இ சைஞானி , கௌதம் மேனன் , ஜீவா இவர்கள் கூட்டணிக்காக படம் பார்க்க போனால் எல்லோரையும் விட சர்ப்ரைசாக சமந்தா அதிகம் மனதில் பதிகிறார். மற்றபடி படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த இன்ஸ்பிரேஷனில் யாரோ புது இயக்குனர் எடுத்த அளவிற்கு அதிகம் அழுத்தமில்லாமல் இருக்கிறது ...
வருண் ( ஜீவா ) , நித்யா ( சமந்தா ) இருவரின் காதல் , ஊடல் . கூடல் எல்லாவற்றையும் பிள்ளை பிராயத்திலிருந்து திருமணம் வரை இரண்டரை மணி நேரம் சொல்வதே நீதானே என் பொன்வசந்தம் ...
பள்ளி மாணவன் , கல்லூரி மாணவன் , உத்தியோகம் பார்ப்பவன் என்று மூன்று விதமான கெட்டப்புகளில் வந்தாலும் ஜீவா வித்தியாசம் காட்டுகிறார் , ஆனாலும் இளைஞனாக கவர்ந்த அளவிற்கு பள்ளி மாணவனாக நம்மை கவராததற்கு அவர் தோற்றம் கூட காரணமாய் இருக்கலாம் ... நித்யாவாக சமந்தா நடிக்கவில்லை , வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம் . பள்ளி மாணவியாக குறும்பு , கல்லூரி மாணவியாக காதல் , இளைஞியாக காதலில் பிரிந்த சோகம் என்று நவரசங்களையும் பிழிந்திருக்கிறார் . படத்தின் பின்பாதியில் இவரை அதிகம் அழ விடாமல் அடக்கி வாசிக்க விட்டிருக்கலாம். ஜீவாவை விட காதலுக்காக இவர் அதிகம் ஏங்குவது சில இடங்களில் ஒரு தலை காதல் போல இருக்கிறது ...
அதிகம் பின்னணி இசை இல்லாமல் நேர்கோட்டில் போகும் திரைக்கதைக்கு முதல் பாதியில் ஆபத்பாந்தவனாக இருப்பது சந்தானம் மட்டுமே .
" பொண்ணுங்களும் காஸ் பலூனும் ஒன்னு , உட்டா பறந்துருவாங்க " என்று இவர் அடிக்கும் கமெண்டுக்கு கிளாப்ஸ் அள்ளுகிறது . இவருக்கு ஜோடியாக வரும் குண்டு பொண்ணும் கவனிக்க வைக்கிறார் ...
எம்.எஸ் பிரபு வின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான ஃபீலை கொடுக்கிறது. படத்தின் மிகப்பெரிய ஒப்பனிங்குக்கு கௌதம் தவிர மற்றுமொரு முக்கிய காரணம் இசைஞானி . ஏற்கனவே சாய்ந்து சாய்ந்து , என்னோடு வா , வானம் மெல்ல உட்பட எல்லா பாடல்களும் ஹிட்டாகி விட்டதால் அதை எப்படி படம் பிடித்திருப்பார்கள் என்று பார்க்க ஆவலோடு போனால் மாண்டேஜுகளாகவே எடுத்து ஏமாற்றம் அளிக்கிறார்கள் . பின்னணி இசைக்கும் பெரிதாக வேலையில்லாததால் ஏமாற்றமே ...
இரண்டு லீட் கேரக்டர்களின் காதல் , ஈகோ பிரச்சனையால் வரும் பிரிவு இவை இரண்டை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு திரைக்கதையை நகர்த்துவதென்பது எளிதான விஷயமல்ல . கெளதம் மேனனுக்கு ஏற்கனவே இதில் வெற்றிகரமான அனுபவம் இருப்பதால் அதை எளிதாக கையாண்டிருக்கிறார் . வருண் - நித்யா இருவரின் கதாபாத்திரங்களையும் நம்முடன் உலவ விட்டிருப்பது இயக்குனரின் வெற்றி . குறிப்பாக க்ளைமேக்ஸ் வருவதற்கு முன் ஜீவா - சமந்தா இருவரின் படபடப்பான காட்சிகள் க்ளாசாக இருக்கின்றன .
படம் சில வருடங்களுக்கு முன் நடப்பதை உணர்த்தும் விதமாக பணக்கார ஹீரோயின் அந்த காலகட்டத்தில் பிரபலமான நோக்கியா செல் ஃபோனை உபயோகப்படுத்துவதாக காட்டுவது கௌதமின் லாஜிக் சென்சிற்கு ஒரு எடுத்துக்காட்டு . ஹீரோவிற்கு குடும்ப பொறுப்பு வருவதற்குரிய லீட் சீன் அழுத்தமில்லாமல் இருந்தாலும் யதார்த்தமாக இருக்கிறது .
ஹீரோயினை சுற்றி வரும் கதையில் அவர் குடும்பம் பற்றிய டீட்டைளிங் இல்லாதது குறை . படமே விண்ணைத்தாண்டி வருவாயா வின் பார்ட் 2 போல இருப்பதால் அதோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை . சிம்பு வை போலவே ஜீவாவும் ஹீரோயினை தேடி போகிறார் , அதில் திரிஷா திருமணத்தை நிறுத்தினால் இதில் ஜீவா நிறுத்துகிறார் . சிம்பு - திரிஷா கெமிஸ்ட்ரி போல ஜீவா - சமந்தா கெமிஸ்ட்ரி இருந்தாலும் விடிவி போல காதலர்கள் ஒன்று சேர்வதில் எந்த வித காம்ப்ளிகேஷனும் இல்லாததால் படம் ரொம்பவே ஃப்ளாட்டாக இருந்து கொஞ்சம் சலிப்பை தருகிறது .
ஒரு பத்து நிமிடம் மனது விட்டு பேசியிருந்தால் முடிந்திருக்க வேண்டிய விஷயத்தை நீட்டி முழக்கி விட்டார்களே என்றும் தோன்றாமல் இல்லை . இடைவேளைக்கு முந்திய ஜீவா - சமந்தா பிரிவு சீனில் ஒரு க்ளோஸ் அப் கூட வைக்காமல் டாப் ஆங்கிளிலேயே ஷாட் வைத்திருப்பது சீனிற்கு தேவையான இம்பாக்டை கெடுக்கிறது . இது போன்ற குறைகளை தவிர்த்து வசனங்களாக மட்டும் இல்லாமல் விசுவலாகவும் படத்தை சொல்லியிருந்தால் நிச்சயம் நீதானே என் பொன்வசந்தம் விண்ணைத்தாண்டி வந்திருக்கும் ...
ஸ்கோர் கார்ட் : 42
0 comments:
Post a Comment