Saturday, September 29, 2012

கிரஹப்பிரவேசம் எதற்காக?


இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.
இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.
இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர். எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.

கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.
அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.

நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும். அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.

எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.

மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.

தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.

அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.

ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.
கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!

ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.

நீங்கள் உங்களுடைய நல்வாழ்வை நோக்கிச் செல்லவில்லை. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

0 comments:

Post a Comment