Tuesday, April 9, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - திரைவிமர்சனம்

6b16e528-0d4f-48fe-aff0-989c1474ed6f_S_secvpf
அரசியல் வாதியாக துடிக்கும் இரு வெட்டி இளைஞர்களின் கலகலப்பான காமெடி கதை….

விமல், சிவகார்த்திகேயன் இருவரும் நண்பர்கள். வேலை இன்றி பெற்றோர் பணத்தில் குடி, கும்மாளம் என இருக்கிறார்கள். மாநகராட்சி கவுன்சிலர் ஆவதே இவர்கள் லட்சியம். இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. நமோ நாராயனணை அண்டிக் கிடக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் விமலுக்கு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் பிந்து மாதவி மீதும் சிவகார்த்திகேயனுக்கு ஜெராக்ஸ் கடை நடத்தும் ரெஜினாவிடமும் காதல் மலர்கிறது. அப்பெண்களோ வெறுப்பு காட்டி துரத்துகிறார்கள்.

இந்நிலையில் தேர்தலும் வருகிறது. கவுன்சிலர் பதவிக்கு இருவரும் போட்டியிட்டார்களா? காதல் வென்றதா என்பது கிளைமாக்ஸ்…

முழு நீள காமெடி படம். காட்சிகளை தொடர் சிரிப்பில் நகர்த்துகிறார் இயக்குனர் பாண்டிராஜ். மது பாட்டில்களை பரப்பி வைத்து இந்த சனியனை தலை முழுக வேண்டும் என்று விமல், சிவகார்த்திகேயன், அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம்.

விமலுக்கு மைல்கல் படம். காதல், காமெடியில் விளாசுகிறார். பிந்துமாதவி அழகில் வழிந்து ஆஸ்பத்திரிக்குள் அவர் போவதை பார்த்து என் மனைவி டாக்டர் என தனக்குதானே சொல்லி மகிழ்வதும் பிறகு நர்சு உடை அணிவதை பார்த்து பரவாயில்லை என விரக்தியாய் சமாதானமாவதும் டோக்கன் கொடுப்பதை கண்டு அதிர்வதும் தியேட்டரை குலுங்க வைக்கிறது.

சிவகார்த்திகேயன் காதல் இன்னொரு ரகளை… ரெஜினாவின் கடைக்கு போய் ஜெராக்ஸ் எடுத்து காதல் யாசிப்பது தமாஷ்.. கண்ணை சிமிட்டி சாந்தமாக வரும் பிந்துமாதவி அப்புறம் இன்னொரு முகம் காட்டி விளாசுகிறார். விமலை தாவி குதித்து அடித்து இம்சிப்பதும் அவர் அடி தாங்காமல் ஓடுவதும் தமாஷ்..

ஆம்பிளையை கை நீட்டி அடிப்பது தப்பு என்று பிந்துமாதவி தந்தையிடம் முறையிட அவர் என் மனைவி மாமியாரிடமும் அடி வாங்கி இருக்கிறேன். இது பரம்பரையா வருது என்று பதிலுரைக்க தியேட்டரே குலுங்குகிறது. ரெஜினா வசீகரிக்கிறார்.

மனைவி, மாமனார் குடும்பத்தினரின் கேவல பேச்சை பொருட்படுத்தாமல் அவர்கள் தயவில் இருக்கும் புரோட்டா சூரியும் கலகலப்பூட்டுகிறார். மாமனார் வெட்கங்கெட்டவன் என் செருப்பை போட்டுட்டு போறான் என்று சூரியை திட்ட, அது பரவாயில்லை காலையில் என் பிரஸ்ஸில் பல் தேச்சான் என்று மாமியார் புலம்புவது சிரிப்பை அடக்க முடியாமல் செய்கிறது.

அரசியல்வாதி நமோ நாராயணன் பொதுக்கூட்டத்தில் தெரியாதவர்கள் பெயரை அடியாட்கள் மூலம் தெரிந்து பெயர் சொல்லி அழைப்பது தனக்கு போட்ட சால்வைகளை ஜவுளி கடைகளில் விற்பது அரசியல் காமெடி.

டெல்லி கணேஷ், மனோஜ்குமார் தந்தை கேரக்டரில் அழுத்தம் பதிக்கின்றனர். கிளைமாக்சில் இருவரையும் கடவுள், ஹீரோ அளவுக்கு உயர்த்தி உருக வைத்து விழிகளில் நீர் மூட்ட செய்கிறார் பாண்டிராஜ்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. விஜய் ஒளிப்பதிவு பலம்.

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment