Tuesday, March 26, 2013

பணச்சந்தை - மெனு கார்ட் - 5

Andhimazhai Image 

சார், இந்த ஷேர் மார்கெட் எங்க இருக்கு? அங்கே என்ன பொருள் ச்சீப்பா கிடைக்கும்? என்று கேட்கும் அளவுக்குத்தான் எனது பங்குச் சந்தை அறிவு இருந்தது. 2004 ஆம் ஆண்டு வரை. எனக்குள் பங்குச்சந்தை ஆர்வம் என்ற விதையை விதைத்தவரின் பெயர் திரு.சுதிர் குமார். நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பொது மேலாளர்.அவர் நிறைய விஷயங்களில் எனக்கு குரு.எனக்கு எப்போதாவது அரிதாக நேரம் கிடைக்கும் சமயங்களில் அவரது அறைக்குச் சென்று வேலை விஷயமாக பேசிக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் நான் பேசும்போது அவரது வாய் மட்டும் "உம" கொட்டிக்கொண்டு இருக்கும். கண்கள் கம்ப்யூட்டர் திரையில் பதிந்தவாறு இருக்கும். திரையில் பச்சை, சிவப்பு, நீலம் என்று கலர் கலராய் என்னென்னமோ எண்கள் நொடிக்கு பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென பரபரப்பு தொற்றிக்கொண்டவராய் கம்ப்யூட்டரில் ஒரு ஸ்க்ரீனைத் திறந்து அதில் உள்ள இன்புட் பாக்ஸ்களில் எதையோ டைப் செய்து மவுஸ் பட்டனை அழுத்துவார்.. பின்னர் நிதானமாக எனது பக்கம் திரும்பி "இப்போ சொல்லுங்க. என்னமோ பேசிட்டு இருந்தீங்களே என்பார். நான் மறுபடி "Yesterday what  happened you know ?" என்று புதிதாய் ஆரம்பிப்பேன். கொஞ்சம் நேரம்தான். மறுபடி வெறுமனே 'உம' கொட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் திரையை முறைக்க ஆரம்பித்து விடுவார். மீண்டும  ஒரு பரபரப்புடன் முன்னே செய்த மாதிரியே எதையோ டைப் செய்து மவுஸ் பட்டனைக் 'கிளிக்'குவார். முகத்தில் ஒரு பெரிய சாதனையை முடித்த திருப்தியுடன் என் பக்கம் திரும்பி ,'நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' ஹீரோ மாதிரி மீண்டும் "இப்போ சொல்லுங்க. என்னமோ பேசிட்டு இருந்தீங்களே" என்று அதே கேள்வியைக் கேட்பார். ஆர்வக்கோளாரோ, இல்லையென்றால் இப்படிக் கடுப்பு ஏற்றுகிறாரே என்ற கோபமோ, "அப்பிடி பேசுவதைக் கூட கவனிக்காமல் கம்ப்யூட்டரில் என்ன சார் செய்து கொண்டு இருந்தீர்கள்?" என்று கேட்டு விட்டேன்.

"ஒன்றும் இல்லை. பத்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு 'ஷேர் ட்ரேடிங்' கில் 300 ரூபாய் சம்பாதித்தேன்" என்றார். 3 சதவிகித லாபம் வெறும் பதினைந்து நிமிடங்களில் என்பது எனக்குள் பெரிய ஆர்வத்தைத் தூண்டி விட்டது.

"சார். இது எப்படி செய்ய வேண்டும். எனக்கும் கொஞ்சம் கம்ப்யூட்டர் தெரியும். சொல்லிக் கொடுங்களேன்" என்றேன்.

"முதலில் யாராவது ஒரு புரோக்கரிடம் ஒரு வர்த்தகக் கணக்கு (Trading Account ) ஆரம்பிக்கவேண்டும் "

"நீங்களே ஒரு நல்ல புரோக்கர் பெயர் சொல்லுங்கள் சார்"

"வேண்டாம். நீயாகவே இன்டர்நெட்டில் தேடித் தெரிந்துகொள்" என்று சொல்லி முடித்துக் கொண்டார். எங்கே அவர் உதவி செய்து நான் அவரை விட சம்பாத்தித்து விடுவேன் என்ற பொறாமையோ என்னமோ என்று நினைத்துக் கொண்டேன். அன்றே இணையதளத்தில் தேடுதலை ஆரம்பித்தேன். முதல் முயற்சியிலேயே "Sharekhan" என்ற பங்குத்தரக நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த Enquiry பக்கத்தில் எனது பெயர், வயது, மொபைல் நம்பர் என்று கேட்ட விவரங்களை எல்லாம் டைப் செய்து அனுப்பி வைத்தேன். சரியாக பத்து நிமிடங்களில் போன் வந்தது. எப்போது வந்தால் பார்க்க முடியும் என்று கேட்டனர். "உடனே வர முடியுமா?" என்று கேட்டேன். இன்று சாயங்காலமே சுதிர் குமாரிடம் சென்று "நீங்கள் உதவவில்லை என்றால் என்ன?நான் அக்கவுண்ட் ஆரம்பித்து விட்டேன்" என்று சொல்லவேண்டும் போல் ஒரு வெறி.அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியும் தாமதம் செய்யாமல் தேவையான பத்திரங்களோடு வந்துவிட்டார். "மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? விட்டா மடுவுக்கு ஒன்னு கேப்பீங்க" என்ற  வடிவேலுவின் ஜோக்கை  நிஜமாக்குவது போல பக்கத்துக்கு இரண்டு, மூன்று கையெழுத்துகள் வாங்கினார். " "உடனே ட்ரேடிங் செய்ய ஆரம்பித்து விடலாமா? என் கையில் 2000 ரூபாய் இருக்கிறது." என்று கேட்டேன்.அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே" சார். இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரிபார்த்து அக்கவுண்ட் ஓப்பன் செய்யவே ஒரு வாரம் ஆகிவிடும் . எப்படியும் மினிமம் பத்து நாட்கள் ஆகும் என்றார். கொஞ்சம் ம் ஏமாற்றமாகி விட்டது.

"எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் உதவ முடியுமா? என்றேன்.

"அது ரொம்ப ஈஸி  சார். உங்களுக்கு அக்கவுண்ட் விபரங்கள் வரும்போது கூடவே ஒரு கையேடும் (Mannual) வரும். அதில் எப்படி ட்ரேடிங் செய்யவேண்டும் என்ற எல்லா விபரங்களும் இருக்கும். இங்கிலீஷ் படிக்கத் தெரிந்தால் போதும். பங்குகள் வாங்கவேண்டும் என்றால் "Buy " க்ளிக் செய்யவேண்டும். விற்கவேண்டும் என்றால் "sell ": க்ளிக் செய்யவேண்டும் "

அடுத்த ஒரு வாரத்தில் அக்கவுண்ட் விபரங்கள், பாஸ் வேர்ட் எல்லாமே கூரியரில் வந்து விட்டன. அன்று சனிக்கிழமை. பங்குச்சந்தை விடுமுறை. ஒரு வாரம் பொறுத்தவனுக்கு இரண்டு நாட்கள் நகருவது பெரும்பாடாய் இருந்தது. திங்கள் கிழமை சரியாய் சந்தை ஆரம்பிக்கும் நேரத்தில் கம்ப்யூட்டர் முன்னால்  இருந்தேன். கையேட்டில் உள்ளதைப் படித்துப் படித்து தேவையானவற்றை செய்து முடித்தேன். இப்போது மானிட்டரில் கலர் கலராய் எண்கள். அகர வரிசைப் படி பல நிறுவனங்களின் பெயர்களும் மாறிக்கொண்டிருக்கும் பங்கின் விலைகளும். எந்த நிறுவனத்தில் ட்ரேடிங் பண்ணலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம். எனது நியூமெராலஜி அறிவை உபயோகித்தால் என்ன என்று ஒரு யோசனை. எனது பெயர், அன்றைய தேதி, நிறுவனத்தின் பெயர் எல்லாவற்றுக்கும்        நியூமெராலஜி போட்டுப் பார்த்ததில் ஆந்திரா வங்கி(Andhra Bank) நல்ல நிறுவனம் என்று வந்தது. அக்கவுண்டில் 2000 ரூபாய் மட்டும் வைத்திருந்தேன். ஒரு ஷேர் 77 ரூபாய் என்று 25 ஷேர்கள் வாங்கினேன். வாங்கிய கொஞ்சம் நேரத்தில் விலை மேலே மேலே பறந்து 81க்குப் போனது. எல்லாவற்றையும் விற்று விட்டேன். மொத்தம் 100 ரூபாய் லாபம். 5 சதவிகிதம். உடனே இண்டர்காமில் சுதிரை அழைத்து "சார். இன்று ஷேர் ட்ரேடிங் எதுவும் செய்தீர்களா? என்று கேட்டேன். அவர் "ICICI" ஷேர் வாங்கி ஒரு சதவிகித லாபத்திற்கு விற்றுவிட்டதாக சொன்னார். நான் ஆந்திரா பாங்க் ஷேர்களில் 5 சதவிகிதம் சம்பாதித்ததை சொன்னேன். நான் நியூமெராலஜி உபயோகித்ததை அவருக்கு சொல்லக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். இதற்கு அடுத்த நாள் மீண்டும் நியூமெராலஜி பயன்படுத்தி டாட்டா ஸ்டீல் நிறுவனப் பங்குகளை வாங்கி சுமார் 2 மணி நேரத்தில் 6 சதவிகிதம் லாபத்திற்கு விற்றேன்.

ஒரு நாளைக்கு 5 முதல் 6 சதவிகிதம். ஒரு மாதத்தில் தொகை இரு மடங்காகிவிடும். உடனே கம்ப்யூட்டரில் ஒரு எக்செல் ஷீட் திறந்து கணக்குகள் போட்டேன். ஒரு வருடத்தில் எவ்வளவு , இரண்டு வருடத்தில் எவ்வளவு என்று பார்த்ததில் கண்ணைக் கட்டியது.தொகை கோடிகளில் வந்ததது. இது தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டோமே என்று என் மீதே கோபம் வந்ததது. ஆனால் இத்தனை வருடங்களாய் வர்த்தகம் செய்யும் சுதிர் குமார் எதனால் இன்னும் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை என்ற கேள்வி வந்தது. அதற்கு காரணம் எனது நியூமெராலஜி அறிவும் முதலீட்டை சரியாக நிர்வாகம் செய்யும் திறமையும்தான் என்று என்னையே நான் பாராட்டிக்கொண்டேன். அடுத்த நாள் என் நியூமெராலஜி காலை வாரி விட்டு எல்லாம் 'புஷ்வாணம்' ஆகப் போகிறது என்று தெரியாமல் கற்பனையில் மிதந்தேன். வேலைக்குச் செல்லுபவர்களைப் பார்க்கும்போது "பாவம். பணம் சம்பாதிக்க வழி தெரியாமல் கஷ்டப்படுகிறார்களே என்று அநியாயத்திற்குப் பரிதாபப் பட்டேன். இரவு தூங்கும்போது ஒரு பெரிய நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நான் ஏர்கண்டிஷன் அறையில் இருப்பது போலவும், என்னுடைய பழைய "Boss"கள் எல்லாம் ரிஷப்ஷனில் கைகளில் பயோ-டாட்டாவுடன் வேலை கேட்டு வரிசையில் இருப்பது போலவும் எல்லாம் கனவுகள் வந்தன. கண்களில் கனவுகளுடன் ஒரு மிதப்பாக நான் எப்போதும் இருப்பது பார்த்து என் மனைவி"யாரவது பூசாரியிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்ளலாமா?" என்று பக்கத்து வீட்டு அக்காவிடம் யோசனை கேட்க ஆரம்பித்து விட்டாள். அதுவரை எனது இரண்டாவது மனைவி போல நான் நேசித்துவந்த எனது "மாருதி ஜென்" காரில் அலுவலகம் செல்லும்போது காரை யாருக்காவது கிடைத்த விலைக்கு விற்றுவிடவேண்டும் என்றும் அப்படியே சாயங்காலம் "Audi" ஷோ ரூம் போய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்றும்  தோன்றியது. கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கோமோ என்று மனதில் தோன்றினாலும் எனது அறிவும், வீணாய்ப்போன நியூமெராலஜியும் நம்பிக்கை கொடுத்தன.

அன்று ஷேர் ட்ரேடிங் பண்ணுவதற்கான நிறுவனத்தை நியூமெராலஜி சொல்லியபடி தேர்வு செய்துமுடிக்கும் நேரத்தில் Sharekhan அலுவலகத்தின் கஸ்டமர் கேரிலிருந்து போன் வந்தது. நான் எனது பங்கு வர்த்தகத்திற்கு sharekaan நிறுவனத்தை தேர்வு செய்ததற்கு நன்றி கூறி விட்டு கூடுதல் தகவல் ஒன்றையும் கொடுத்தனர். என்னிடம் இருக்கும் தொகையை விட நான்கு முதல் ஐந்து மடங்கு வரை நான் வர்த்தகம் செய்யலாம் என்றும் என்னிடம் இருக்கும் பணத்தை மார்ஜின் மணியாகக் கட்டினால் போதும் என்றார்கள். இதனை எதற்கு சுதிர் குமார் என்னிடம் சொல்லாமல் விட்டார். நான் ரொம்ப சம்பாதித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் என்று நானாகவே முடிவு செய்து கொண்டேன். 2000 ரூபாய்க்கு 100 ரூபாய் லாபம் என்றால் அதையே மார்ஜின் மணியாகக் காட்டி ஐந்து மடங்குத் தொகைக்கு வர்த்தகம் செய்திருந்தால் 500 ரூபாய் லாபம். 25 சதவிகிதம். இப்படியும் அள்ளிக்கொடுக்கும் ஒரு பிசினஸ் இருக்கிறதா? எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தேன். அன்றும் ஆந்திரா பாங்க் பங்குகள் வாங்கலாம் என நியூமெராலஜி சொல்லி இருந்ததால் மார்ஜின் உபயோகித்து 10000 ரூபாய்க்கு சுமார் 120 பங்குகள் வாங்கினேன். இன்றைக்கு சூப்பர் பம்பர்தான் என்று முடிவு செய்துகொண்டு வேலையை செய்துகொண்டே கம்ப்யூட்டர் திரையையும் அவ்வப்போது பார்த்த வண்ணம் இருந்தேன். 80 ரூபாய்க்கு வாங்கிய பங்குகள் 79, 78 என குறைந்து கொண்டே வந்தன. ஒன்றும் புரியவில்லை. கடைசியாக 3 மணிக்கு மீண்டும் Sharekaan அலுவலகத்திலிருந்து போன் செய்து "சார். நீங்கள் மார்ஜின் மணி உபயோகித்து நிறைய பங்குகள் வாங்கிவிட்டதால் எல்லாவற்றையும் விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்கள். அப்போது விலையைப் பார்த்தபோது 73ல் இருந்தது. 7 ரூபாய் நஷ்டத்தில் 120 பங்குகள் என்று 840 ரூபாய் நஷ்டம். இரண்டு நாளில் வந்த லாபம் போய் மேலும் நஷ்டம். சுதிர் குமாருக்கு போன் செய்து விஷயத்தை கிட்டத்தட்ட அழுதுகொண்டே சொன்னேன். அவர் கூலாக "இன்று விலை குறைந்தால் என்ன? வைத்திருந்து நாளைக்கு விற்று இருக்கலாமே" என்றார். எனக்கு ஆச்சர்யம்.

"இன்று வாங்கிய பங்குகளை நாளைக்கு விற்க முடியுமா சார்? என்று கேட்டேன்.

"நாளைக்கு என்று இல்லை. எத்தனை நாட்கள், மாதங்கள் கழித்து கூட விற்கலாம்" என்றார்.

"அப்படியிருந்தால் எதற்கு Sharekhan ஆட்கள் விற்க சொல்லி அவசரப்படுத்தினார்கள்?"

"நீ Intraday Trading என்று சொல்லி மார்ஜின் மணி உபயோகித்து இருப்பாய். மார்ஜின் மணி வைத்து ட்ரேடிங் செய்யும்போது அன்று சாயங்காலத்திற்குள் விற்றாகவேண்டும் என்றார்.

எனக்கு இரண்டு விஷயங்களில் அவர் மீது கோபம் வந்தது.
1)ஷேர்களின் விலை எப்போதும் ஏறிக்கொண்டே இருக்காது. அவ்வப்போது இறங்கவும் செய்யும் என்று அவர் சொல்லாமல் விட்டது.
2)வாங்கிய ஷேர்களை அன்றே விற்க வேண்டிய அவசியம் இல்லை. வைத்திருந்து எத்தனை நாட்கள் கழித்தும் விற்கலாம் என்று சொல்லாமல் விட்டது.

பங்கு வர்த்தகத்தில் Intraday Trading என்றும் Positional அல்லது Delivery Based Trading என்றும் இரண்டு வகைகள் உள்ளன என்று அப்போதுதான் தெரிந்தது. Intraday எனப்படும் அன்றே வாங்கி அன்றே விற்கும் வர்த்தகத்தில் மார்ஜின் பணம் பயன்படுத்தி 4 அல்லது 5 மடங்கு அதிகமாக வர்த்தகம் செய்யலாம் என்றும் , அன்று மாலைக்குள் வாங்கியதை விற்று (நஷ்டமானாலும் கூட) சரிக்கட்டி விட வேண்டும் என்றும் தெரிந்தது. அதே Delivery Based ட்ரேடிங்கில் நம்மிடம் இருக்கும் பணத்திற்கு மட்டும் வர்த்தகம் செய்யலாம் என்றும் அதனை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்திருந்து லாபம் வரும்போது விற்கலாம் என்றும் தெரிந்தது. அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் நான் சில முடிவுகள் எடுக்க காரணமாக இருந்தன. அதில் முக்கியமானது நியூமெராலஜியைத் தலை முழுகியது. இரண்டாவது அவசியமில்லாமல் பேராசைப்பட்டு மார்ஜின் பணம் உபயோகிக்கக் கூடாது என்பது.

அதன் பின்னர் பெரிய ஆசைகள் இல்லாமல் சில சமயம் Intraday , பல சமயங்களில் இன்று வாங்கி சில நாட்கள் வைத்திருந்து (Positional) லாபத்திற்கு விற்பது என்று கொஞ்சமாக செய்து வந்தேன். இந்நிலையில் எனது பங்குச்சந்தை ஈடுபாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவரை சந்திக்க நேர்ந்தது. நான் வசித்து வந்த அபார்ட்மெண்டில் முதல் தளத்தில் அவரது இல்லம்.(Flat ). அவர் பங்கு வர்த்தகம் செய்து வந்ததோடு ஒரு பங்குத்தரகரிடம் துணைத் தரகராகவும் (Sub புரோக்கர்) இருந்தார். அவரிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவேன். ஒரு நாள் பங்குச்சந்தை பெரிய அளவில் சரிந்தது. அன்று மாலையில் அவரைப் பார்த்தபோது கேட்டேன்.

"சார். இன்று  எவ்வளவு நஷ்டம்?"
"நஷ்டமா? இன்று இன்போசிஸ் நிறுவனப் பங்குகளில் பெரிய லாபம்." என்றார்.

எனக்குத் தெரிந்து அன்று இன்போசிஸ் விலை பெரிய அளவில் குறைந்திருந்தது. அப்புறம் எப்படி இந்த லாபம் என்று குழப்பம்.

"புரியவில்லையே சார். இன்று விலை ரொம்பவும் குறைந்துவிட்டதே"

"அதனால் என்ன? 100 ரூபாய்க்கு வாங்கி 105க்கு விற்றால் லாபம். அதே சமயம் 105க்கு விற்று 100க்கு மீண்டும் வாங்கினாலும் லாபம்தானே."

"லாபம்தான். ஆனால் அந்த நிறுவனப் பங்குகள் நம் கையில் இருக்க வேண்டுமே?"

"கையில் பங்குகள் இல்லாமலும் விற்கலாம். விற்றுவிட்டு அன்று மாலைக்குள் வாங்கி சரி செய்து விட வேண்டும். இதற்கு "Short Selling" என்று சொல்லுவார்கள்"

இது எனக்கு புதிய விஷயமாக இருந்தது.

"சார். எனக்குத் தெரிந்தது எல்லாம் இன்ட்ராடே ட்ரேடிங்கும் பொசிஷனல் ட்ரேடிங்க்கும்தான். இது புதியதாக இருக்கிறது." என்றேன்.

இதனை அடுத்து அவர் சொன்ன சில விஷயங்கள் பங்குச்சந்தையில் எனக்கு மேலும் ஆர்வத்தைக் கிளறியது இல்லாமல் நிறைய விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் தூண்டியது. முக்கியமாக பங்குச்சந்தை வர்த்தகம் என்பது எல்லோரும் நினைப்பது போல சூதாட்டம் அல்ல. புரிந்துகொண்டு செய்யும்போது மிக மிக பாதுகாப்பான தொழில் என்ற தெளிவு பிறந்தது அப்போதுதான். அவர் சொன்னது இதுதான்.

"பணச்சந்தை என்பது ஒரு ரெஸ்டாரன்ட் மாதிரி.  ரெஸ்டாரன்ட் போனால் மெனு கார்ட் கொடுப்பார்கள். அரிசியில் பல ஐட்டங்கள் கோதுமையில் பல ஐட்டங்கள் என்று வரிசையாக இருக்கும். அதில் நமது டேஸ்ட்டுக்கு ஏற்ற, பர்சில் இருக்கும் பணத்திற்கு ஏற்ற  ஐட்டங்களை தேர்வு செய்து சாப்பிடலாம். அதே போலத்தான் இந்த பணச்சந்தையும். இதில் நீ சொல்லும் Intraday யும் Delivery Based ட்ரேடிங்கும் அரிசியும் கோதுமையும் போல.. இதிலேயே இன்னும் பல வெரைட்டிகள் உள்ளன. நமது மனநிலை, நேரம், நம்மிடம் இருக்கும் பணம் எல்லாவற்றையும் பொறுத்து நமக்கு ஏற்றவகையில் முதலீடோ வர்த்தகமோ செய்யலாம்" என்றார். இப்போதைக்கு Intraday  மற்றும் Positional Trading என்ற இரண்டை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இதனை அடுத்து அவர் எடுத்துச் சொன்ன அத்தனை வகை ட்ரேடிங் முறைகளையும் (Dishes In The Menu Card )அடுத்த வாரம் தெளிவாகப் பார்க்கலாம்

 மேலும் பேசலாம்....
Chrysanth WebStory Published by WebStory

2 comments:

  1. awaiting for your further updates

    ReplyDelete
  2. டிரேடிங் பண்ணறீங்களா? இத படிங்க முதல்ல....

    http://tamilnadustocks.com/training/

    facebook id : forex shares option tamilnadu

    ReplyDelete