இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை எனப் பாராட்டும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்புகள் வாயிலாகவும், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப் பிரமாதமாக வெளிவந்திருக்கிறது பாலாவின், "பரதேசி" என்றால் மிகையல்ல!
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு முந்தைய காலகட்டத்து கதை! அதுவும், இன்று நாம் சுறுசுறுப்பாக இருக்க சுள் ளென்ற சுவையுடன் அருந்தும் தேனீர்பானமும், தேயிலை தோட்டங்களும் பிறந்த கதையை சொல்லும் பெருங்கதைதான் "பரதேசி படம் மொத்தமும்!
சென்னை புறநகரப் பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க நண்டு, சிண்டுகளோடு குடும்பம் குடும்பமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் தேயிலை தோட்டங்களுக்கு கூட்டி வரப்பட்ட கிராம மக்களை, கூண்டோடு கொத்தடிமைகளாக்கி ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டிய கங்காணிகளின் கதை!
ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்து கதற வைக்கும் கண்ணீர் கதைகளில் இதுவும் ஒன்று! அகப்பட்ட அடிமை இந்துக்களிடம், கிறிஸ்துவை பரப்பிய ஆங்கிலேய அடிவருடிகளின் கதை..., இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பரதேசியின் கதையையும், களத்தையும்.
ஆனால் இதுமாதிரியானதொரு அடிமைகளின் கதையில் ஓர் அழகிய காதலையும், அவர்களின் பிரிவையும் கலந்து கட்டி பரதேசியை கலர்புல்லாகவும், காண்போர் மனதை கரைக்கும் படியாகவும் செய்திருக்கும் பாலாவின் சாமர்த்தியத்திற்கு அவரே நிகர்.
ஒட்டுப்பொறுக்கி, குசுப்பொறுக்கி என ஏகப்பட்ட பட்டப்பெயர்களுடன் வெள்ளந்தி கிராமத்து இளைஞன் ராசாவாக அதர்வா முரளி. சட்டி கிராப்பும், சாக்கு துணி சட்டையும், அழுக்கு பஞ்சகட்ச வேஷ்டியும் சகிதமாக ஊரில் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் தண்டோரா போட்டு வயிற்றை கழுவும் அந்தக்கால இளைஞனாக அறிமுகமாகும் அதர்வா, நாலுகாசு சம்பாதித்து, நல்ல பெயர் எடுக்க, ஆதரித்த அம்மா வழி பாட்டியையும், காதலித்த அங்கம்மா வேதிகாவையும் அம்போ என விட்டுவிட்டு, கங்காணியின் பேச்சை நம்பி ஊர் மொத்தத்தையும் கூட்டிக்கொண்டு வேலை தேடி போகும் காட்சிகளில் நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறார் என்றால், அதன்பின் வரும் அடிமைத்தன காட்சிகளில் அனைவரது கண்களிலுமே நீரை வரவழைத்து விடுகிறார்.
நடிப்பில் அவரது அப்பா முரளியை மிஞ்சியிருக்கிறார் மனிதர். இதையெல்லாம் பார்க்க இன்று நடிகர் முரளி இல்லையே என்ற ஆதங்கம் நம்முள்ளும் எழுகிறது. "ஹேட்ஸ் ஆப் அதர்வா. அதர்வாவுக்கு பல விருது நிச்சயம்! அதர்வாவுக்கு மட்டுமல்ல, இப்படத்தின் லைட்பாய்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளில் தொடங்கி இயக்குனர் பாலா வரை அனைவருக்கும் தேசிய விருது உள்ளிட்ட அனைத்து விருதுகளையும் தரலாம்!
கிராமத்து அங்கம்மாவாக வேதிகா, அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண்டுங்கெட்டானான அதர்வாவின் கருவை தன் வயிற்றில் சுமந்து, தனது வீட்டாரால் ஒதுக்கிவைக்கப்படுவதும், பின் க்ளைமாக்ஸில் அதர்வாவுக்கு பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார்.
வேதிகா இப்படி என்றால் இன்னொரு நாயகி தன்ஷிகாவோ மரகதம் கேரக்டரில் அதர்வாவிற்கு முந்தைய செட் அடிமையாக ஒரு பெண் குழந்தையுடன், புருஷனை தொலைத்துவிட்டு படும்பாடு சொல்லிமாளாது.
மற்ற இயக்குனர்களிடமிருந்து வேறுபட்டு பாலா, அதர்வாவிற்கும், தன்ஷிகாவிற்கும் காதலை கண்சிமிட்ட விடாமல் நல்ல நட்புடன் விட்டிருப்பது பலே சொல்ல வைக்கிறது. இதுநாள்வரை பாலா பட நாயகர்கள் அளவு, பாலா பட நாயகிகள் பேர் வாங்கியதில்லை எனும் குறையை போட்டி போட்டுக்கொண்டு போக்குவார்கள் தன்ஷிகாவும், வேதிகாவும் என நம்பலாம்.
கங்காணி - ஜெர்ரி, அவரது மனைவியாக வரும் "அங்காடித்தெரு சிந்து, தங்கராசு, உதய் கார்த்திக், கருத்தக்கன்னி - ரித்விகா, டாக்டர் வேஷம் போடும் குரூஸ்-மோகன், பாட்டி-கச்சம்மாள், டாக்டர் பரிசுத்தம்-சிவசங்கர், ஆங்கிலேய துரை - டிம் உள்ளிட்டவர்களும் பரதேசியில் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
பரதேசி பின்னால் நடக்க இருக்கும் கதையை முன்கூட்டியே சொல்லும் வைரமுத்துவின் வைர வரிகளும், அதற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரின் இனிய இசையும், பாடல்கள் இசை போன்றே பின்னணி இசையும், இது பாலாவின் பரதேசியா, ஜி.வி.பிரகாஷ்குமாரின் பரதேசியா என கேட்க தூண்டுகின்றன. அதேமாதிரி செழியனின் செழுமையான ஒளிப்பதிவும், நாஞ்சில் நாடனின் வசனமும், கிஷோரின் "நச் என்ற படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
ஆக மொத்தத்தில், பாலாவின் எழுத்து-இயக்கத்தில் "பரதேசி" - தமிழ்சினிமா ரசிகர்களுக்கு - "புதுருசி!"
Published by WebStory
0 comments:
Post a Comment