Wednesday, June 20, 2012

புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள் !!! (பாண்டிச்சேரி)


இந்தியாவின் தெற்கு கடற்கரையில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் புதுச்சேரி. அமைதியான கடற்கரை பகுதிகள், அழகான சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என புதுச்சேரியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்ததால் புதுச்சேரியில் பிரெஞ்சு சாயல் அதிகம். யூனியன் பிரதேசமாக இருந்து வரும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் காரைக்கால், ஆந்திர பகுதியில் உள்ள மாஹே மற்றும் கேரளப்பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பகுதியும் இருந்து வருகிறது. புதுச்சேரியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.

ஆரோவில்:

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

பொட்டானிக்கல் கார்டன்:

புதுச்சேரி புது பஸ்நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அரிக்கமேடு:

பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி.600ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ
பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத்தகுந்தவை.

புதுச்சேரியின் அமைதியான கடற்கரை ரோட்டில் நடந்து சென்று கடல் அழகை ரசிப்பதும், அமைதியை அனுபவிப்பதும் புதிய அனுபவம்தான். வார இறுதி நாட்களில் புதுச்சேரி கடற்கரை ரோட்டில் மக்கள் தலைகளாகத்தான் தென்படும்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு, தங்குமிடங்களைப் பொறுத்தவரை புதுச்சேரியில் ஒரு பிரச்னையே அல்ல. தரமான உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் புதுச்சேரி உள்ளது. அருமையான சாலை வசதி இருக்கிறது. விமான நிலையத்தை பொறுத்த வரை சென்னைதான் அருகில் உள்ள விமானநிலையம் ஆகும்.

0 comments:

Post a Comment