Tuesday, April 30, 2013

புரூஸ்லி ரகசியம் !

 
 

உங்கள் மனம் தீர்மானிப்பதை உடல் அப்படியே செய்யுமானால், அதை உடல் – மன ஒருங்கிணைப்பின் உச்சம் எனலாம்.

ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? உடலை வளைத்து, நெளித்து, வில்லென விறைத்து, அம்பெனச் சீறி என அவர்கள் காற்றில் கவிதை எழுதுவது ஓர் அதிசயம் போலத் தோன்றும், நம்பவே முடியாது. அது ஒரு மாயாஜாலம் போலத்தான் இருக்கும். அவர்கள் சில நேரங்களில் கண்களை மூடிக்கொண்டும் வித்தை காட்டுவர். ஆனால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை ஒரு ஜிம்னாஸ்டிக் வீரர் துல்லியமாய் அறிவார். அவர் தனது உடலை தரையின் எந்தப் பகுதியில் எந்தப் புள்ளியில் ஊன்ற வேண்டும் என நினைக்கிறாரோ மிகச் சரியாக அதே புள்ளியில் வைக்கிறார். அவர் மனம் நினைப்பதை உடல் அப்படியே சிறிதும் மாற்றமில்லாமல்
செய்கிறது.

உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது.

மனிதனின் உடல், மன ஒருங்கிணைப்பைக் கொண்டு நம்ப முடியாத அற்புதங்களைச் செய்ய முடியும். மேஜிக் கலைஞர் என்ன செய்கிறார் என்று கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கண்களுக்கு முன்பாகவே சிலவற்றை மாயமாய் மறையச் செய்கிறார். ஆனால் உங்களால் அதைப் பார்க்க முடியவில்லை. அதேபோல உடல், மன ஒருங்கிணைப்பு அதன் உச்சகட்ட தன்மையில் செயல்பட்டால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அருகிலிருப்பவரே தெரிந்துகொள்ள முடியாது. இது ஜோக்கல்ல, அப்படியிருக்க முடியும்!

உங்களுக்குள் நடப்பதை அருகிலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது. அப்படித்தான் இருக்க வேண்டும். உங்களுக்குள் நடப்பதை அருகில் இருப்பவர் தெரிந்துகொண்டால், நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் உங்களிடம் காரியம் சாதிப்பது எப்படி என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். உங்களுக்குள் நடப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பது மிகமிக முக்கியமானது. அதற்கு உடல், மன ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.

உடல், மன ஒருங்கிணைப்பிற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் புரூஸ்லீ. அவர் செய்த விஷயங்கள் நம்ப முடியாதவை. உங்கள் உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தால், உங்கள் தலையில் அடிபடாமல் இலாவகமாய் நாணயத்தை மட்டும் தட்டிவிடுவார். தலை என்ன? தலைமுடிகூட அசையாது. ஆனால் அந்தத் திறமை அவருக்கு சும்மா வரவில்லை. புரூஸ்லீ சிறிது ஊனமுற்றவர், தெரியுமா? அவரது வலதுகால், இடது காலை விட 1½ அங்குலம் உயரம் குறைவு. சின்ன வயதில் காலைச் சாய்த்துதான் நடப்பார். ஆனால் தொடர்ந்த பயிற்சிகளால், அவர் மிகக் கச்சிதமான மனித உயிராகப் பரிணமித்தார். குறைந்தபட்சம் உடல்ரீதியாகவாவது தன் உடலை அப்படி உருவாக்கிக்கொண்டார்.

ஆறேழு ஆண்டு காலப் பயிற்சிதான் என்றாலும் மிகவும் ஒருமுனைப்புடன் ஒரு நாளின் 24 மணி நேரமும் அதற்கான தீவிரத்துடன் நடந்த பயிற்சியால் சாதித்தார். தனக்கு என்ன தேவையோ அதை நோக்கி அவர் கொண்டிருந்த தீவிரம் அளப்பரியது, அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது. அப்படித்தான் இருக்கவேண்டும். யோகப் பயிற்சிகள் உடல், மன ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்!

Chrysanth WebStory Published by WebStory

ஒருவர் மீது இருவர் சாய்ந்து – திரை விமர்சனம்

 

fa714b5c-e75f-4a1d-9a6f-e665c8988ac7_S_secvpf.gif

நண்பனுடன் வெட்டியாக திரியும் லகுபரனுக்கு டி.வியில் வானிலை அறிவிப்பு சொல்லும் சுவாதி மேல் பிரியம். முதலில் இருவருக்கும் மோதல் மூண்டு பிறகு காதல் வயப்படுகின்றனர்.

தன்னுடன் சிறுவயத்தில் இருந்து ஒன்றாக படித்த தோழியும், நானும் ஒருவனையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம். இந்த நிபந்தனையை ஏற்றால் திருமணத்துக்கு தயார் என்று சுவாதி நிபந்தனை வைக்கிறார்.

இதை கேட்டு லகுபரன் அதிர்ச்சியாகிறார். நிபந்தனையை ஏற்க மறுத்து காதலியை ஒதுக்கி விட்டு ஐதராபாத்தில் அக்கா வீட்டில் போய் தங்குகிறார். அங்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சானியா தாரா அறிமுகமாகிறார். இருவருக்கும் காதல் துளிர்த்து திருமணத்துக்கு தயாராகிறார்கள்.

அப்போது போலீசுடன் வந்து திருமணத்தை தடுக்கிறார் சுவாதி. யாரை லகுபரன் மணந்தார்? என்பது கிளைமாக்ஸ்…

பழனி முருகன் கோவிலில் காவி கட்டி திரியும் லகுபரனை பாக்யராஜ் சந்தித்து அவரது ‘பிளாஷ் பேக்’-கை கேட்பதுபோல் படம் துவங்குகிறது. மழை வரும் என டி.வி.யில் வானிலை அறிக்கை சொல்லும் சுவாதியிடம் குடையுடன் போய் இன்று மழை வரவில்லை. உங்கள் பேச்சை கேட்டு குடை வாங்கி காசு வீண். அந்த பணத்தை கொடுங்கள் என்று கலாய்த்து காசு பிடுங்கும் லகுபரன் சுவாரஸ்யபடுத்துகிறார்.

சுவாதியின் கைசூப்பும் பழக்கத்தை நீங்கள் வெறும் பிள்ளையா அல்லது கைப்பிள்ளையா என்று டி.வி.க்கு போன் போட்டு கிண்டலடிப்பது தமாஷ்… சுவாதி அழகாய் பளிச்சிடுகிறார்.

சானியா தாரா காதலும் கவர்ச்சியுமாய் ஈர்க்கிறார். பாக்கியராஜும், விசுவும் கிளைமாக்சில் வந்து சிக்கலான முடிச்சை அவிழ்த்து கைதட்ட வைக்கின்றனர்.

கின்னஸ் சாதனைக்காக பின்னால் நடக்கும் சிங்கம் புலி சிரிக்க வைக்கிறார். ஒருவரை மணக்க துடிக்கும் இரு பெண்கள் என்ற வித்தியாசமான கதை கருவில் காட்சிகளை கலகலப்பும், விறுவிறுப்புமாக நகர்த்துகிறார் இயக்குனர் பாலசேகரன். கதைக்குள் இன்னும் ஜீவன் ஏற்றி இருக்கலாம். ஹரிகரன் இசையும், விஜய கோபால் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

மொத்தத்தில் ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ கொண்டாட்டம்.

Chrysanth WebStory Published by WebStory

நான் ராஜாவாகப் போகிறேன் – திரை விமர்சனம்

 

588d9c04-3bd1-4204-ab80-a7c4519a21c8_S_secvpf.gif

சென்னையில் சமூக சேவகர் மணிவண்ணனுக்கு உதவிக்கரமாக இருக்கிறார் சட்டக்கல்லூரி மாணவி சாந்தினி. ஒருகட்டத்தில் மணிவண்ணன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை தற்கொலையாக மாற்றப்படுகிறது. ஆனால், இது கொலை என்பதை நிரூபிப்பதற்காக சாந்தினி அதற்குண்டான வேலைகளில் களமிறங்குகிறார்.

இதனைக் கண்டறியும் கொலைக் கும்பல் சாந்தினியை தீர்த்துக்கட்ட நினைக்கிறது. இந்நிலையில், சாந்தினியை காதலிக்கும் நகுல் சாந்தினியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இருவரையும் தீர்த்துக்கட்ட அவர்களை துரத்துகிறது அந்த கொலைக்கார கும்பல்.

மறுமுனையில், இமாச்சலப் பிரதேசத்தில் தன் தாய் சீதா மற்றும் மாமா வாசு விகரமின் ஆதரவோடு செல்லப்பிள்ளையாக வளர்ந்து வருகிறார் ஜீவா எனும் நகுல். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக அங்குள்ள மிலிட்டரி கேம்பிற்குள் சென்றுவிடுகிறார். அதனால் அவருக்கு அங்கு சிறு தண்டனை கொடுக்கப்படுகிறது. அப்போது நகுலைப் பார்க்கும் ஒரு இராணுவ அதிகாரி சென்னையில் தன்னுடன் படித்த நண்பனைப் போலவே ஜீவா எனும் நகுல் இருப்பதை கண்டு அவனிடம் சொல்கிறார். அவர் மூலமாக சென்னையில் வசிக்கும் ராஜா என்ற நகுலைப் பற்றிய முழு விபரத்தையும் அறிகிறான் ஜீவா. மேலும், ராஜா நகுலை ஒருதலையாக காதலித்த அவனி மோடியைப் பற்றிய தகவலையும் அவனுக்கு கூறுகிறார்.

தன்னைப் போலவே இன்னொருவர் இருப்பதை அறிந்துகொண்ட ஜீவா எனும் நகுல், அவனைப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறான். ஒருகட்டத்தில் தன்னுடைய தாய் மற்றும் மாமாவிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு பயணமாகிறார். போகும் வழியில் அவனி மோடியைச் சந்திக்கிறார். அவரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு வருகிறார்.

சென்னைக்கு வரும் ஜீவா நகுல், சென்னையில் ராஜா நகுலை சந்தித்தாரா? கொலை கும்பலிடம் இருந்து சாந்தினியை காப்பாற்றி ராஜா நகுல் சாந்தினியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நகுல் ஜீவா-ராஜா என இருவேறு கதாபாத்திரங்களில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாக வெகுளித்தனம் காட்டுவதிலும், கிக்-பாக்ஸிங்-ல் மிரட்டுவதுமாக ரசிக்க வைக்கிறார்.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். சாந்தினி ஹோம்லி என்றால், அவனி மோடி கிளாமரில் கலக்கியிருக்கிறார். நடிப்பிலும் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். மணிவண்ணன், தூங்காநகரம் இயக்குனர் கௌரவ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், சுரேஷ், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. எல்லோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, சமூக சேவகராக வரும் மணிவண்ணனின் கெட்டப்பும், செயற்கை விதைகளால் மனித இனத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை எடுத்துக்கூறும் பேச்சும் பிரமாதம்.

புதுமுக இயக்குனர் பிருத்வி ராஜ்குமார் படம் பார்ப்பவர்களுக்கு நகுல் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இறுதியில் ஜீவா-ராஜா ஆகிய இருவரும் ஒருவரே என முடித்திருப்பது சுவாரஸ்யம்.

ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. எரிச்சலூட்டும் இடங்களில் இவருடைய பாடல்கள் காதுகளுக்கு இனிமையை கொடுத்திருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவு, வெற்றிமாறனின் வசனம், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றன.

செயற்கை விதைகளை இறக்குமதி செய்தால் மண்வளம் நாசமாகப் போவதைவிட எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பதை விளக்கும் நல்ல படமாக இருந்தாலும், திரைக்கதையில் இயக்குனர் சொதப்பி விட்டார். மேலும், இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி என்ற பெயரில் படம்பிடித்து காட்டியிருப்பது எரிச்சலைத் தூண்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ ராஜாவாக்க முயன்றிருக்கிறார்கள்.

Chrysanth WebStory Published by WebStory

Wednesday, April 24, 2013

கௌரவம்- திரை விமர்சனம்

23-gouravam-review5-600
நடிகர்கள்: சிரீஷ், யாமி கவுதம், பிரகாஷ்ராஜ், குமரவேல்
இசை: எஸ்எஸ் தமன்
ஒளிப்பதிவு: ப்ரீதா
தயாரிப்பு: பிரகாஷ் ராஜ்
இயக்கம்: ராதா மோகன்

படிப்பு, நாகரீகம், விஞ்ஞானம் என அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதிய கட்டமைப்பு, தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை.

இன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்க முடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதீய கட்டுப்பாடுகள், தெருவோர டீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை… இதையெல்லாம் முதல் முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த ‘கௌரவ’த்தில்தான்!

gouravam review
கௌரவம் படங்கள்
குடும்ப கவுரவம் என்ற பெயரில், தன் சாதி கவுரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.

தன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் உடன்படித்த நண்பனின் கிராமத்தைப் பார்க்கிறார் ஹீரோ சிரீஷ். நண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போதுதான் அவன் உயர்சாதி பெண்ணை காதலித்து, ஊரைவிட்டே ஒடிப்போனதாகவும், அதன் பிறகு அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள். நண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

யாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளை இந்தப் படம் மூலம் சாட முயன்றுள்ள இயக்குநர் ராதாமோகன், அதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார் இந்தப் படத்தில் என்பதையும் சொல்லாமலிருக்க முடியாது.

ஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப் போகிறது. ஊர் பெரிய மனிதர் பிரகாஷ் ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்த குடும்பத்தின் சாதி கவுரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது. அதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ்.

யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில் மனநிலை பிறழ்ந்த சிறுவனைக் காட்டும்போதே, அவன்தான் இந்தக் கதையின் முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.

பாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்த குணம் பொதுவானதுதானே!

Gouravam Review

ஹீரோ சிரீஷுக்கு நடிப்பு, உடல்மொழி என எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தேர்வுமல்ல. தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை. ஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின. நாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே!

நாசரை வீணடித்திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வரும் பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிபவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கம்போல குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் பரவாயில்லை எனும் அளவுக்குதான் உள்ளன. ஆனால் விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் ‘நாம அடிச்சா ரத்தம் வராதாடா’ என்று குமரவேல் கொந்தளிக்கும் காட்சியில், வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும், அந்த வலியை உணர வைக்கிறது.

ஒரு கிராமம் கிடக்கு.. பச்சையுடுத்திய வயலுக.. அச்சமுடுத்திய பயலுக வாழ… என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன.

தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை. சமூகத்தில் ஒரு பார்வையாளனாக நிற்கும் யாரும் சொல்லலாம். அப்படியொருவர்தான் ராதா மோகன்.

நல்ல முயற்சி.. முழுமையாக இல்லையே என்ற ஆதங்கத்துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது!

Chrysanth WebStory Published by WebStory

Tuesday, April 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல் !

 
 

குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.

எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

இப்படித்தான் குன்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!

Chrysanth WebStory Published by WebStory

Saturday, April 13, 2013

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்

 
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
Chrysanth WebStory Published by WebStory

Tuesday, April 9, 2013

கல்லணை ( Tiruchirapalli (Trichy), India )


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி.


via - Aatika Ashreen
கல்லணை ( Tiruchirapalli (Trichy), India )<br /> <br /> பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .<br /> நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.<br /> <br /> நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.<br /> <br /> ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .<br /> <br /> உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி.<br /> <br /> <br /> via - Aatika Ashreen
Chrysanth WebStory Published by WebStory