படத்தோட கதை என்னனா ...
ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் சச்சின். டி.வி நிருபராக சாதிக்க வேண்டும் என்பது கனவு. முதல்நாளே முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜை பேட்டி எடுக்கும் வாய்ப்பு. நண்பனுடன் பைக்கில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள். யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலை. ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.
தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார். சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூருக்கு 170 கி.மீட்டர். அதை ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டும். நெரிசலான போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலையில் சீறும் வாகனங்கள். இதைத்தாண்டி சவாலை எதிர்கொள்கிறது, போலீஸ் கமிஷனர் சரத்குமார் தலைமையிலான டீம். இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற போலீசார் அனைவரும் பின்வாங்கும்போது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.
அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில், காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’
படத்துல எனக்கு பிடித்த சில ....
சேரன்டிராபிக் கான்ஸ்டபிள் சேரனின் வாழ்க்கை அழுத்தமானது. லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பிறகு பணியில் சேரும் போது, அவருடைய தங்கையே அவரை மதிக்காமல் இருக்க, எப்படியாவது இந்த கலங்கைத்தை போக்க வேண்டி, இந்த பணியை தான் செய்வதாக ஒப்புக்கொள்கிறார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கறைகளை துடைப்பதற்கான முயற்சியில், சென்டிமெண்ட் ஏரியாவை சொந்தமாக்குகிறார்.
ஜெயப்பிரகாஷ் vs லட்சுமி ராமகிருஷ்ணன்
மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா. உருக்கி விடுகிறார்கள்.
"யாரோ ஒரு உயிரை காப்பாத்தறதுக்காக, என் மகனை கொன்னுடாதீங்க" என்று உருகும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதியர் கலங்க வைக்கின்றனர். "அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?" என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பது, சோகமும் சுகமும் கலந்த கவிதை. மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில், படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.
பிரகாஷ்ராஜ்
புகழ் போதையிலும், பணத்திலும் மிதக்கும் முன்னணி நடிகராக பிரகாஷ்ராஜ். கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். மகளின் பாசத்தையே பரபரப்புச் செய்தியாக்கும் தந்திரம், யதார்த்தம் புரியாமல் தன் செல்வாக்கால் எதையும் சாதித்து விடலாம் என்ற இறுமாப்பு என பிரமாதப்படுத்துகிறார்.
புதுமுகங்கள்
விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டாக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள். சச்சினின் காதலியாக வரும் பார்வதியின் அழகும், நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. மின்னல் போல் வந்து மறையும் சச்சின், ஆழமாகப் பதிகிறார்.
ராதிகா
பிரகாஷ்ராஜின் மனைவி. கேரக்டர் பவர்புல். "நாளைக்கு நீங்க மார்க்கெட் இல்லாம வீட்ல இருக்கும்போது, உங்க பக்கத்துல இருக்குறது நானும், உங்க மகளும் மட்டும்தான்" என்று நெற்றிப்பொட்டில் அடித்து உட்கார வைக்கிறார். பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா... ராதிகா தான்.
சரத்குமார்
பொறி பறக்கும் சண்டை, படபடக்கும் துப்பாக்கி, மாடிப்படியில் ஏறி இறங்கும் ஸ்டைல், பஞ்ச் டயலாக் இல்லாமல், மிடுக்கான போலீஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி, படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.
இயக்குனர் ஷஹித் காதர் & டீம்
ஒரு வரி நிஜக்கதையை, இரண்டு மணி நேர திரைக்கதையாக மாற்றிய விதத்திலேயே மிரட்டுகிறார்கள். வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார். விபத்து ஏற்பட்டு விட்டது. ஆனால், அது யாருக்கு ஏற்பட்டு விட்டது என்பதில் சிறு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, படத்தின் ஆரம்பத்திலே ரசிகர்களை கதையின் வசம் இழுத்து விடும் இயக்குநர் ஷஹித் காதரின் திறமைக்கு ஆயிரம் அப்ளாஸ்கள்.
வில்லன் இல்லாமல், சூழ்நிலைகளையே வில்லனாக்கி, பரபரப்பான ஆக்ஷன் படத்தை உண்மைக்கு நெருக்கமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஷஹித் காதர்.
இதயத்தை எடுத்துச் செல்ல ஒரு டீம் சின்சியராக வேலை செய்ததைப் போல், இப்படத்தை எடுத்துச் செல்ல அவரது தலைமையில் இசையமைப்பாளர் மெஜோ ஜோசப், ஒளிப்பதிவாளர் ஷேஹநாத் ஜே.ஜலால், வசனகர்த்தா அஜயன் பாலா, எடிட்டர் மகேஷ் நாராயண், ஸ்டண்ட் இயக்குனர் மிராக்கிள் மைக்கேல் என, ஒரு பட்டாளமே கடினமாக உழைத்துள்ளது. சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், எனர்ஜி டானிக்.
இசை - மொஜெ ஜோசப்
பாடல்கள் இந்த படத்திற்கு தேவை இல்லை என்றாலும், நேரத்தைக் கறுதி முதலில் ஒரு காதல் பாடல், பிறகு ஒரு சிறிய பாடல், பிறகு இறுதியில் ஒரு பாடல் என்று மொத்தம் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மொஜெ ஜோசப்பின் இசையில் பாடல்கள் சாலையில் கடக்கும் வேடத்தடைகளாக இருந்தாலும், படத்தின் பின்னணி இசை திரைக்கதையை வேகமாகவும், அதே சமயம் உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைக்கிறது.
படத்துல குறையே இல்லையா...? என்று கேட்டால்.... இருக்கு.... என்று சொல்வேன். அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
ஒரு சில நிமிட அஜாக்கிரதை வாழ்வில் எத்தனை பெரிய சோகத்தை ஏற்படுத்தும்… என்பதை வலியோடு சொல்கிறது ‘சென்னையில் ஒரு நாள்’… இந்த படம் வந்த பிறகாவது விழிப்புணர்வு வரட்டும்..!
சென்னையில் ஒருநாள் - காட்டாயம் பார்க்கவேண்டிய படம்.!
Published by WebStory
0 comments:
Post a Comment