Wednesday, September 5, 2012

The Shawshank Redemption (1994)


 
சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட ஒரு வயதான  உறவினரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கிருந்த என் டாக்டர் நண்பரிடம் நிலைமையை விசாரித்தபோது, அவர் சொன்னது : “பேஷண்ட்டுக்கு உயிர் வாழணுங்கிற ஆசையும் பிழைப்போம்ங்கிற நம்பிக்கையும் இருக்கிறவரை தான் நாங்க ட்ரீட்மெண்ட் செஞ்சு காப்பாத்த முடியும். அவங்க நம்பிக்கை இழந்தப்புறமோ அல்லது இனிமே வாழ்ந்து என்ன செய்யப்போறோம்னோ முடிவு பண்ணிட்டா, எந்த மருந்தாலயும் அவங்களைக் காப்பாத்த முடியாது. இவரும் அந்தக் கேஸ் தான்..இனிமே ஒன்னும் செய்ய முடியாது”
 
மனித வாழ்வின் முதுகெலும்பாக விளங்குவது நம்பிக்கை தான். பரிட்சையில் பெயில் ஆவதில் ஆரம்பித்து, காதல் தோல்வி, திருமண வாழ்வில் தோல்வி, பிள்ளைகளால் புறக்கணிப்பு, அலுவலகத்தில் உருவாகும் மன அழுத்தம் என நம் நம்பிக்கையை சிதறடிக்கும் விஷயங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. சிலர் இவற்றுள் ஏதேனும் ஒன்று நடந்தாலே, விரக்தியின் உச்சத்திற்குப் போய்விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, ஒரே நேரத்தில் ஒருவனுக்கு கீழ்க்கண்ட துன்பங்கள் நேர்ந்தால்...
 
* மனைவி வேறொருவனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால்..
* அதனால் அவளைக் கொலை செய்ய நினைத்து, குற்றவாளி ஆனால்..
* அதனால் தான் பார்த்துவந்த நல்ல வேளையும், சமூகத்தில் இருந்த மரியாதையும் போனால்
* செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டால்..
* ஜெயிலிலும் ஹோமோக்களால் ரேப் செய்யப்பட்டால்..
 
’போதுமடா சாமீ’ என்று தோன்றுகிறது அல்லவா? இதற்குப் பதிலாக மரண தண்டனையே கொடுத்திருக்கலாமே என்றோ, ஒரு பிஸ்டல் கிடைத்தால் டுமீலிக்கொண்டு சாகலாம் என்றோ தோன்றுகிறது அல்லவா? ஆனால் நம் கதாநாயகனான ஆன்டி, இத்தனை துன்பத்திலும் எப்படி நம்பிக்கை இழக்காமல், மீண்டு வந்து புதிய வாழ்வை ஆரம்பிக்கிறான் என்பதே The Shawshank Redemption படத்தின் கதை.
 
ஸ்டீபன் கிங்-ன் Rita Hayworth and Shawshank Redemption நாவலைத் தழுவி, ஃப்ரன்க் டரபொண்ட்டினால் படைக்கப்பட அற்புதமான சினிமாவே The Shawshank Redemption. கொஞ்சம் அசந்தாலும் மெகா சீரியல் எஃபக்ட் வந்துவிடும் கதையைத் தைரியமாக கையில் எடுத்து, கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாத திரைக்கதையால் நம்மை வசீகரித்துவிடுகிறார் ஃப்ரான்க். பொதுவாகவே சுவாரஸ்யமான திரைக்கதைக்கென்று சினிமாக்களில் சில மசாலா ஃபார்முலாக்கள் உண்டு. கவர்ச்சியான கதாநாயகி, கார் சேஸிங் காட்சிகள், அசரவைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல், நீட்டான நேர்க்கோட்டுக் கதை சொல்லும் உத்தியில் இதை எடுத்துள்ளார் ஃப்ரான்க்.
 
குறிப்பாக படத்தில் பெண்களே கிடையாது எனலாம். ஒரு நிமிட நேரம் மட்டுமே ஆன்டியின் மனைவி கேரக்டர் படத்தில் வருகிறது. முழுக்க இது ஆண்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதிலிருந்தே இது ஒரு சாதாரணப்படமல்ல என்று புரிந்துகொள்ளலாம்(!). ’மனைவியின் கள்ளக்காதல்-கொல்ல நினைக்கும் கணவன் -கொலை-கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்படுதல்’ என வழக்கமாக குறைந்தது அரைமணி நேரத்தில் சொல்லப்படும் சம்வங்கள், இந்தப் படத்தில் பத்தே நிமிடத்தில் முடிந்து, மெயின் கதைக்களமான Shashank ஜெயிலுக்கு படம் நகர்ந்து விடுகிறது.
 
ஜெயிலுக்கு வரும் ஆன்டி, எந்தவிதமான ரியாக்சனும் காட்டாமல், யாருடனும் அதிகம் பேசாமல் இருக்கின்றான். ஆனால் கவலையுடன் அல்ல..சுத்தமான வெள்ளைக்காகிதம் போல, மேகம் போல ஜெயிலில் வாழ்கிறான். அங்கு முப்பது வருடங்களாக கைதியாக வாழும் ரெட், கைதிகளுக்குத் தேவையான பொருட்களை வெளியிலிருந்து தருவித்துத் தருவதில் கில்லாடி. அந்த ரெட்டின் பார்வையிலேயே படம் நகர்கிறது. ரெட் பற்றி அறிந்து, அவரிடம் பழகும் ஆன்டி சிறிய சிற்பம் செதுக்க உதவும் மிகச்சிறிய உளியை ரெட் மூலம் வாங்கிக்கொள்கிறான்.
 
ஆன்டி ஒரு பேங்க்கர் என்பதால், ஜெயிலின் சீஃப் வார்டன் டாக்ஸிலிருந்து தப்பிக்க உதவுகிறான். அதன்மூலம், ஜெயில் வார்டன் சாமுவேல் நார்டனுக்கும் அக்கவுண்ட்ஸ்களில் உதவ ஆரம்பிக்கிறான். கூடவே, சாமுவேல் ஜெயிலில் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை, இல்லாத ஒரு கேரக்டரின் பெயரில் சேமிக்க, அதாவது மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்ய உதவுகிறான். இடையில் ஆன்டியின் மனைவியைக் கொன்ற கொலைகாரன் வேறொருவன் என்று தெரிய வர, வார்டனின் உதவியை நாடுகிறான். ஆனால் ஆன்டி அவருக்கு தேவை என்பதால், ஆன்டி கடுமையாக ஒடுக்கப்படுகிறான். 
 
இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமன்றது போல் தோன்றும், ஆனால் சுவாரஸ்யமான டைரியைப் படிக்கும் உணர்வைத் தரும் திரைக்கதை, கிளைமாக்ஸில் தருவது இன்ப அதிர்ச்சி!
 
படத்தினை சுவாரஸ்யமானதாக ஆக்குவது வித்தியாசமான, எதிரெதிர் கேரக்டர்கள் தான்..
வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்ட நிலையில், வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்துவிட்டு நிற்கும் ரெட், என்ன  நடந்தாலும் நம்பிக்கை இழக்காமல், தாமரை இலைத் தண்ணீராக வாழும் ஆன்டி, வெளியில் பைபிள்மேல் நம்பிக்கையுள்ள ஆன்மீகவாதியாக, யோக்கியராகவும் உள்ளுக்குள்ளே அயோக்கியனாகவும் வாழும் வார்டன், 50 வருடத்தை சிறையிலேயே கழித்துவிட்டு, வெளியுலகில் வாழ முடியாது தவிக்கும் லைப்ரரியன் என அனைத்துக் கேரக்டருமே நம்மைக் கவர்கின்றார்கள்.
 
படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், வசனம். ரெட்டின் பார்வையில் நகர்வதாக அமைக்கப்பட்டுள்ள படத்தில், நம்பிக்கையைப் பற்றி ரெட்டும் ஆன்டியும் பேசும் இடங்களும், ரிலீஸ் ஆன லைப்ரரியன் பேசும் ‘இந்த உலகமே வேகமாக இயங்கிறது” எனும் வசனமும் அருமையானவை. 
 
டாம் ராபின்ஸ் ஆன்டியாக நடித்திருக்கிறார். இயல்பாகவே கொஞ்சம் அம்மாஞ்சித்தனம் நிறைந்த முகம் என்பதால், அந்த கேரக்டருக்கு சரியாகப் பொருந்திப்போகிறார். ரெட் ஆக வரும் மார்கன் ஃப்ரீமேன் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பொதுவாகவே மார்கன் நடித்த படங்கள் என்றாலே நல்ல படங்களாகத்தான் இருக்கும். இது அவரது படங்களில் பெஸ்ட் என்று சொல்லலாம். படம் முழுவதுமே இவர்கள் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது.
 
படத்தின் கருவிற்கு ஏற்றபடியே டார்க் ப்ரௌன் கலர் டோனில் ஒளிப்பதிவு செய்துள்ளார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரோகர் டீக்கின்ஸ்.தாமஸ் நியூமேனின் இசையும் அருமை. ரிச்சர்ட் ஃப்ரான்சிஸ் மற்ரும் ப்ரூஸின் எடிட்டிங் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை அசத்திவிடுகிறது. ‘ஆன்டியின் மனைவியின் கள்ளக்காதல் - வெளியே காரில் துப்பாக்கியுடன் காத்திருக்கும் ஆண்டி-கோர்ட் சீன்’ என மூன்றையும் சரியாக மிக்ஸ் செய்து, படம் பற்றிய நல்ல அபிப்ராயத்தை முதலிலேயே உருவாக்கிவிடுகிறார்கள்.
 
ஆனால் இவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், ரிலீஸ் ஆனபோது படத்திற்கு பெரிய வரவேற்பில்லை. இப்போதும் இந்தப் படத்தின் மொத்த வசூலே 28 மில்லியன் டாலர்கள் தான். (பட பட்ஜெட் 25 மில்லியன் டாலர்கள்!). ஆஸ்கார் போன்ற பெரிய விருதுகள் எதுவும் இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை என்பது மற்றொரு சோகமான செய்தி. பின்னர் டிவிடியாக படம் வெளியான பிறகே, மவுத் டாக் மூலமே படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது எந்த மூவி லிஸ்ட்டிங்கைப் பார்த்தாலும், இந்தப் படம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். 
 
எப்போதாவது உங்களுக்கு மனக்கவலையாக இருந்தால், என்னடா வாழ்க்கை இது என்று சலிப்புத் தட்டினால், இந்தப் படத்தைப் பாருங்கள். அனைவரின் மூவி கலெக்சனிலும் இடம்பெற வேண்டிய அற்புதமான படம் ‘The Shawshank Redemption’.

0 comments:

Post a Comment