தேதி ரூபாய் (கோடிகளில்)
01-பிப் -13 14359.22
31-ஜன-13 18364.53
30-ஜன-13 14101.72
29-ஜன-13 17537.74
28-ஜன-13 13004.98
25-ஜன-13 15251.09
24-ஜன-13 17538.94
23-ஜன-13 15216.89
22-ஜன-13 14777.70
21-ஜன-13 13917.47
மேலே நீங்கள் பார்ப்பது எல்லாம் என்ன எண்கள் என்று யோசிக்கிறீர்களா? இந்தியப் பங்குச்சந்தைகளில் முக்கிய இரண்டு சந்தைகளான மும்பைப் பங்குச் சந்தை(BSE) மற்றும் தேசியப் பங்குச்சந்தை(NSE)களில் ஒரு நாளைக்கு சராசரியாக நடக்கும் வர்த்தகத்தின் விற்றுமுதல் (Turn Over). இந்தியாவில் எத்தனையோ பல நிறுவனங்களின் வருடாந்திர டர்ன் ஓவர் கூட இந்தத் தொகைக்கு பக்கத்தில் கூட நெருங்க முடியாது என்பதே உண்மை. இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள SEBI-யால் அங்கீகரிக்கப்பட்ட 22 பங்குச் சந்தைகளில் இரண்டில் மட்டும் நடைபெறும் விற்பனைத் தொகை மட்டும்தான் நீங்கள் பார்ப்பது. அதுவும் இல்லாமல் இந்த தொகை வெறும் பங்குகளில் மட்டும் நடைபெறும் விற்பனைக்கானது. இது இல்லாமல் இன்னும் டெரிவேடிவ்ஸ்(Derivatives) வர்த்தகத்தையும் சேர்த்தால் இந்த தொகை சில லட்சம் கோடிகளைத் தாண்டும்.இப்படி எண்ணிப் பார்க்க முடியாத (எண்ணிப் பார்க்கவும் முடியாத) இந்தியப் பங்குச்சந்தைகளின் வளர்ச்சி ஒன்றும் நேற்றைய மழைக்கு இன்று முளைத்த காளான் போல சில மாதங்களிலோ, வருடங்களிலோ ஏற்பட்டது அல்ல. இது கிட்டத்தட்ட இருநூறு வருட சரித்திரம். இந்தியாவில் பங்குச் சந்தைகளின் மொத்த பரிணாம வளர்ச்சியையும் ஐந்து நிலைகளாகப் பிரிக்கலாம்.
இதில் முதல் நிலை என்பது இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் வர்த்தகம் செய்யத் தொடங்கியபோதே ஆரம்பித்து விட்டது. இது 1800களின் துவக்கத்தில். அப்போது பருத்தி உற்பத்தி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதில் செல்வந்தர்கள் ஆர்வம் காட்டினர்.முக்கியமாக அன்றைய பம்பாய் பங்கு வர்த்தகத்தின் முக்கிய மையமாக அமைந்தது. ஆனால் அப்போது பங்கு வர்த்தகம் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக இல்லை, கிட்டத்தட்ட நமது கிராமங்களின் மாட்டுச்சந்தைகளில் கைகளைத் துண்டால் மூடிக்கொண்டு பேரம் பேசி வியாபாரத்தை முடிப்பதுபோல்தான் பங்குவர்த்தகமும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை கூடக்கூட, மற்ற தொழில்களைப் போலவே இதிலும் கமிஷன் அடிப்படையில் வியாபாரத்தை முடித்து தரும் தரகர்கள் (ஷேர் புரோக்கர்) சந்தைக்குள் வந்தார்கள். இவர்கள் "குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன்" என்று வாங்குபவர்களிடத்திலும் "நல்ல விலைக்கு விற்றுத் தருகிறேன்" என்று விற்பவர்களிடத்திலும் பேசி கமிஷனாக பெரும் தொகை சம்பாதித்தனர். ஆனாலும் இந்த தரகர்கள் வியாபாரம் செய்வதற்கு நிலையான ஒரு இடம் இல்லாமல் ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் கூடி நின்று வர்த்தகம் செய்து வந்தார்கள். இறுதியாக 1854ல் அனைவரும் கலந்து பேசி இன்று மும்பைப் பங்குச்சந்தை இருக்கும் புகழ் வாய்ந்த "தலால் தெரு" (Dalal Street )வில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்தனர்.பங்கு வர்த்தகத் தொழில் வளர வளர தரகர்களின் எண்ணிக்கையும் பெருகியது.1862-1863ல் இது போன்ற தரகர்களின் எண்ணிக்கை சுமார் 250 ஆக இருந்தது.
இந்த 250 தரகர்களும் தங்களுக்கென்று ஒரு சங்கமோ அமைப்போ இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தபோது, பங்குச்சந்தை வளர்ச்சியின் இரண்டாம் நிலை துவங்கியது. 1875ஆம் ஆண்டில் "சுதேசி பங்குத்தரகர்கள் கூட்டமைப்பு" (Native Shares and Stock Brokers Association ) என்ற அமைப்பு துவக்கப்பட்டது.. இதுதான் இன்று உலகின் மிகப் பழமையான பங்குச்சந்தைகளில் ஒன்றும், உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட பங்குச்சந்தை என்று பெருமை பெற்றதுமான மும்பைப் பங்குச்சந்தையாக பின்னாளில் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1908ல் கொல்கத்தா பங்குச்சந்தையும், 1940ல் உத்தரப்பிரதேசம் மற்றும் நாக்பூர் பங்குச்சந்தையும், 1944ல் ஹைதராபாத் பங்குச்சந்தையும் தொடங்கப்பட்டன. இந்திய சுதந்திரத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் எட்டு பந்குச்சந்தைகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும் இதில் பெரும்பான்மையான பங்குச்சந்தைகள் "Securities Contracts (Regulations) Act " அங்கீகாரம் பெறாததால் மிகவும் பரிதாபமான நிலைமையிலேயே இருந்தன. பின்னாளில் 1980ல் மேலும் பல பங்குச் சந்தைகள் துவக்கப்பட்டு இன்றைய தேதிக்கு அங்கீகாரம் பெற்ற பங்குச்சந்தைகள் மட்டுமே 22 உள்ளன. இருந்தாலும் மொத்த பங்குவர்த்தகத்தின் பெரும்பான்மையான சதவிகித வர்த்தகம் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகளிலேலேயே நடைபெறுகிறது,
1970களில் பங்கு வர்த்தகம் என்பது ஓரளவிற்கு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக மாற்றம் பெற்று விட்டாலும், பங்குச்சந்தை என்பது பெரும் பண முதலைகளும் நிதி நிறுவனங்களும் விளையாடும் களமாகவே இருந்தது. மத்தியவர்க்க சாதாரண குடிமக்கள் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலையிலேயே இருந்தனர். பெரும்பான்மையான 'மிடில் கிளாஸ்' மக்கள் பங்குவர்த்தகம் என்பதை சீட்டாட்டம் மற்றும் குதிரை ரேஸ் போல ஒரு சூதாட்டமாகவே பார்த்தனர். இப்போது இருப்பதைப் போல ஆன் லைன் வர்த்தகம் புழக்கத்தில் இல்லாத காலம் அது. பங்குகள் வாங்க வேண்டும் என்றால் புரோக்கருக்கு தொலைபேசியில் பேசியோ அல்லது நேரில் சென்றோதான் வாங்க வேண்டும். பங்குவர்த்தகம் செய்த கொஞ்சமே கொஞ்சம் மிடில் கிளாஸ் மக்களும் தொலைபேசியில் புரோக்கருடன் பேசும்போது வீட்டுக்குத தெரியாமல் கள்ளக்காதலியுடன் பேசுவது போல மெதுவான தொனியில்தான் பேசினர். அதனையும் மீறி வீட்டுக்காரிக்குத் தெரிந்துவிட்டால் "எத்தனை நாளாய் இந்த கெட்ட பழக்கம்" என்று முறைப்போடு சேர்த்து ராத்திரி சாப்பாடு "கட்" ஆவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த மத்தியவர்க்க மக்கள் பங்குகளில் முதலீடு என்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியதுதான் பங்குச் சந்தை வளர்ச்சியின் மூன்றாம் நிலை. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்று ஒருவரை சுட்டிக் காட்டலாம். அவர் திரு.திருபாய் அம்பானி. பங்குச்சந்தையின் வளர்ச்சியைப் பொருத்தவரை அதனை "திருபாய்க்கு முன்னால்"(தி,மு) என்றும் "திருபாயக்குப் பின்னால்"(தி.பி) என்றும் இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். பங்குச் சந்தையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.
திருபாய் அம்பானியின் வாழ்க்கையைக் கருவாக வைத்து மணிரத்னம் இயக்கிய "குரு" திரைப்படத்தில் குருவாக நடித்த அபிஷேக் பச்சன் பேசுவதாய் ஒரு வசனம் வரும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கு பணத்துக்கு என்ன செய்யப் போகிறாய் என்ற தனது மைத்துனனின் கேள்விக்கு "நாம் எதுக்கு பாங்க் கிட்ட கை ஏந்தணும்? மக்கள் கிட்ட போவோம். பத்து ரூபாய் குடுக்குறியா? உன்னைப் பார்ட்னர் ஆக்குறோம்னு சொல்லுவோம்." என்று பதில் சொல்வதாய் இருக்கும் அந்த வசனம். உண்மையில் நடந்ததும் அதேதான். அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1977ல் முதன் முறையாக தனது பங்குகளை பொதுமக்களுக்கு IPO ( Initial Public Offering ) முறையில் விற்பனை செய்ய முன்வந்தபோது அம்பானி குறிவைத்தது பெரும் செல்வந்தர்களையோ அல்லது நிதி நிறுவனங்களையோ அல்ல. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தனக்குத் தெரிந்த மத்தியவர்க்க குடிமக்களைத்தான். "உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்யுங்கள். நிறுவனம் வளர வளர உங்கள் முதலீடும் பெருகும்" என்று கிராமம் கிராமமாய் சென்று அம்பானி செய்த பிரச்சாரம் நல்ல பலன் அளித்தது.பலரும் பங்குகள் வாங்க முன்வந்தார்கள். 1970களில் மிகப் பெரிய IPO விநியோகமாக ரிலையன்ஸ் IPO அமைந்தது. நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தை பெரும் மைதானத்தில் நடத்தும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை இருந்தது. நிறுவனமும் ஏமாற்றாமல் டிவைடண்டுகள், போனஸ்கள் என்று தவறாமல் கொடுத்ததோடு பங்குகளின் விலையும் சரசரவென உயர்ந்தன. இது மேலும் பல மத்திய வர்க்க மக்களை பங்குச்சந்தையின் பக்கம் இழுத்தது. இந்தியர்களில் "மத்திய வர்க்க முதலீட்டாளர்கள்" என்னும் புதிய பிரிவினர் உருவாக திருபாய் காரணமாக இருந்தார். இப்படி தி.மு.க்கு முன்பாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த பங்குச் சந்தையின் வளர்ச்சி தி.பி யில் வேகமாக நடை போட ஆரம்பித்தது.
வேகமாக நடைபோட ஆரம்பித்த பங்குச்சந்தையின் வளர்ச்சி ஓட்டம் எடுக்க ஆரம்பித்த நான்காம் நிலை சரியாக 1992ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தியதி தொடங்கியது. இந்த நாளில்தான் பொருளாதார தாராளமயமாக்கலின் அடிப்படையில் FII எனப்படும் அந்நிய நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors) இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. 1992ல் மிகுந்த கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கப்பட்ட அந்நிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை காலப்போக்கில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதின் விளைவாக எத்தனையோ மடங்கு பெருகின.இன்றைய தேதிக்கு SEBI -யால் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய நிதி நிறுவனங்கள் மட்டுமே 1757 உள்ளன. இன்று பங்குச்சந்தைகளை இயக்குவதில் பெரும்பங்கு வகிப்பவை இந்த அந்நிய நிதி நிறுவனங்கள்தாம். ஒரு நாளின் வர்த்தகத்தில் பங்குச்சந்தைக் குறியீடுகள் உயர்வதும், சரிவதும் இந்த அந்நிய நிறுவனங்களின் நடவடிக்கையைப் பொறுத்தே அமைகின்றன. இந்த நிறுவனங்களின் வர்த்தகங்கள் பல கோடிகளில்தான் இருக்கும். ஒரு நாளின் மொத்த டர்ன் ஓவரில் சுமார் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக வர்த்தகம் செய்பவை இந்த நிறுவனங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 2012 டிசம்பர் நிலவரப்படி, இந்த அந்நிய நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து இந்தியாவில் பங்குச்சந்தையில் செய்துள்ள மொத்த முதலீடு 625000 கோடிகள். அதிலும் கடந்த ஆண்டில் மட்டுமே இவர்களது மொத்த பங்குச்சந்தை முதலீடு 125000 கோடிகள். அதே ஆண்டில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி போன்ற பங்குச்சந்தைக் குறியீடுகளின் வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பங்குச்சந்தை வளர்ச்சியில் FII -யின் தாக்கம் புரியவரும்.
ஓட்டம் எடுத்த பங்குச்சந்தையின் வளர்ச்சி இறக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்த ஐந்தாம் நிலை துவங்கியது 1990களின் மத்தியில். அப்போது பங்குவர்த்தகம் செய்வது அத்தனை எளிதல்ல.பங்குகள் பேப்பர் வடிவில் இருந்த காலம். உங்களுக்கு ஒரு நிறுவனத்தின் பங்குகள் வாங்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் கணக்கு வைத்துள்ள புரோக்கரிடம் தொலைபேசியிலோ அல்லது நேரில் சென்று பேசியோ விலை விசாரிக்கவேண்டும். அவர் சரியான விலையைச் சொல்லலாம் அல்லது விலையைக் கொஞ்சம் கூட்டியோ குறித்தோ கூட சொல்லலாம். அந்த விலை உங்களுக்கு சரியெனப்பட்டால் எத்தனை பங்குகள் வேண்டும் என்று சொல்லி பணத்தினைக கொடுத்துவிடவேண்டும். அவர் அவருக்கு தெரிந்த மற்ற புரோக்கர்களிடம் பேசி உங்களுக்கு வாங்கித்தருவார். அந்த பங்குகள் பேப்பர் கட்டுகளாய் விற்றவரிடத்தில் இருந்து அவரது புரோக்கருக்குப் போய், அந்த புரோக்கரிடத்தில் இருந்து உங்கள் புரோக்கரிடத்தில் வந்து, பின்னர் உங்கள் புரோக்கரிடம் இருந்து உங்கள் வீட்டு முகவரிக்கு டெலிவரி செய்யப்படுவதற்குள் சில வாரங்கள் ஆகிவிடும். அதற்குள் நீங்கள் வாங்கிய பங்குகளின் விலை குறைந்து போகக் கூட வாய்ப்புகள் அதிகம். இந்த நடைமுறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது இணையதள கலாச்சாரம். இன்டர்நெட் அனைத்து துறைகளிலும் புகுந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த காலம். பங்குவர்த்தகத் துறையையும் அது விட்டு வைக்கவில்லை. 1993ல் தொடங்கப்பட்ட தேசியப் பங்குச்சந்தை (NSE) பங்குவர்த்தகத்தை இணையதளம் மூலமாக செய்யும் வசதியைக் கொண்டு வந்தது. முதலாவதாக பேப்பர்கள் வடிவில் இருந்த பங்குப் பத்திரங்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டன. விற்பனையாகும் பங்குகளின் விலை, விற்பனைக்கு உள்ள பங்குகளின் எண்ணிக்கை போன்றவற்றை ஒளிவு மறைவின்றி தெளிவாக கம்ப்யூட்டர் திரையில் பார்க்க முடிந்தது. புரோக்கரிடம் உள்ள உங்களது கணக்கில் பணம் இருந்தால் போதும். எத் தனை பங்குகள் வேண்டுமானாலும் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் ஒரு மவுஸ் க்ளிக்கில் வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வர்த்தக நடைமுறையை எத்தனையோ மடங்கு எளிமைப் படுத்திய இந்த ஆன் லைன் வர்த்தகமுறை பலதரப்பட்ட மக்களையும் பங்குச்சந்தைக்குள் இழுத்துக்கொண்டு வந்தது. குறிப்பாக பங்குச் சந்தைப் பக்கம் நெருஙகாமலே இருந்த குடும்பத் தலைவிகளும் மற்ற பெண்களும் கூட பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.
பங்குச்சந்தையின் வளர்ச்சி 200 வருட சரித்திரமாக இருந்தாலும் 90 சதவிகித வளர்ச்சி கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்டதே என்றால் மிகையாகாது. இத்தனை வளர்ச்சிக்குப் பின்னரும் இந்தியாவில் பங்குவர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை பத்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில் இதுவே 90 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். எனவே நாமெல்லாம் புகுந்து விளையாட பங்குச்சந்தைக் களத்தில் இன்னும் நிறைய இடம் காலியாகவே உள்ளது எப்படி விளையாட்டில் ஜெயிப்பது என்பதையும், காயம் படாமல் விளையாடுவது எப்படி என்பதையுமே இந்த தொடர் முழுக்க பேசப் போகிறோம். முதல் படியாக வர்த்தகம் செய்வதற்கு ஒரு பங்கு புரோக்கரிடத்தில்(அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புரோக்கர்களிடம் கூட) ஒரு வர்த்தக கணக்கு தொடங்கவேண்டும். இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் நல்ல புரோக்கரை எப்படி தேர்வு செய்வது என்பதையும் பார்ப்பதற்கு முன்பாக எப்படியெல்லாம் பல வகைகளில் பங்கு வர்த்தகம் செய்யலாம் என்பதை அடுத்த வாரம் சுருக்கமாகப் பார்க்கலாம்.
Published by WebStory
0 comments:
Post a Comment