர்ந்துவிட்டது. கணவன், மனைவி, ஒரு குழந்தை என மூன்று பேர் ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிட ரூ.200 தேவை எனும்படி பணத்தின் மதிப்பு குறைந்துவிட்ட நிலையில், இன்னமும் போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்கு வெறும் ரூ.50, ரூ.100 அபராதம் என்று சொன்னால் பொருத்தமாக இல்லைதான். நிச்சயமாக அபராதத் தொகையும் தண்டனையும் அதிகரிக்கப்படுவதுதான் நியாயம். சட்டம் என்ற அளவில் பார்த்தோமேயானால், தற்போது அமலில் உள்ள சட்டத்தின்படியே நடவடிக்கை எடுத்து, ஒரு நபருக்கு சிறைத் தண்டனை அளிக்கவும், அபராதம் (குறைவு என்றாலும்) விதிக்கவும், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் முடியும். ஆனால், இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இதற்கான குற்றப்பதிவை முன்வைக்க வேண்டிய காவல்துறை அதைச் செய்வதில்லை. அவர்கள் ஏன் செய்வதில்லை என்பதற்கு ஓட்டுநர்கள் மீதான கருணையும் காரணம், சில நேர்வுகளில் கையூட்டும் காரணம். ஓட்டுநர்களுக்கு இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பும் காரணம்.இப்போதிருக்கும் சட்டத்தின்படியே போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றாலும், அது நடைமுறையில் சாத்தியப்படாமல் இருப்பதற்குக் காரணம், விபத்து நடந்து, எதிர்த்தரப்புடன் சமரசம் செய்துகொள்ள முடியுமானால், காவல்துறையைச் சமாளித்துவிடலாம் என்கிற பொதுக்கருத்துதான். இதே நிலைமை நீடிக்குமானால், சட்டத்தின்படி அபராதம், தண்டனையை அதிகப்படுத்தினாலும்கூட, அதற்கேற்ப சமரசச் செலவுகளும் அதிகரிக்குமே தவிர, மக்களைப் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வைத்துவிட முடியாது.வெளிநாடுகளில், எல்லா சாலைகளிலும் கணினிமயமாக்கப்பட்ட விடியோக்களால் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன. சாலையோரம் விதிகளை மீறி நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது ஒரு நோட்டீûஸ ஒட்டிவிட்டு காவலர் போய்க்கொண்டே இருக்கிறார். அடுத்த நாள் அந்த வாகனம் அதற்கான நீதிமன்ற வாசலில் வந்து அபராதத்தொகையைச் செலுத்தியாக வேண்டும். அந்த நிலையை இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஏற்படுத்தினால் மட்டுமே இந்தச் சட்டம் பயனுள்ளதாக மாறும். போக்குவரத்துக் காவலரைச் சமாளித்துவிடலாம் என்ற பொதுக்கருத்து உடைந்தால் மட்டுமே சாலை விதிகள் மதிக்கப்படும். கிரிக்கெட்டில் ஒரு மூன்றாவது அம்பயர் இருப்பதைப் போல, போக்குவரத்துக் குற்றங்களிலும் வாகன ஓட்டி, போக்குவரத்துக் காவலர் மட்டுமன்றி ஒரு மூன்றாவது கண்காணிப்பாளராக இத்தகைய விடியோ பதிவுகள் சிறு நகர்களில்கூட அவசியமாகிறது. அவை போக்குவரத்து காவல்துறைக்கு உதவியாக அமையும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக நிறுத்தி வைத்து விசாரித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த நேரத்தில் இந்தச் சாலையில் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிப் பதிவு இருக்கிறது, வந்து அபராதம் செலுத்துங்கள் என்று சொல்லும் அளவுக்குப் போக்குவரத்து காவல்துறை தன்னை தொழில்நுட்ப ரீதியாக மாற்றிக்கொள்ளும்போதுதான் இத்தகைய குற்றங்கள் குறையும். 2010-ம் ஆண்டில் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 3.85 லட்சம் பேர். இந்த விபத்துகள் அதிகம் நடக்கும் நேரம் காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்குள்தான். அதிலும், குறிப்பாக மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள்ளான மூன்று மணிநேரத்தில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. காலை 6-9 மணியில் நடந்த விபத்துகள் எண்ணிக்கை 52,199 என்றால், மாலை 6 - இரவு 9 மணிக்குள் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 69,282. இதற்குக் காரணம், சாலையில் வாகன நெரிசல், வீடு திரும்புகின்ற அவசரம் ஆகியவற்றைச் சொல்லலாம் என்றாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை எந்தச் சாலையிலும் சரியான விளக்குவெளிச்சம் இல்லை என்பதும் முக்கிய காரணம். பல மாநிலங்களில் - தமிழகம் பற்றித் தெரியாது - காவல் துறையினர் போலி ரசீது மூலம் அபராதத் தொகை வசூலிப்பது வரை முறைகேடுகள் நடந்து வருவது அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. காவல்துறைக்கும் அரசுக்கும் கெட்ட பெயர் வாங்கித் தருவது விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதமோ தண்டனையோ அல்ல. ஒவ்வொரு தெரு மூலையிலும் காவல்துறையினர் நின்றுகொண்டு நடத்தும் மாமூல் வசூல் வேட்டைதான். கொண்டுவரப்படும் சட்டம் வலுவானதா, இல்லையா என்பது காவல்துறை எந்த அளவுக்கு அதைப் பொறுப்புடன் அமல்படுத்தப்போகிறது என்பதைப் பொருத்ததே தவிர, வெறும் அபராதத்தின் அளவையும் தண்டனைக் காலத்தையும் பொருத்தது அல்ல.