Saturday, August 4, 2012

சரித்திர நாயகன்!

இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கைக் கால்களைக் கொண்டு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற முதல் வீரர் என்கிற பெருமையோடு, 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதிக்கு முன்னேறி சரித்திரச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார், தென் ஆப்பிரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்.

இன்று நடந்த தகுதிச் சுற்றில், 400 மீட்டர் தூரத்தைக் கடந்து 45.44 பாயின்டுகளை அள்ளி, சீசனல் ரெக்கார்டு ஒன்றையும் நிகழ்த்தி இருக்கிறார் பிஸ்டோரியஸ்.

பதக்கம் வெல்வாரோ, இல்லையோ... ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே புதிய சரித்திரம் படைக்கிறார் எனப் போற்றப்பட்டவர் தென் ஆப்பிரிக்க ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்.

இரண்டு கால்களையும் இழந்த நிலையில் ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற முதல் வீரர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார். சிறு வயதிலேயே இரண்டு கால்களையும் இழந்துவிட்டவர், தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தன் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கினார். கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்' என்று அழைக்கப்படுகிறார்.

லண்டன் ஒலிம்பிக்ஸுக்குத் தகுதிபெற்றபோது, தனது வாழ்க்கையில் பெருமைக்குரிய தருணங்களில் இதுவும் ஒன்று எனக் கூறிய 25 வயதான பிஸ்டோரியஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாராலிம்பிக்ஸ்' போட்டிகளிலும் பங்கேற்க இருக்கிறார்.

முன்னதாக, ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்படுவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்தித்தார் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓடும் பிஸ்டோரியஸ், மற்ற போட்டியாளர்களுடன் ஓடும்போது, சாதகமான நிலையைப் பெறுகிறார் என்ற புகார் எழுந்தது. அந்தப் புகார், விளையாட்டுத் துறைக்கான சர்வதேசத் தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டு இப்போது ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார்.

அரையிறுதியில் நாளை ஓடப்போகும் பிஸ்டோரியஸுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

0 comments:

Post a Comment