ஒரு மனிதன் தன்னை உணரும்போதுதான் உள்நிலையிலும் வெளிநிலையிலும் முழுமையடைகிறான். அதுவரை அது வேண்டும் இது வேண்டும் என்று பிச்சைக்காரன் போல ஏங்கிக் கொண்டிருக்கிறான். நினைத்தது கிடைத்தாலும் பிறகு வேறொன்றிற்காக ஏங்க ஆரம்பித்து விடுகிறான்.
அவனுடைய ஏக்கம் மூச்சு நிற்கும்போது கூட பூர்த்தியாவதில்லை. நாளை என் வாழ்க்கை முழுமையடையும் என்ற நினைவிலேயே இறுதிவரை வாழ்ந்து போகிறான்.
16 வயதில் ஆரம்பித்து 32 வயதிற்குள் பாதி உலகத்தை வென்றபிறகும்கூட, அலெக்ஸாண்டர், இன்னமும் பாதி உலகம் வெல்லவில்லையே என்ற ஏக்கத்தோடுதான் இறந்தான். தன் ஆசைக்காக அப்பாவி மனிதர்களை 16 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் அவனிடம் அறிவு வெளிப்படவில்லை.
அவனை நீங்கள் ‘அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்று அழைக்கிறீர்கள். பாடப்புத்தகங்கள் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கும் அப்படி போதிக்கிறீர்கள். மக்களின் நலனுக்கு அவன் என்ன செய்தான், சொல்லுங்கள்! துரதிர்ஷ்டவசமாக உங்கள் சிந்தனை அந்த வழியில்தான் செல்கிறது.
ஒவ்வொருவரும் மனதளவில் அலெக்ஸாண்டராகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் இல்லாமல் இருக்கிறீர்கள். இப்படி நீங்கள் அலெக்ஸாண்டராக இருக்கும்வரை, ஒவ்வொருவரையும் ஏதாவது ஒருவழியில் துன்புறுத்தி தான் விருப்பப்பட்டதை அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும்வரை, வலியும் துன்பமும்தான் இந்த உலகத்தின் வழியாக இருக்கும். இப்படித்தான் உங்கள் விழிப்புணர்வு இருக்குமென்றால், உங்கள் செயல்கள் இந்த நோக்கில்தான் அமையும் என்றால், இந்த உலகம் அழகானதாக இருக்கமுடியாது.
உங்கள் வரலாற்று புத்தகங்களில் கூட அலெக்ஸாண்டருக்கு பல பக்கம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் மனித நலனுக்காகவே உழைத்த ஞானமடைந்த புத்தருக்கோ சில வரிகள் மட்டுமே. அதுவும் கூட அவன் ஒரு அரசனாக இருந்தான் என்ற காரணத்திற்காக மட்டுமே.
உண்மையில் உங்கள் நோக்கம் மனிதநலனை நோக்கித்தான் முழுமையாக இருக்க வேண்டும். எப்போது உங்களை முழுமையாக உணர்கிறீர்களோ அப்போது உங்கள் நோக்கம் மற்றவர் நலன்குறித்தே இருக்கும். எனவே உங்கள் எண்ணமும் செயலும் உணர்தலை நோக்கியே மாற வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு எனது ஆசிகள் எப்போதும் இருக்கும்.
0 comments:
Post a Comment