அவன்-இவன் மூலம் புதிதாய் ஏதோ முயற்சி செய்வதாக சொல்லி விட்டு நமக்கு அயர்ச்சியை கொடுத்த பாலாதனது வழக்கமான பாணியில் மிக அழுத்தமாக பரதேசி யை தந்து பிரமிக்க வைத்துவிட்டார் . பாலா ஒரே மாதிரியாக படம் எடுக்கிறாரே என்ற மனப்புண்ணிற்கு பரதேசிமூலம் மருந்து தடவியிருக்கிறார் . இந்த படமும் ட்ராஜடி தான் என்றாலும் எடுத்த விதத்தில் தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பாலா ...
ரெட் டீ என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பரதேசி . பிரிட்டிஷ் காலகட்டத்தில் ( 1939 ) கதை நடக்கிறது . சாலூர் கிராமத்திலிருந்து தேயிலைத் தோட்ட வேலைக்கு ஆட்களை எடுத்து விட்டு அவர்களை சொந்த ஊருக்கே திரும்ப அனுப்பாமல் கொத்தடிமைகளாக நடத்துவதோடு மூளை சலவை செய்து மதமாற்றம் செய்வதையும் அழுத்தமாக பதிவு செய்கிறது படம் . " நாம் இன்று கதகதப்பாக குடிக்கும் தேநீருக்கு பின்னால் பலரின் இரத்தம் இருக்கிறது " என்ற எழுத்துக்களுடன் தொடங்கும் படம் இரண்டு மணி நேரம் நம் இதயத்தை இறுகப் பிடிக்கிறது ...
அதர்வா தன் அப்பா முரளி பல படங்களில் சம்பாதித்த பெயரை இந்த ஒரே படத்தில் எடுத்து விட்டார் . ஒட்டுப்பொறுக்கி ( எ ) ராசாவாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் . சாக்லேட் பாயாக இருந்த இவரை சாக்குத்துணி கேரக்டருக்குள் அடைத்து அனைவரையும் ஏற்றுக்கொள்ள் வைக்க பாலாவால் மட்டுமே முடியும் . ஊர் மக்கள் சாப்பிடும் போது தனக்கு மட்டும் உணவில்லையே என்று அழும் போதும் , அடிக்காதே என்று கங்காணியிடம் கெஞ்சும் போதும் , ஊருக்கு திரும்ப முடியவில்லையே என்று ஏங்கும் போதும் , க்ளைமாக்ஸ் இல் கதறும் போதும் ஏதோ ஒரு விருது நிச்சயம் உண்டு என நம்ப வைக்கிறார் அதர்வா ...
வேதிகாவை கருப்பாக பார்ப்பதற்கு மனம் கஷ்டமாக தான் இருக்கிறது . அந்த கஷ்டத்தை தன் நடிப்பால் நிவர்த்தி செய்கிறார் . அதர்வா வை சீண்டி விட்டு பின் அவருக்காக இரக்கப்படும் இடத்தில் இவர் நடிப்பு மிளிர்கிறது ... இடைவேளைக்கு பிறகு வேதிகா இல்லாத வெற்றிடத்தை ஓரளவு நிரப்புகிறார் தன்ஷிகா . கணவன் ஓடி விட அதை காரணம் காட்டியே இவரது பணியை நீட்டிப்பு செய்யும் போது பரிதாபம் வருகிறது ...
வசனமே பேசாமல் கண்களால் மட்டுமே பேசும் அதர்வா வின் நண்பன் , அப்பாவியான முகத்துடன் வரும் அவர் மனைவி , லோக்கல் டாக்டராக வரும் சுப்ரமணியபுர சித்தன் , வேட்டி அவிழ ஆட்டம் போட்டு விட்டு இறந்து போகும் ஊர் பெரியவர் , கங்காணி , அதர்வா வின் கூன் விழ வரும் பாட்டி இப்படி எல்லோரும் சின்ன சின்ன பாத்திரத்தில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள் . சிறிது நேரமே வந்தாலும் டாக்டராக இருந்து கொண்டு மக்களின் அறியாமையையும் , ஏழ்மையையும் பயன்படுத்தி அவர்களை மத மாற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் வரும் சிவசங்கரும் , அவருடைய வெள்ளைக்கார மனைவியும் மனதில் இடம் பிடிக்கிறார்கள் . " அல்லேலூயா " பாடலில் இவர்களது ஆட்டமும் , நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்காமல் மத மாற்றம் செய்து விட்டு மது அருந்துவதும் நிஜத்தை தோலிருத்துக் காட்டுகின்றன . சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் இது போன்ற மத மாற்றங்கள் தொடர்ந்து வருவது வேதனையே ...
சாலூர் கிராமங்களுக்குள் கேமராவை வளைந்து வளைந்து போக விடும் செழியன் , ஊர் மக்கள் பயணப்படுவதை வைட் ஆங்கிளிலும் , தேயிலைத் தோட்டத்தை டாப் ஆங்கிளிலும் காட்டி மிரள வைக்கிறார் . ஊர் வட்டார சொற்கள் பழக்கப்பட்ட சில நிமிடங்கள் பிடித்தாலும் அதன் பிறகு தன் நக்கல் , நையாண்டி வசனங்களால் சிரிக்கவும் , சிலிர்க்கவும் வைக்கிறார் நாஞ்சில் நாடன் ... ஜி.வி.பிரகாஸ்குமாரின் இசையில் " செந்நீர் தானா " , " செஞ்காடே " பாடல்கள் இதமாக இருக்கின்றன . அவரின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் இசைஞானி இல்லாதது குறை போல தெரிகிறது . அந்த குறையை கங்கை அமரன் " செந்நீர் தானா " பாடல் மூலம் ஓரளவு தீர்த்து வைக்கிறார் ...
தமிழில் சரித்திர கால படங்கள் வருவதில்லையே , அப்படியே வந்தாலும் ஸ்டீரியோ டைப்பாக இருக்குமே என்கிற குறையை தீர்த்து வைத்ததற்கும் , விளிம்பு நிலை மனிதர்களின் நிலை , அவர்களுக்குள்ளும் உள்ள ஏற்றத் தாழ்வுகள் , வசனங்களாக இல்லாமல் விசுவலாக அவர்கள் படும் வேதனைகளை காட்டிய விதம் , வெள்ளைக்காரர்களை மட்டும் வில்லன்களாக சித்தரிக்காமல் அவர்களுக்கு துணை போகும் இந்தியர்களையும் தோலுரித்துக் காட்டியது , மத மாற்ற வித்தைகளை ஒரே பாடலில் சாமர்த்தியமாக பதிவு செய்த விதம் இவற்றிற்க்காகவும் , ஜெயமோகன் , எஸ்.ரா , நாஞ்சில் நாடன் போன்ற இலக்கியவாதிகளுடன் பாலா செய்து வரும் ஆரோக்கியமான பயணத்திற்காகவும் அவரை எழுந்து நின்று பாராட்டலாம் . அவருக்கு இந்த படத்திற்காக ஒரு தேசிய விருதையும் எதிர்பார்க்கலாம் ...
போகும் வழியில் நோய்வாய்ப்பட்ட கணவனை அப்படியே போட்டு விட்டு மனைவியை தரதர வென கங்காணியின் ஆட்கள் இழுத்து செல்ல கணவனின் கை விரல்களை க்ளோஸ் அப்பில் காட்டி இன்டர்வெல் ப்ளாக் விடும் ஒரு காட்சியே பின்னா வரப்போகும் விபரீதங்களுக்கு காட்டப்பட்ட ஒரு சோறு பதம் .எமது கடன் சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பார்ப்பதே என்றோ , மென்மையான படங்கள் தான் பிடிக்கும் என்றோ சொல்பவர்கள் பரதேசியை பார்த்து விட்டு புலம்புவதாக இருந்தால் பார்க்காமல் இருப்பதே நலம் . ஆனால் ஒரு முறை பார்த்தால் அவர்களையும் படம் பாதிக்கும் என்பதே என் கருத்து.. .
இடைவேளை வரை காதல் , கல்யாணம் என்று நேரத்தை கடத்துவது , அதர்வா தன் நண்பனின் மனைவியிடம் நிலைமையை புரிந்து கொள்ளாமல் கோவித்துக் கொள்வது , தகப்பன்சாமி , அங்காடிதெரு போன்ற படங்களில் சொல்லப்பட்ட கதை போன்ற சில குறைகளையும் தாண்டி இரண்டு மணி நேரம் சாலூர் கிராம மக்களுடன் நம்மையும் சிரித்து , அழுது , கோபப்பட்டு , பயப்பட்டு பயணப்பட வைத்த பாலா பிரம்மாண்டமாய் நம் கண் முன் தெரிகிறார் . பரதேசி யை " பெஸ்ட் ஆப் பாலா" என்று சொல்வதில் சிறு தயக்கம் இருந்தாலும் நிச்சயம் " பாலா அட் ஹிஸ் பெஸ்ட் " என்று அடித்து சொல்லலாம் . உலக சினிமா தரத்தில் இருக்கும் பரதேசி - பார்க்க வேண்டிய தேசி ...
ஸ்கோர் கார்ட் : 51
Published by WebStory
0 comments:
Post a Comment