Wednesday, March 7, 2012

மாற்றத்தின் அறிகுறி...

 

முடிவுகள் வெளியாகி இருக்கும் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டதற்குக் காரணம், எதிர்பார்ப்பு முலாயமா, மாயாவதியா என்பதாக இல்லாமல், ராகுல் காந்தியால் காங்கிரஸூக்கு மீண்டும் எழுச்சி ஏற்படுமா இல்லையா என்பதாக இருந்ததுதான். காட்சி ஊடகங்கள் மிகைப்படுத்தி வர்ணித்ததுபோல ஒருவேளை ராகுல் காந்தியின் பிரசாரத்தால் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், அது அகில இந்திய அளவில் காங்கிரஸூக்குப் புத்துணர்ச்சி அளித்து மக்களவைத் தேர்தலுக்கு வழிகோலி இருக்கக் கூடும்.
குஜராத், பிகாரை அடுத்து இப்போது உத்தரப் பிரதேசத்திலும் "ராகுல் மாஜிக்' வேலை செய்யாத நிலையில் மன்மோகன் சிங் அரசு வழக்கம்போல எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும், பிரச்னைகளுக்கும் இடையில் தத்தளித்த வண்ணம் பதவியைப் பற்றிக் கொண்டு திசை தெரியாமல் இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று நம்பலாம். ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 403 இடங்களில் 224 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சியும், மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் 28 இடங்களுடன் காங்கிரஸூம் சட்டப் பேரவையில் இடம் பிடிக்கின்றன. கடந்த சட்டப் பேரவையில் 21 இடங்கள் மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சி, 2009 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களைப் பெற்றதால் இந்தத் தேர்தலில் நூறுக்கும் அதிகமான இடங்களை வென்றுவிடக் கூடும் என்கிற நம்பிக்கை ராகுல் காந்திக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ராகுல் காந்தி மட்டுமல்லாமல், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் என்று நேரு குடும்பமே மேடையேறிப் பொதுக்கூட்ட மேடையைப் பொருள்காட்சி மேடையாக்கியும்கூட வெற்றி கிட்டாமல் போனதுதான் துரதிர்ஷ்டம் - அவர்களுக்கு! பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைக் கூற முடியும். முதலாவதாக, மாயாவதியால் அவர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராகச் செயலாற்ற முடியவில்லை. கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம், எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் "சர்வ சமாஜ்' கட்சியாகத் தனது பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்று அவர் விடுத்த அறைகூவல்தான். பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்), முஸ்லிம்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பலரை பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக்கி 2007-ல் வெற்றி பெற்ற மாயாவதி, சமார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதவ் வகுப்பினரின் ஆட்சியை நிறுவ முற்பட்டாரே தவிர "சர்வ சமாஜ்' ஆட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் சரி, ஜாதவ் அல்லாத பாசி, கோங்கர், வால்மீகி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது ஆட்சியாக மாயாவதியின் ஆட்சியைக் கருதவில்லை. மேலும், மாயாவதி ஒரு மாயா உலகத்தில் வாழ்ந்தபடி ஆட்சி நடத்தினார் என்பது அவர்மீது பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. பத்து அடி உயர மதில்களுக்குள் இருந்துகொண்டு, தனது அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத முதல்வராக மாயாவதி ஆட்சி நடத்தியதாக அவரது கட்சிக்காரர்களே இப்போது குற்றம் கூறுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மட்டுமே தனது ஆலோசகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாகவும் தெரிகிறது. முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை, மக்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்த்தி இருப்பதாகக் கூறிவிட முடியாது. முலாயம் வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துவிடும் என்கிற பயம் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இருந்தாலும், அவரது சமாஜவாதி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதற்கு அவர் மாயாவதியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள், மின்வெட்டு, பரவலான லஞ்ச ஊழல், "தலித்' "தலித்' என்ற கோஷத்துடன் நடக்கும் முறைகேடுகள் இவையெல்லாம் முலாயம்சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை. காங்கிரஸூக்கோ, பாஜகவுக்கோ வாக்களிப்பதன் மூலம் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டு மீண்டும் மாயாவதி ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்பதில் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் குறியாக இருந்தனர் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் வித்தியாசமான நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்ததும் இன்னொரு காரணம். ராகுல் காந்தியைப்போல அந்நியத்தனம் இல்லாமல் மக்களில் ஒருவராகத் தெரிந்த அந்த இளைஞர் சமாஜவாதி கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட உதவினார் என்றும் கூற வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜவாதி கட்சியும், பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் - பாஜக கூட்டணியும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸூம் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. உத்தரகண்டில் 32 இடங்களில் காங்கிரஸூம், 31 இடங்களில் பாஜகவும் வென்று இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய ரீதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இருக்கும். அதனால், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது இயலாது. இனிமேல், தனது நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்திக்கு கூட்டம்தான் கூடுமே தவிர, வாக்குகள் பெற்றுத்தர முடியாது என்பது மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி. எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைமையில் நிலவும் பூசல்கள் மேலும் வலுப்பெறுமானால், காங்கிரஸின் நிலைமை பாஜகவுக்கும் ஏற்படக் கூடும். மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!
கருத்துகள்

ku ku ku .. poo
By jeeva
3/7/2012 7:55:00 AM
ஒரு சினிமால் காரணம் எதுவும் சொல்லாமல் நடிகர் வடிவேலுவை பார்த்து, நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட; நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட என்று கூறினார்கள். எதுக்கு சரிபட்டு வரமாட்டான் என்று கடைசி வரை கூறவே இல்லை. வடிவேலு எதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன் என கேட்டு கேட்டு அழுததுதான் மிச்சம். அதுபோல் நன்கு ஆட்சி நடத்திய மாயாவதியையும் ஆட்சியை விட்டு மக்கள் நீக்கிவிட்டார்கள். மக்கள் ஆப்பை பிடிங்கிய குரங்காக மாறியிருகிறார்கள். இனி வழியை தங்கி கொள்ளவேண்டியதுதான்.
By நாகேஷ் குமார்
3/7/2012 7:17:00 AM
மக்கள் மீண்டும் முலாயம் சிங் ஆட்சியை கொண்டுவந்து விட்டார்கள். இனி போலீஸ் ரவ்டிகளாக மாரபோகிறார்கள் அல்லது ரவடிகளுக்கு உடந்தையாக இருக்க போகிறார்கள். இது உண்மை.
By ரமேஷ்
3/7/2012 7:03:00 AM
மாயாவதி ஆட்சிதான் மக்களுக்கு பிடிக்கவில்லை. ஏன் குண்டர்களின் அட்டகாசம் உள்ளடிக்கிய முலாயம் சிங் கட்சியை தேர்வு செய்தார்கள்? மக்கள் BJP-க்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மக்கள் இன்னும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள். இனி UP குண்டர்களின் அட்காசம் கொண்ட முதல் மாநிலமாக திகழபோகிறது. மக்களே பொறுத்திருந்து பாருங்கள்.
By ராமசாமி
3/7/2012 6:58:00 AM
கடந்த சமாஜவாதி கட்சி முலாயம் சிங் யாதவின் ஆட்சியில், நொய்டாவில் பல சிறுவர்களின் கை கால்கள் சாக்கடையில் கண்டெடுகபட்டது, இப்ப நினைத்தாலும் பகிர் என்கிறது. அது முலாயம் சிங் ஆதரவுடன் வியாபார நோக்கில் செயப்பட்டது என்று முடிவில் தெரியவந்தது. இன்னும் முலாயம் சிங் கட்சி ஆட்சியிலே ஏறவில்லை, நேற்று இரவு முலாயம் சிங் கட்சிகாரர்கள் பத்திரிகைகாரர்களையும் பொது மக்களையும் அடித்து உதைத்தது நேரடியாக பார்க்க நேர்ந்தது. அவர்கள் 50 மேற்பட்ட media camera -களை உடைத்தெறிந்தார்கள். இதை BJP பார்த்து முலாயம் சிங் கட்சி என்றாலே hooliganism -க்கு பேர்போனது என்று NDTV-யில் பேட்டியளித்தது.
By சிங்காரம்
3/7/2012 6:45:00 AM
பாஜக-வும் ஒன்றும் பெரியதாய் சாதித்து விடவில்லை, காங்கிரஸ்-ஐ குறை கூற. உபியில் 51 இலிருந்து 47 ஆகவும், உத்தரகாண்டில் 35 இலிருந்து 31 ஆகவும், பஞ்சாபில் 19 இலிருந்து 12 ஆகவும் அவர்கள் MLA க்களும் குறைந்திருப்பது, தேசிய கட்சிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. மாநிலங்களின் நலனை காக்க பிராந்திய கட்சிகளே எவ்வளவோ மேல் என மக்கள் நினைக்கிறார்கள். எனவே, பாஜகவும் காங்கிரஸ்-இன் இழப்பை எண்ணி புளகாங்கிதம் அடைந்து கொண்டிராமல், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஏன்? என self analysis செய்தால், உருப்படுவார்கள். இல்லையெனில், பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கும் சங்குதான்!
By சோம் தேவ்
3/7/2012 6:37:00 AM
மக்களை ரொம்பத்தான் சீப்பா நினைக்காதீங்க,ரொம்ப காலம் ஏமாத்த முடியாது . ஆளை கண்டோ முகத்தை பார்த்தோ போலியான ஊடகங்களின் விளம்பரத்தை கண்டோ மக்கள் யாரும் ஏமாறுவது இல்லை . இனியாவது வெற்றி பெற்ற கட்சிகள் நேர்மையான ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் .ஜெயித்து விட்டதால் நீங்கள் அகம்பாவம் கொண்டு மக்களை சிறுமையாக எண்ணுவீர்களே ஆயின் கொந்தளித்து உங்களை தூக்கி அடிக்கவும் தயங்க மாட்டார்கள் அப்பாவி மக்கள், எப்பவும் கண்காணிப்பில்தான் இருக்கிறீர்கள் என்பதை எந்த அரசியல்வாதியும் மறந்து விட வேண்டாம்
By saralatharani
3/7/2012 6:31:00 AM
இந்த தேர்தல் ராகுல் ஒரு டம்மி என்பதையும் மக்கள் நேரு காந்தி என்று சொல்லி ஏமாற்றுவதை விரும்பவில்லை என்பதையும்,நேரு, இந்திரா பெரோஸ் காந்தி க்கு கிடைத்த அனுதாபம் சோனியாவுக்கு இல்லை என்பதையும்,போபோர்ஸ்,ஆதர்ஷ்,2G,காமல்வெல்த் ஊழல்களால் நாறிப்போன இந்திரா காங்கிரஸ் அரசாள அனுமதிக்கவில்லை என்பதையும்,வட்ராகுடும்பத்தோடு வந்து எக்சிபிஷன் வைத்தது ரசிக்க வில்லை என்பதையும்,ராய் பரேலி யில் உதைத்த உதையில் நேரு குடும்பத்துக்கு தெள்ள தெளிவாக சொல்லி விட்டனர்.நேரு குடும்பத்துக்கு வெளியே ஒரு நல்ல தலைவராக கிடைத்து அவரிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு சோனியாவும் கூட்டமும் அரசியலை விட்டு ஒழிந்தாலன்றி இந்திரா காங்க்றேசுக்கு தேற வழி இல்லை.ஆயிரந்தான் ஆனாலும் துருவ கரடி உள்ளூர் கரடி ஆகாது.
By கிளிக்காடு
3/7/2012 6:30:00 AM
இச்செய்தில் சொல்ல பட்ட கருத்துகளை வரவேற்கிறேன். ஆனால் சிறு மாற்றங்கள் தேவை. மாயாவதி ஏழ்மை நிலையில் இருந்து, தன் அறிவு நுட்பத்தால், UP-யின் முதல்வராக 5 முறை பதவி வகுத்துள்ளார். மாற்று கட்சிகள் காங்கிரஸ் உட்பட மற்றும் சமூக ஆர்வலர்கள், மாயாவதி தாழ்ப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் துரோகம் இழைத்துவிட்டார் என்று கூக்குரல் போட்டனர். பழைய செய்திகளை புரட்டினால் தெரியும். கடந்த முலாம் சிங்க் ஆட்சியில் குண்டர்களின் அட்டகாசத்தையும் மற்றும் கொலை கொள்ளை ஆகியவைகளை மக்கள் பொருத்துகொள்ளமுடியாமல் தான் மாயாவதி ஆட்சியை ஏற்படுத்தினர். அதேபோல் மக்கள் முன்னேற்றத்திற்கு மாயாவதியும் நல் ஆட்சிதான் தந்தார். அவர் செய்த தவறு, அவர் சிலைகளையும் யானை சிலைகளையும் நிறுவினார் என்பதுதான் குற்ற சாட்டு. ஆனால் ஊழல் கட்சியான காங்கிரஸ், தேர்தல் கமிசன் உதவியுடன் மாயாவதி ஆட்சியை அகட்டி விட்டு, தம் கட்சியை ஏற்படுத்துலாம் என்று திட்டம் போட்டது, அது ஆப்பு அசைத்த குரங்கு போல் காங்கரஸ் ஆனது.
By அகலேஷ்வரன்
3/7/2012 6:28:00 AM
ராகுல் காந்தி என்ன சுதந்திரத்திற்கு பாடுபட்டவரா என்ன அவர் மேல் மக்களுக்கு எப்படி ஒரு ஈர்ப்பு இருக்க முடியும். தவறான அணுகுமுறை. ராஜீவ் காந்திமேல் மக்களுக்கு ஈர்ப்பு இருந்ததற்கு அவர் அம்மா இந்திராகாந்தியின் அகால மரணம் தான் கரணம். மற்றபடி தனிப்பட்ட முறையில் ராஜீவ் மேல் மக்களுக்கு ஈர்ப்பு என்பது இல்லை. மக்களை இனி வாரிசுகளை காட்டி ஏமாற்ற முடியாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியின் லட்சணம் ஊடகங்கள் முலமாக மக்களுக்கு அவ்வப்போது தெரிகிறது. இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதல பாதாளத்திற்கு போகப்போவது என்பது நிச்சயம். மகா ஊழல் காங்கிரஸ் கட்சி என்று மக்களிடம் பெயர் வாங்கிவிட்டது. இனி என்ன ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களை காப்பாற்ற வேண்டிய வேலைகளை செய்வது தான் அக்கட்சியின் தலைவர்களுக்கு தலையான வேலையாக இருக்கமுடியும். வாழ்க காங்கிரஸ்.
By ramalingam
3/7/2012 4:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

0 comments:

Post a Comment