பெற்றோர் நிர்ப்பந்தத்தில் பணக்கார குண்டு பெண்ணை மணந்து தவிக்கிறார் வினய். மனைவி, மாமியார் கொடுமையில் சிறைபட்டு கிடக்கிறார் சத்யன். தந்தையை எதிர்த்து பேசிய மனைவியால் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அரவிந்த் ஆகாஷ்.
நிம்மதி இழந்த மூவரும் திருமணத்துக்கு தயாராகும் நண்பர் சாம்ஸை அழைத்துக் கொண்டு பெங்களூர் பயணப்படுகின்றனர். அங்கு வசிக்கும் பணக்கார நண்பன் பிரேம்ஜி உதவியோடு குடி, கும்மாளம் என இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் லட்சுமிராயை சந்தித்து காதல் வயப்படுகின்றனர். ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் லட்சுமிராய் மனதில் இடம்பிடிக்க காய் நகர்த்துகின்றனர். அப்போது சதி வலையொன்றில் சிக்குகின்றனர். அதில் இருந்து மீண்டு மனைவியுடன் சேர்ந்தார்களா என்பது மீதிகதை…
பவர் ஸ்டார் சீனிவாசன் அழகிகளுடன் குத்தாட்டம் போடுவதுடன் படம் துவங்குகிறது. தற்கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்காக குண்டு பெண்ணை மணக்கும் வினய் அவருடன் வாழ பிடிக்காமல் வேலைக்காரி மேல் ஜொள்ளுவிடுவது ரகளை.
மனைவிக்கு சேலை துவைத்தல், சமையல் செய்தல் என வரும் சத்யன் கலகலக்கிறார். நண்பர்கள் பெங்களூருக்கு பிரம்மச்சரிய டூர் அடித்ததும் கதை ஜாலிக்கு தாவுகிறது. லட்சுமிராய் குளிர்ச்சியாய் வருகிறார். நீச்சல் குளத்துக்குள் நீந்தி இளம் நெஞ்சங்களுக்குள் நெருப்பு மூட்டுகிறார்.
நண்பர்களை தூக்கத்தில் கட்டிப்போட்டு லட்சமிராயை வசப்படுத்த சத்யன் முயற்சிப்பதும் அவருக்கு முன்னால் நண்பர்கள் அங்கு வந்து நிற்பதும் சிரிப்பு சரவெடி…
கரடி காமெடி தியேட்டரை சிரிப்பில் உலுக்குகிறது. துப்பாக்கி அழகிகளை அடியாட்களாக வைத்து பணக்காரத்தனம் காட்டும் பிரேம்ஜி கலகலப்பூட்டுகிறார். பில்லா, ரங்கா, சோச்சடையான் என படங்களின் தலைப்பை கேரக்டர்களுக்கு சூட்டியிருப்பது… பழைய படங்களின் பாடல்களை காட்சிகளுக்கு ஏற்ப இடை செருகலாக விட்டு இருப்பது சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது.
வில்லி மாமியாராக வரும் மந்த்ரா இளமை படையல்… கராத்தே சண்டையும் போடுகிறார். குண்டு பெண்ணாக வரும் கீதாசிங், போலீஸ் அதிகாரி பல்ராம் நாயுடுவாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், சாமியாராக வரும் யோகி தேவராஜ், டி.பி. கஜேந்திரன், மனோபாலா காமெடி விருந்தில் குதூகலிக்க வைக்கின்றனர்.
லாஜிக்கை மறந்து சிரிப்பை மட்டும் முன்னிறுத்தி ஜாலியான கதையை கலகலப்பாக நகர்த்தி ஜமாய்க்கிறார் இயக்குனர் பி.டி. செல்வகுமார். கே.இசை, செல்லத்துரை ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
0 comments:
Post a Comment