இந்நிலையில் திலீபன் தனது தங்கை பிறந்தநாளுக்காக அனாதை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் பார்ட்டிக்கு போகிறார். அப்போது, ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வரும் திலீபனின் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள் சம்பத்தின் அடியாட்கள்.
தன்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என துடிக்கும் திலீபன், இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றி, சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு சம்பத்தின் அடியாட்களுடன் மோதுகிறார். அவர்களை வீழ்த்திவிட்டு சம்பத்திடம் மோதி பணத்தை பிடுங்கிச் செல்கிறார். இதனால் தனது வாழ்க்கையை இழந்து தவிக்கும் சம்பத், திலீபனை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.
வருமான வரித்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கும் நகைக்கடை அதிபரான ஜெயப்பிரகாஷின் திட்டத்தை ஒட்டுகேட்ட திலீபன், அந்த கொலை முயற்சியை தடுத்து விடுகிறார். இதனால் ஜெயப்பிரகாஷும் திலீபனை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.
அதே சமத்துவபுரத்திலேயே குடியிருக்கும் ஜெகன், ஒரு பெரிய புள்ளியின் மகனைக் கடத்தி பணம் வசூலிக்கத் திட்டமிடுகிறான். அதற்கு தடையாக திலீபன் இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட எண்ணுகிறான்.
இப்படி ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையை தீர்த்துக்கொள்ள துடிக்கும் இவர்களிடமிருந்து திலீபன் தப்பித்தாரா? தான் காதலிக்கும் அஞ்சலியை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் திலீபன் புதுமுகம் என்றாலும், நடிப்பைவிட சண்டை காட்சியிலேயே நன்றாக நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடல் வாகு, அதற்கேற்ற உயரம் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோல் தெரிகிறது. இவருடைய அடுத்தடுத்த படங்களில் அதை சரிசெய்து கொள்வது அவருக்கு நலம் பயக்கும்.
அஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். “என்னை பலபேர் பார்த்து காதலிக்கிறான். அவன்கிட்ட எல்லாம் நான் போய் கூடாதுன்னு சொல்ல முடியுமா? அது மாதிரி தான் உன்கிட்டயும் சொன்னேன்” என்று திலீபனைப் பார்த்து கூறும்போது அவர் கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.
விறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின் முயன்றிருக்கிறார். கதைக்காக அவர் தேர்வு செய்த ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத், சரண்யா, ராஜா என ஒவ்வொருவரும் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும்படியான காட்சிகளை வைத்தது வித்தியாசமான அதே சமயம் புத்திசாலித்தனமான காட்சியும்கூட.
ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘வத்திக்குச்சி’ அனைவரையும் பத்திக்கும்.
0 comments:
Post a Comment