Tuesday, March 26, 2013

5000த்திலிருந்து 5000 கோடி வரை ; பங்குச்சந்தை - 2

Andhimazhai Image

ராகேஷின் உடன் பிறந்த அண்ணனும் 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்'தான். CA படிப்பை முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே சுயமாகவும் ஒரு கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்தார். ராகேஷ் ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது அண்ணனின் அலுவலகத்திற்குச் சென்று அங்கே வரும் வாடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அப்படி வரும் வாடிக்கையாளர்களில் ஒரு 40 வயதைத் தாண்டிய பெண்மணி பரிச்சயமானார் . ஒரு நாள் ராகேஷின் பங்கு வர்த்தகம் குறித்து பேச்சு வந்தது.  

 

"C.A  முடித்திருக்கிறீர்கள். வேலைக்கு எங்கும் செல்லவில்லையா?"


 

"எனக்கு வேலைக்குப் போவதில் பெரிய  விருப்பம் இல்லை. அதனால் சுயமாக ஷேர் ட்ரேடிங் செய்து கொண்டிருக்கிறேன்."


 

"'ஷேர் ட்ரேடிங்' மிகவும் ஆபத்தானது என்று சொல்கிறார்களே?"


 

"அப்படி இல்லை. விஷயம் தெரிந்து கொண்டு செய்தால் இது மிகவும் பாதுகாப்பான தொழில்"


 

"நிறைய வருமானம் வருகிறதா?"


 

"நிறைய லாபம் வருகிறது. நிறைய வருமானம் என்று சொல்வதற்கில்லை. காரணம் முதலீடு மிகவும் சிறிய தொகை."

 

அந்தப்  பெண்மணி  ராகேஷிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டு இருப்பதாக நினைத்தார்.  அவர்  நிச்சயமாக சாதிப்பார் என்று என்னமோ ஒரு நம்பிக்கை.
 


"நான்  முதலீடு  செய்வதாக இருந்தால் என்ன மாதிரியான லாபம் எதிர்பார்க்கலாம்?"
 

 

"நீங்கள்  என்ன மாதிரியான லாபம் எதிர்பார்கிறீர்கள்?"


 

"இப்போது வங்கியில் நான் செய்துள்ள  'பிக்சட் டெபாசிட்' மூலமாக வருடத்திற்கு 9 சதவிகிதம் வட்டி வருகிறது."
 

 

"நான் உங்களது முதலீட்டிற்கு வருடத்திற்கு 18 சதவிகித வட்டி தருகிறேன்."

 

அந்த பெண்மணியின் முதலீட்டிற்கு வங்கியில் கிடைத்துக் கொண்டிருந்ததைக்  காட்டிலும்  இரு மடங்கு வருமானம் கிடைக்க உத்தரவாதம் தருவதாக ராகேஷ் கூறியது அந்த பெண்மணியை யோசிக்க வைத்தது. என்ன தான் இருந்தாலும் வங்கி முதலீடு பாதுகாப்பானது. இந்த இளைஞனை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று அந்த பெண்மணி ஒரு கணம் தயங்கினார் .

 

"18 சதவிகித வட்டி என்பது சரி. நான் இரண்டரை லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறேன். எனது பணத்திற்கு நீங்கள் என்ன மாதிரியான கியாரண்டி கொடுக்க முடியும்?."

 

ராகேஷிடம் கியாரண்டி கொடுப்பதற்கு பெரிய சொத்துகள்  எதுவும் அப்போது இல்லை. இருந்திருந்தால் அவர் முதலீட்டிற்கு அடுத்தவர்களிடம் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

 

"கியாரண்டி கொடுக்க என்னிடம் சொத்துகள் எதுவும் இல்லை. எனது தன்னம்பிக்கையும், பங்குச் சந்தை அறிவும் தான் எனது சொத்துகள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் முதலீடு செய்யுங்கள்."
 

 

"சொத்து என்று எதுவும் வேண்டாம். நான் தரும் தொகைக்கு கியாரண்டியாக ஒரு 'செக்' மட்டுமாவது கொடுக்க முடியுமா?"

 

ராகேஷிற்கு இந்த 'டீல்' நல்லதாகப் பட்டது.

 

"சரி. பத்து நாள் 'டயம்' கொடுங்கள். நான் செக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்கிறேன்."

 

இப்படி ராகேஷிற்கு அவர் எதிபார்த்ததை விட அதிகமாகவே முதலீட்டுப் பணம் கிடைத்து விட்டது. அடுத்து நமது பங்குச் சந்தை அறிவை உபயோகிக்க வேண்டும். சரியான பங்கைத் தேர்ந்தெடுத்து இந்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பல நிறுவனங்களின் சரித்திர பூகோளத்தை ஆராய்ந்தார். அப்படி ஆராய்ந்ததில் "Tata Tea" நிறுவனத்தின் பங்குகள் பழுக்கத் தயாராக உள்ள  'க்ரீன் ஆப்பிள்' என்பது தெரிந்தது. இன்னும் கூட கொஞ்சம் அந்தப் பங்கின் சாதக பாதகங்களை ஆராய்ந்தார்.  சரியான விலையில் சரியான பங்கு என்பது 100 சதவிகிதம் உறுதியானது. கொஞ்சமும் யோசிக்காமல் 43 ரூபாய்க்கு 5000 'Tata Tea' பங்குகளை வாங்கி விட்டார். அலசி ஆராய்ந்து வாங்கிய பங்குகள் என்பதால் அதன் பின் வந்த சின்னச் சின்ன விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கவலைப் படாமல் பொறுமையாக இருந்தார். சரியாக மூன்றே மாதங்கள். 'Tata Tea' பங்குகளின் விலை மெல்ல மெல்ல உயர்ந்து 143ஐத் தொட்டது. ஆம். ஒரு பங்கிற்கு 100 ரூபாய் லாபம். தன்னிடம் இருந்த அத்தனை பங்குகளையும் விற்று விட்டார். இதில் அவர் சம்பாதித்தது ஐந்து  லட்சம் ரூபாய்.

 

இந்த சமயத்தில் வேறு ஒரு நபரும் முதலீடு  செய்ய விருப்பம் தெரிவித்தார். ஆனால் தான் செய்யும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டிற்கு இந்த நபர் எதிர்பார்த்தது  வருடத்திற்கு 24 சதவிகித வட்டி. ராகேஷ் சரியென்று ஒத்துக் கொண்டார். அந்த பணமும் முதலீடு செய்யப்பட்டது. அதன் பின்னர்  'Tata Power'  மற்றும்  'Karur Vaishya Bank ' போன்ற நிறுவனங்களில் அவர் சரியான நேரத்தில் செய்த முதலீடுகள் அவருக்கு மேலும் மேலும் லாபங்களை அள்ளிக் கொடுத்தன. கிட்டத்தட்ட மூன்றே ஆண்டுகளில் சுமார்  25 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து இருந்தார். தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கான பணத்தினை வட்டியோடு திரும்பக் கொடுத்தார்.


இப்போது அவரிடம் தேவையான அளவு பணம் இருந்தது. ஆனாலும் 'பங்குத் தரகம் வேண்டாம் . நல்ல முறையில் ஷேர் ட்ரேடிங் செய்தால் போதும்' என்ற முடிவுக்கு  வந்தார். மீண்டும் சரியான பங்கிற்கான தேடுதலில் இறங்கினார்.அப்போது அவரது நண்பர் ஒருவர் 'ஷேசகோவா ' என்ற ஒரு இரும்புத் தாது மைனிங் செய்யும் நிறுவனத்தைப் பற்றி கூறினார். மீண்டும் ஆராய்ச்சி. ஆம். அந்த நிறுவனங்களின் சுரங்கங்களில் இரும்புத் தாது மட்டும் இல்லாமல் முதலீட்டாளர்களுக்கு பெரிய புதையலும் இருப்பது சந்தேகமின்றி தெரிந்தது.


உடனே அந்த நிறுவனத்தின் நான்கு லட்சம் ஷேர்களை 'பார்வார்டு ட்ரேடிங்' (Forward Trading என்பது சின்ன தொகையை மட்டும் மார்ஜின் பணமாகக் கட்டி பெரிய தொகைக்கு பங்குகள் வாங்குவது. இதனைப் பின்னால் விவரமாகப் பார்க்கலாம்) முறைப்படி வாங்கினார். பங்கின் விலை சராசரியாக 40 ரூபாய். பழம் பழுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். சமயம் வந்தது. சுமார் இரண்டரை லட்சம் பங்குகளை 63 ரூபாய்க்கு விற்றார். பங்கு விலை மேலும் ஏறியது. ஒரு லட்சம் பங்குகளை 160 ரூபாய்க்கு விற்றார். பங்குகளின் விலை பறந்து பறந்து உச்சாணிக் கொம்பிற்குப் போய் உட்கார்ந்தது. தன்னிடம் மிச்சம் இருந்த 50000 பங்குகளை 2200 ரூபாய்க்கு (எழுத்துப் பிழை இல்லை.இரண்டாயிரத்து இருநூறுக்குதான்). இந்த சேசகோவா பங்குகளில் அவர் சம்பாதித்ததை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

 

மேலும் மேலும் பணம் சேர்ந்தவுடன் அவரது எல்லைகள் மேலும் விரிந்தன. தனது பெயரான ராகேஷ், மனைவி பெயரான ரேகா, இரண்டிலும் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு Rare Enterprises என்னும்  முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கினார். ஆனாலும் அவருக்கு அடுத்தவர்களின் முதலீட்டை வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் விளையாடுவதற்கு பயமாகவே  இருந்தது. எதற்கு வீண் தலைவலி என்று நினைத்தாரோ என்னமோ, இன்று வரை 'Rare  Enterprises' நிறுவனத்தில் இருவரை மட்டுமே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளார். ஒருவர் 'திரு.ராகேஷ் ஜுஞ்சன்வலா ', மற்றவர்  திருமதி.ரேகா ஜுஞ்சன்வாலா.

 

 சரியான நிறுவனங்களின் பங்குகளை சரியான நேரங்களில்,சரியான விலைக்கு வாங்குவதுதான் இவரது பலம். பொதுவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பாதுகாப்பு கருதி 'Blue Chip' எனப்படும் வளர்ந்த நிறுவனங்களில் தான் முதலீடு செய்வார்கள். இவரது முதலீட்டுத் தத்துவம் சற்று வேறுபட்டது. 'Blue Chip' நிறுவனம் என்பது பழுத்த பழம். அதன் பங்கு  விலை அதிகமாக இருக்கும். அதன் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் வளரும் நிறுவனங்களில் சீக்கிரம் கனியும் என்ற நிலையில் உள்ள காய் எது என்பதை சரியாகக் கண்டுபிடித்தால் பங்குகள் குறைவான விலைக்கு கிடைக்கும், வாங்கும் பங்குகளின் விலைகள் உயர வாய்ப்புகள் அதிகம் என்பது அவரது கொள்கை. அவரது அனுபவங்களும், பங்குச் சந்தை அறிவும்  அவரது அனுமானங்களைப் பெரும்பாலும் உண்மையாக்கின.  அவர் முதலீடு செய்த வளரும் நிறுவனங்கள் சீக்கிரமாகவே 'Blue Chip' நிறுவனத்திற்கான தகுதிகளைப் பெற்றன.

 

இப்படி அவர் கண்டுபிடித்து முதலீடு செய்த பல நிறுவனங்களில் இன்று பொறுப்பான கௌரவப் பதவிகளிலும் உள்ளார். உதாரணத்திற்கு சில மட்டும். Aptech Limited நிறுவனத்தின் சேர்மனாகவும், Prime Focus Limited, Geojit BNP Paribas Financial Services Limited, Bilcare Limited, Praj Industries Limited, Provogue India Limited போன்ற நிறுவனங்களில் இயக்குனர் பதவிகளிலும் உள்ளார். 5000 ரூபாயில் தொடங்கி இன்று 5000 கோடியைத் தொட்ட ராகேஷின் சாதனை மேம்போக்காகப் பார்த்தால் "இது ச்சும்மா.. அதிர்ஷ்டம்"  என்பது போல் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. அவரது முதலீடுகள் குருட்டாம் போக்கானவை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தின் ஆதார பலம் எப்படி (Fundamentals),  பங்கு விலைகளின்  'சார்ட்'  (Chart) தெரிவிப்பது என்ன?  போன்றவற்றை முழுமையாக ஆராய்கிறார். இதற்காக அவர் செலவு செய்யும் நேரம் ஒரு நாளைக்கு சுமார் 16 மணி நேரம். எத்தனையோ கோடிகள் சம்பாதித்த பின்னும் இந்த உழைப்பு தொடர்கிறது. ஆனாலும் இந்த உழைப்பு அவருக்கு கொஞ்சமும் களைப்பைத் தருவதில்லை. காரணம் பங்குச் சந்தை முதலீடு என்பது அவருக்கு தொழில் மட்டும் அல்ல. அவரது காதல். இதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்லுவதானால் ,

 

"Investing is not my profession. It is my passion. Investing is the most interesting thing for me in this world."

 

இந்தியப் பங்குச் சந்தைகளில் சாதித்த "திரு.ராகேஷ் ஜுஞ்சன்வாலா"  வை "இந்தியாவின் வாரென் பப்பெட்" என்று எல்லோரும் அழைக்கின்றனர். இந்த வாரென் பப்பெட் யாரென்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக அவரைப் பற்றி சில குறிப்புகள்.

இவர் "ராகேஷ் ஜுஞ்சன்வாலா" போன்றவர்களுக்கு எல்லாம் மானசீக குரு. அமெரிக்க பங்குச் சந்தைகளில் கலக்கியவர்.  2008ஆம் ஆண்டில் பில் கேட்சை ஓரம் கட்டி உலகின் முதல் பணக்காரராகப் பட்டியலிடப்பட்டவர். "பங்குச்சந்தை என்றாலே கிட்டத்தட்ட சூதாட்டகளம், எவ்வளவு பணம் போட்டாலும் விழுங்கிவிடும் புதைகுழி" என்றுதான் நம்மில் பல பேர் கருதுகிறோம். நம்மைப் பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என்பது பிக்சட் டெபாசிட்டுகள், நிலம், வீடு அல்லது தங்கம். அதிலும் சமீப காலமாக 'பற பற'வென பறந்து எங்கேயோ உச்சத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, சில ஆண்டுகளுக்கு முன் தங்கம் வாங்காதவர்களை  "ச்சே! மிஸ் பண்ணிட்டோமே" என்று சலித்துக்கொள்ள வைத்திருக்கிறது.

 

ஆனால் இந்தப் பங்குச்சந்தை பில்லியனர் வாரென் பப்பெட்டுக்கு தங்கத்தின் மீது மட்டும் அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை. தங்கத்தில் முதலீடு செய்வதே வேஸ்ட் என்பது அவரது கருத்து. முட்டாள்கள்தான்  தங்கத்தில் முதலீடு செய்வார்கள் என்ற ரீதியில் இருக்கும் அவரது பேச்சு. அவரை விடுங்கள் . கடந்த நாற்பது வருடங்களில் தங்கத்தின் விலை எப்படி ஏறி இருக்கிறது என்பதற்கான ஒரு சின்ன சாம்பிள் பாருங்கள். பார்த்து வையுங்கள் ம்.அடுத்த வாரம் பேசலாம்

வருடம்           10கிராம் தங்கத்தின் விலை .(ரூபாயில்)

1970                     200

1975                     545

1980                   1522

1985                   2120

1990                   3450

1995                   4960

2000                   4480

2005                   9000

2010                 19230

2012                 28000    ஐயும் தாண்டி.    

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment