Tuesday, April 9, 2013

சேட்டை - திரை விமர்சனம்

fcd68d67-afe5-48aa-9bdc-559ecd4a1b85_S_secvpf
மும்பையில் உள்ள தினசரி பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கும் ஆர்யா, அவருடைய நண்பனாக அதே பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கும் பிரேம்ஜி, இருவரும் ஒரே ரூமில் வாடகைக்கு தங்கியிருக்கிறார்கள். இதே பத்திரிகையில் ‘நடுப்பக்கம் நக்கி’ என்கிற புனைப்பெயருடன் வேலைக்கு சேரும் சந்தானமும், இவர்களுடன் ஒரே அறையில் தங்குகிறார். ஆர்யாவின் காதலியாக ஹன்சிகா. இவர் ஏர் ஹோஸ்டஸாக வேலை பார்க்கிறார்.

ஒருநாள் ஏர்ப்போர்ட்டில் ஒரு வெளிநாட்டுக்காரன் மூலம் பொம்மைக்குள் வைரம் வைத்து கடத்தப்படுகிறது. அந்த தொழிலை செய்பவர் ஹன்சிகாவின் தோழிதான். வெளிநாட்டிலிருந்து வரும் வைர பார்சலை வாங்குவதற்காக ஹன்சிகாவை ஏர்போட்டுக்கு அனுப்புகிறாள் அவரது தோழி. ஆனால் ஹன்சிகாவுக்கோ அந்த பார்சலில் வைரம்தான் வருகிறது என்பது தெரியாது.

பார்சலை வாங்கிய ஹன்சிகா அந்த பார்சலை உரியவரிடம் ஒப்படைக்குமாறு தனது காதலன் ஆர்யாவிடம் கொடுக்கிறார். ஆர்யா அந்த பொறுப்பை சந்தானத்திடம் ஒப்படைக்கிறார். பார்சல் கொடுக்கப் போகும் வழியில் சந்தானம் சாப்பிடும் சாப்பாடு அவரது வயிரை பதம் பார்க்கிறது. இடைவிடாத வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படும் சந்தானம் மருத்துவ சோதனைக்காக தன்னோட ‘க…கா’ வை சாம்பிள் எடுத்து டப்பாவில் அடைத்து பார்சல் செய்கிறார்.

தன்னால் எழுந்து நகரமுடியாததால் அந்த சாம்பிள் பார்சலையும், ஆர்யாவிடம் இருந்து வாங்கிய பார்சலையும் பிரேம்ஜியிடம் கொடுத்து அனுப்புகிறார். பார்சல் கொடுக்கவேண்டிய இடத்தில் இரண்டையும் மாற்றிக் கொடுத்துவிடுகிறார் பிரேம்ஜி. அதாவது வைரம் இருந்த பார்சலை ஆஸ்பத்திரியிலும், பரிசோதனைக்கு கொடுக்க வேண்டிய பார்சலை வில்லன் நாசர் இடத்திலும் கொடுத்துவிடுகிறார்.

வைரம் இருக்குமென்று பார்சலை திறந்த நாசருக்கு அதில் வைரம் இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அதே நேரம் ஆஸ்பத்திரியில் வைரம் இருக்கும் பொம்மையை காட்சிப் பொருளாக வைத்துவிடுகிறார்கள். தொலைந்துபோன வைரத்தைத் தேடி நாசர் கும்பல் புறப்படுகிறது.

இதற்குள் ஆங்கில பத்திரிகையில் வேலைபார்க்கும் அஞ்சலி, ஆர்யா மற்றும் அவருடைய நண்பர்களுக்கு அறிமுகமாகிறார். அவர் ஆர்யாவை ஒருதலையாய் காதலிக்கிறார்.

இறுதியில் பொம்மைக்குள் இருந்த வைரத்தை யார் கைப்பற்றினார்கள்? ஹன்சிகா-அஞ்சலி இருவரில் யார் ஆர்யாவை கைபிடித்தார்கள் என்பதே மீதிக்கதை.

நாயகனாக வருகிற ஆர்யா, ஆள் பார்க்க படு ஸ்மார்ட்டா இருக்கிறார். சில இடங்களில் தூக்கத்தில் இருந்து எழுந்துவந்த மாதிரியே முகத்தை வைத்திருக்கிறார். படத்துல இவரின் கதாபாத்திரத்தோட பலம் குறைவுதான். நடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், அதை நிறைவாக செய்ய ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

ஏர்-ஹோஸ்டஸ் மதுவாக வரும் ஹன்சிகா மொத்வானி, தனது முந்தைய படமான ஓகே.ஓகே.வில் காட்டிய அதே முகபவானைகளையே இப்படத்திலும் காட்டியுள்ளார். ஆர்யாவுடன் இரண்டு பாட்டுக்கு ஆடுகிறார் என்பதால் படத்தின் நாயகியாக கொள்ளலாம். இப்படத்தில் கொஞ்சம் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார். ஆனால் நடிப்புதான் வரவில்லை.

அளவான மேக்கப், அழுக்கு முகமாக பார்த்த அஞ்சலியை ஓவர் மேக்கப்பில் பார்க்க சகிக்கவில்லை. கண்ணுக்கு இவர் தீட்டின மை உறுத்தலை ஏற்படுத்துகிறது. படத்துக்குப் படம் இவர் பெருத்துக்கொண்டே போகிறார். ஆதி-பகவன் நீது சந்திரா ஒரேயொரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினாலும் ரசிக்க வைக்கிறார்.

ஆர்யாவோட நண்பனாக வருகிற பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரம் படத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளதாக தோணுகிறது. இவர் வரும் பெரும்பாலான காட்சிகள் மொக்கையாக இருந்தாலும் காதல் தோல்வியில் மட்டும் பரிதாபம் காட்டுகிறார்.

காமெடி சூப்பர் ஸ்டார் என்ற புதிய பட்டத்தோட சந்தானம் நடிக்கிற முதல் படம் இது. வழக்கம்போல் டைமிங் காமெடியில் ரசிக்க வைத்தாலும், அநேக இடங்களில் மூக்கைப் பொத்திக் கொள்ளும்படியான காமெடியில் நாறடித்திருக்கிறார். நாசர் காமெடி கலந்த வில்லத்தனத்தில், அவருடைய சாயலில் ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்தியில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட ‘டெல்லி பெல்லி’ படத்தோட ரீமேக்தான் இந்த படம். டெல்லி பெல்லியின் வெற்றிக்குக் காரணம் அப்படத்தில் வரும் இரட்டை அர்த்த வசனங்களும், அதிகப்படியான கவர்ச்சியும்தான். ஆனால் இங்கு ‘யு’ சர்டிபிகேட்டுக்காக வசனங்களை வடிகட்டி, கவர்ச்சியைக் கொடுத்துள்ளதால் அது எந்த தாக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்தவில்லை. இந்தி கலாச்சாரத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் இடையே வேறுபாடு காட்டுவதில் இயக்குனர் கண்ணன் தடுமாறியிருக்கிறார் என்றே கூறவேண்டும்.

தமன் இசையில் ‘அகலாதே’ பாடல் மட்டும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. மற்ற பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. பாடல்கள் அனைத்தும் 3 நிமிடங்கள் என்பது மட்டும் ஆறுதலை தருகிறது. பின்னணி இசையும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. வெளிநாட்டு லொகேஷன்களில் வரும் பாடல் காட்சிகளை ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ’சேட்டை’ பெருத்த ஓட்டை.

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment