சென்ற அத்தியாயத்தில் தங்கத்தின் விலை கடந்த நாற்பது ஆண்டுகளில் எப்படி உயர உயரப் பறந்து இன்று உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காமல் விட்டவர்களுக்காக மறுபடி இங்கே கொடுத்துள்ளோம்.
வருடம் 10கிராம் தங்கத்தின் விலை.(ரூபாயில்)
1970 200
1975 545
1980 1522
1985 2120
1990 3450
1995 4960
2000 4480
2005 9000
2010 19230
2012 28000 ஐயும் தாண்டி.
.
1970ல் பத்தாயிரம் ரூபாய்க்கு அரை கிலோ தங்கம் வாங்கியிருக்கலாம். இன்றைய தேதிக்கு அதன் மதிப்பு கிராமுக்கு 3000 ரூபாய் என்று வைத்துப் பார்க்கும் போது பதினைந்து லட்ச ரூபாய். இது கிட்டத்தட்ட 15000 சதவிகித வளர்ச்சி. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 375 சதவிகித வளர்ச்சி. நிலைமை இப்படி இருக்க வாரப் பப்பெட் போன்ற பங்குச் சந்தை பில்லியனர்களுக்கு தங்கத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு? அதுவும் தங்கத்தில் முதலீடு செய்வது முட்டாள்தனம் என்று பேசும் அளவுக்கு என்ன கோபம்?
ஒரு உதாரணத்துக்கு தங்கத்தையும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இந்திய நிறுவனப் பங்குகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? முதலில் புகழ் பெற்ற மென்பொருள் உற்பத்தி நிறுவனமான " WIPRO" பங்குகளின் வளர்ச்சியைப் பார்க்கலாம். 1980ம் ஆண்டில் ஒரு விப்ரோ பங்கின் விலை 100 ரூபாய். ஒரு கிராம் தங்கத்தின் விலை 152 ரூபாய். பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்வதாகக் கொள்வோம். நாம் புத்திசாலித் தனமாக தங்கத்தில் முதலீடு செய்கிறோம். பத்தாயிரம் ரூபாய்க்கு 66 கிராம் தங்கம் வாங்கி வீட்டுப் பெண்களுக்கு நகை வாங்கிப் போட்டு சந்தோசப் படுத்தி விட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் அதே பத்தாயிரம் ரூபாய்க்கு விப்ரோ பங்குகளை வாங்குகிறார். ஆம். ஒரு பங்கு 100 ரூபாய் என்ற விலையில் 100 பங்குகளை வாங்கி விட்டார். இன்றைய தேதிக்கு (28.01.2013) தங்கத்தின் விலை கிராமுக்கு 3000 ரூபாய். நாம் வாங்கி வைத்த தங்கத்தின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம். இதே தேதியில் விப்ரோ நிறுவனப் பங்கின் விலை எவ்வளவு தெரியுமா? 420 ரூபாய்.பக்கத்து வீட்டுக்காரரின் பத்தாயிரம் ரூபாய் முதலீடு 42000 ஆகியிருக்க வேண்டும். ஆனால் நிஜம் அதுவல்ல. அங்கேதான் இருக்கிறது பங்குச் சந்தையின் சூட்சுமங்கள்.
ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் அன்று வாங்கிய 66 கிராம் தங்கத்தின் மதிப்பு கூடியதே ஒழிய, வாங்கிய தங்கத்தின் அளவு கூடவில்லை. இன்றும் உங்களிடம் இருப்பது அதே 66 கிராம் தங்கம்தான். ஆனால் பங்குகள் அப்படி இல்லை. குட்டி போடும். அப்புறம் அந்த குட்டிகள் குட்டி போடும். இப்படி குட்டி மேல் குட்டி போட்டு வாங்கிய 100 பங்குகள் எண்ணிக்கையில் பல மடங்காகப் பெருக வாய்ப்புகள் உள்ளன. இதனை பங்குச் சந்தையில் போனஸ் பங்குகள் என்பார்கள். நம் ஊரில் ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் என்கிறார்களே. கிட்டத்தட்ட அது போலத்தான். நன்றாக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் உங்களிடம் உள்ள பங்குகளுக்கு போனசாக பங்குகள் தருவார்கள். இது ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருக்கலாம். சில சமயம் ஒன்றுக்கு பத்து என்ற ரீதியிலும் (பம்பர்) இருக்கலாம். அது நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்தது. இது மட்டும் இல்லாமல் பங்குகள் வேறு ஒரு வழியிலும் குட்டி போடும். ஒவ்வொரு பங்கிற்கும் முகமதிப்பு (Face Value ) என்று ஒன்று இருக்கும்.இது பொதுவாக ஆரம்பத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் பத்து ரூபாய் என்று இருக்கும். சில சமயங்களில் நிறுவனங்கள் இந்த முகமதிப்பை " Split " என்ற முறையில் குறைப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு பத்து ரூபாய் பங்கை இரண்டு ஐந்து ரூபாய் பங்குகளாக பிரிப்பார்கள். அப்போது உங்களிடம் உள்ள ஒரு பத்து ருபாய் பங்கு இரண்டு ஐந்து ருபாய் பங்குகளாக மாறும். பங்கின் விலையும் சரி பாதியாகக் குறைந்து பின்னர் மீண்டு உயரத் துவங்கும். பங்கின் விலை என்பதும் முகமதிப்பு என்பதும் வெவ்வேறு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள 100 ரூபாய் மதிப்புள்ள 100 விப்ரோ பங்குகள் 50 ரூபாய் மதிப்புள்ள 200 பங்குகளாக மாறும். பின்னர் பங்கின் விலை மறுபடியும் 50ல் இருந்து உயரத் தொடங்கும். இது போன்று விப்ரோ நிறுவனப் பங்குகள் போட்ட குட்டிகளையும் இன்றைய தேதிக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையையும் அதன் மதிப்பையும் பார்க்கலாமா?
1981 , 1:1 Bonus = 200 shares
1985, 1:1 Bonus = 400 shares
1986 split to Rs 10 = 4000 shares
1987, 1 :1 Bonus = 8000
1989, 1:1 Bonus = 16000
1992 , 1:1 Bonus = 32000
1995 , 1:1 Bonus = 64000
1997 , 2:1 Bonus = 1,92,000
1999 Split to Rs 2 = 9,60,000
2004 2:1 Bonus = 28,80,000
2005 1:1 Bonus = 57,60,000
2010 3:2 Bonus = 96,00,000
இன்றைய தேதிக்கு உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் 96 லட்சம் பங்குகள் இருக்கும். ஆம். அவர் வாங்கிய 100 பங்குகள் குட்டி மேல் குட்டி போட்டு 96 லட்சமாக எண்ணிக்கையில் பெருகிவிட்டன. இப்போது அந்த பங்குகளின் மதிப்பை கணக்கிட்டு பாருங்கள். விப்ரோ நிறுவனப் பங்கின் தற்போதைய விலை (2013' ஜனவரி நிலவரப்படி) 420 ரூபாய். அப்படியென்றால் அவரிடம் உள்ள பங்குகளின் மதிப்பு 403 கோடியே 20 லட்சம். கண்ணைக் கட்டுகிறதா? ஆனால் இது உண்மை. பத்தாயிரம் ரூபாய்தான் சுமார் முப்பதே ஆண்டுகளில் இத்தனை கோடிகளாகப் பெருகியிருக்கின்றன.
இது போலவே மற்றொரு மென்பொருள் உற்பத்தி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் செய்த முதலீட்டின் வளர்ச்சி பற்றி அறிந்திருப்பீர்கள். 1992ல் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிய இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு இன்றைய தேதிக்கு சுமார் 1.5 கோடி. சொல்லப் போனால் இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தியின் கார் டிரைவர் கூட தான் செய்த சின்ன முதலீட்டினால் இன்று ஒரு கோடீஸ்வரர் என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கும் காரணம் இன்போசிஸ் பங்குகளின் இனப்பெருக்கம் தான். இன்போசிஸ் நிறுவனம் எப்போதெல்லாம் போனஸ் மூலமாகவும், ஸ்ப்ளிட் மூலமாகவும் குட்டிகள் போட்டன என்று பாருங்கள்
1994 - 1:1 (100க்கு 100. ஆக மொத்தம் 200)
1997 - 1:1 (200 க்கு 200. ஆக மொத்தம் 400)
1999 - 1:1 (400க்கு 400. ஆக மொத்தம் 800)
1999 - ஸ்ப்ளிட் முறையில் 10 ரூபாய் முகமதிப்பு பங்குகள் 5 ரூபாய்க்கு ( 800 க்கு 800. மொத்தம் 1600)
2004 - 3:1 (1600க்கு 533. மொத்தம் 2133)
2006 - 1:1 (2133க்கு 2133. மொத்தம் 4266)
1992ல் 9500 ரூபாய்க்கு வாங்கிய 100 பங்குகள்தான் குட்டி மேல் குட்டி போட்டு 4266 பங்குகளாகப் பெருகி மொத்த மதிப்பை பன்மடங்காக்கியது. அதே போல Ranbaxy நிறுவனத்தின் பங்குகளில் 1980ல் வெறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அது 2 கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். அதையெல்லாம் விடுங்கள். 2004ல் யூனிடெக் நிறுவனத்தில் நாற்பதாயிரம் முதலீடு செய்திருந்தால் மூன்றே ஆண்டுகளில் அதாவது 2007ல் அது 1.1 கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். இதெல்லாம் நம்ப முடியாத வளர்ச்சியாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். (ஆதாரம்: www.moneycontrol.com).
இதையெல்லாம் பார்க்கும்போது திரு.சுஜாதா அவர்கள் தனது ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி பதில் தொகுப்பில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. சென்ற இருநூறு ஆண்டுகளில் தங்கத்தின் விலை அதிகமாயிருப்பதை பணவீக்கத்துடன் ஒப்பிட்டால், 1801ல் ஒரு ரூபாய் மதிப்புள்ள தங்கத்தின் இன்றைய நிஜ மதிப்பு 99 காசுகள். அதே ஒரு ரூபாயை பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ஆறு லட்சமாகியிருக்கும் பாண்டுகளில் (Bonds ) போட்டிருந்தால் ஆயிரம் ரூபாய் ஆகியிருக்கும். இதனாலேயே தப்பான எதிர்பார்ப்போடு செய்யப்படும் காரியங்களை " Fool's Gold " என்று கிண்டல் செய்யும் அளவுக்குப் போய்விட்டது.
எல்லா நிறுவனங்களின் பங்குகளும் இப்படி அள்ளிக் கொடுத்து விடுமா என்றால் அதுதான் இல்லை. பங்குச்சந்தை குரு வாரென் பப்பெட் சொன்னது போல " If a business does well, the stock eventually follows " என்பதுதான் உண்மை. ஆனால் எந்த நிறுவனம் நன்றாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் அடங்கியுள்ளது பங்குச்சந்தையில் நமது வெற்றி.அதைத்தான் இந்த தொடர் முழுவதும் பேசப் போகிறோம். எது எப்படியோ வாரன் பப்பெட் சொன்னது போல தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் முட்டாள்கள் என்று ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பெரிய புத்திசாலிகள் இல்லை என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் போல் இருக்கிறது.
0 comments:
Post a Comment