Tuesday, April 30, 2013

புரூஸ்லி ரகசியம் !

 
 

உங்கள் மனம் தீர்மானிப்பதை உடல் அப்படியே செய்யுமானால், அதை உடல் – மன ஒருங்கிணைப்பின் உச்சம் எனலாம்.

ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? உடலை வளைத்து, நெளித்து, வில்லென விறைத்து, அம்பெனச் சீறி என அவர்கள் காற்றில் கவிதை எழுதுவது ஓர் அதிசயம் போலத் தோன்றும், நம்பவே முடியாது. அது ஒரு மாயாஜாலம் போலத்தான் இருக்கும். அவர்கள் சில நேரங்களில் கண்களை மூடிக்கொண்டும் வித்தை காட்டுவர். ஆனால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை ஒரு ஜிம்னாஸ்டிக் வீரர் துல்லியமாய் அறிவார். அவர் தனது உடலை தரையின் எந்தப் பகுதியில் எந்தப் புள்ளியில் ஊன்ற வேண்டும் என நினைக்கிறாரோ மிகச் சரியாக அதே புள்ளியில் வைக்கிறார். அவர் மனம் நினைப்பதை உடல் அப்படியே சிறிதும் மாற்றமில்லாமல்
செய்கிறது.

உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது.

மனிதனின் உடல், மன ஒருங்கிணைப்பைக் கொண்டு நம்ப முடியாத அற்புதங்களைச் செய்ய முடியும். மேஜிக் கலைஞர் என்ன செய்கிறார் என்று கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கண்களுக்கு முன்பாகவே சிலவற்றை மாயமாய் மறையச் செய்கிறார். ஆனால் உங்களால் அதைப் பார்க்க முடியவில்லை. அதேபோல உடல், மன ஒருங்கிணைப்பு அதன் உச்சகட்ட தன்மையில் செயல்பட்டால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அருகிலிருப்பவரே தெரிந்துகொள்ள முடியாது. இது ஜோக்கல்ல, அப்படியிருக்க முடியும்!

உங்களுக்குள் நடப்பதை அருகிலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது. அப்படித்தான் இருக்க வேண்டும். உங்களுக்குள் நடப்பதை அருகில் இருப்பவர் தெரிந்துகொண்டால், நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் உங்களிடம் காரியம் சாதிப்பது எப்படி என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். உங்களுக்குள் நடப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பது மிகமிக முக்கியமானது. அதற்கு உடல், மன ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.

உடல், மன ஒருங்கிணைப்பிற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் புரூஸ்லீ. அவர் செய்த விஷயங்கள் நம்ப முடியாதவை. உங்கள் உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தால், உங்கள் தலையில் அடிபடாமல் இலாவகமாய் நாணயத்தை மட்டும் தட்டிவிடுவார். தலை என்ன? தலைமுடிகூட அசையாது. ஆனால் அந்தத் திறமை அவருக்கு சும்மா வரவில்லை. புரூஸ்லீ சிறிது ஊனமுற்றவர், தெரியுமா? அவரது வலதுகால், இடது காலை விட 1½ அங்குலம் உயரம் குறைவு. சின்ன வயதில் காலைச் சாய்த்துதான் நடப்பார். ஆனால் தொடர்ந்த பயிற்சிகளால், அவர் மிகக் கச்சிதமான மனித உயிராகப் பரிணமித்தார். குறைந்தபட்சம் உடல்ரீதியாகவாவது தன் உடலை அப்படி உருவாக்கிக்கொண்டார்.

ஆறேழு ஆண்டு காலப் பயிற்சிதான் என்றாலும் மிகவும் ஒருமுனைப்புடன் ஒரு நாளின் 24 மணி நேரமும் அதற்கான தீவிரத்துடன் நடந்த பயிற்சியால் சாதித்தார். தனக்கு என்ன தேவையோ அதை நோக்கி அவர் கொண்டிருந்த தீவிரம் அளப்பரியது, அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது. அப்படித்தான் இருக்கவேண்டும். யோகப் பயிற்சிகள் உடல், மன ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்!

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment