நண்பனுடன் வெட்டியாக திரியும் லகுபரனுக்கு டி.வியில் வானிலை அறிவிப்பு சொல்லும் சுவாதி மேல் பிரியம். முதலில் இருவருக்கும் மோதல் மூண்டு பிறகு காதல் வயப்படுகின்றனர்.
தன்னுடன் சிறுவயத்தில் இருந்து ஒன்றாக படித்த தோழியும், நானும் ஒருவனையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம். இந்த நிபந்தனையை ஏற்றால் திருமணத்துக்கு தயார் என்று சுவாதி நிபந்தனை வைக்கிறார்.
இதை கேட்டு லகுபரன் அதிர்ச்சியாகிறார். நிபந்தனையை ஏற்க மறுத்து காதலியை ஒதுக்கி விட்டு ஐதராபாத்தில் அக்கா வீட்டில் போய் தங்குகிறார். அங்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சானியா தாரா அறிமுகமாகிறார். இருவருக்கும் காதல் துளிர்த்து திருமணத்துக்கு தயாராகிறார்கள்.
அப்போது போலீசுடன் வந்து திருமணத்தை தடுக்கிறார் சுவாதி. யாரை லகுபரன் மணந்தார்? என்பது கிளைமாக்ஸ்…
பழனி முருகன் கோவிலில் காவி கட்டி திரியும் லகுபரனை பாக்யராஜ் சந்தித்து அவரது ‘பிளாஷ் பேக்’-கை கேட்பதுபோல் படம் துவங்குகிறது. மழை வரும் என டி.வி.யில் வானிலை அறிக்கை சொல்லும் சுவாதியிடம் குடையுடன் போய் இன்று மழை வரவில்லை. உங்கள் பேச்சை கேட்டு குடை வாங்கி காசு வீண். அந்த பணத்தை கொடுங்கள் என்று கலாய்த்து காசு பிடுங்கும் லகுபரன் சுவாரஸ்யபடுத்துகிறார்.
சுவாதியின் கைசூப்பும் பழக்கத்தை நீங்கள் வெறும் பிள்ளையா அல்லது கைப்பிள்ளையா என்று டி.வி.க்கு போன் போட்டு கிண்டலடிப்பது தமாஷ்… சுவாதி அழகாய் பளிச்சிடுகிறார்.
சானியா தாரா காதலும் கவர்ச்சியுமாய் ஈர்க்கிறார். பாக்கியராஜும், விசுவும் கிளைமாக்சில் வந்து சிக்கலான முடிச்சை அவிழ்த்து கைதட்ட வைக்கின்றனர்.
கின்னஸ் சாதனைக்காக பின்னால் நடக்கும் சிங்கம் புலி சிரிக்க வைக்கிறார். ஒருவரை மணக்க துடிக்கும் இரு பெண்கள் என்ற வித்தியாசமான கதை கருவில் காட்சிகளை கலகலப்பும், விறுவிறுப்புமாக நகர்த்துகிறார் இயக்குனர் பாலசேகரன். கதைக்குள் இன்னும் ஜீவன் ஏற்றி இருக்கலாம். ஹரிகரன் இசையும், விஜய கோபால் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
மொத்தத்தில் ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ கொண்டாட்டம்.
0 comments:
Post a Comment