Saturday, December 15, 2012

கும்கி – விமர்சனம்

மேலும் படங்கள்

கொம்பன் என்ற காட்டு யானையின் அட்டகாசத்தில் மலைக்கிராமத்து மக்கள், பெண்கள், குழந்தைகளெல்லாம் கொடூரமாய் கொல்லப்படுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளோ இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு செல்லவேண்டியதுதானே என்கிறார்கள். 200 வருட பாரம்பரிய மலைநில விவசாய வாழ்க்கையை, கலாச்சாரத்தை தொலைத்துவிட்டு எங்கே போவது.
நாங்களே எங்களை பாதுகாத்துக்கொள்கிறோம் என முடிவு செய்கின்றனர் அந்த கிராமத்து தலைவரும் மக்களும். இந்த கதிர் அறுப்புக்கு பாதுகாப்புக்கு இந்த காட்டு யானைகளைகளுடன் மோதி சண்டையிட்டு அழிப்பதற்காக தயார்படுத்தப்பட்ட ஒரு கும்கி யானையைக் கொண்டுவருவதென.
ஆனால் வரவேண்டிய கும்கி யானைப்பாகனுக்கு குடும்ப பிரச்சினை வர, இரண்டு நாள் சமாளிக்க சப்ஸிட்யூட்டாய் வருகிறது வெடி வெடித்தாலே தலைதெறிக்க பயந்து ஓடும் டம்மி பீஸானா திருவிழா யானை மாணிக்கம். அதன் பாகனாய் விக்ரம் பிரபு, அவரது மாமனாய் தம்பி ராமையா, அந்த கிராமத்து தலைவரின் மகள் அல்லியாய் லட்சுமி மேனன்.
இரண்டு நாள் அங்கே வந்த விக்ரம் பிரபுவுக்கு லட்சுமி மேனனை கண்டதும் காதலாக அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை.மைனா என்ற மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் மீண்டும் அதே காடு சார்ந்த இடங்களிலேயே மொத்தமாய் சூட் பண்ணியிருக்கும் படம் இந்த கும்கி. மைனா அளவுக்கு இந்த படம் தரமாய் இருக்கிறதா?
முதலில் கும்கி யானை என்ற அந்த, காட்டு யானையை அடக்க பயிற்சி பெரும் இன்னொரூ யானை, என்ற புது விசயத்தை பிடித்ததுக்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.
முற்றிலும் புதிய களம். படத்தின் ஆரம்பக்காட்சிகள் மிரட்டலாய் இருக்கின்றன. கொம்பன் என்ற அந்த கொடூர யானையின் அறிமுகம் நம்மையும் பயமுருத்தி அடுத்த என்னாகப்போகிறதோ என்ற படபடப்பை ஏற்படுத்துகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், உறுத்தாத கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாய் அமைந்திருக்கின்றன அந்த 10 நிமிடங்களுக்கு.
இவ்வளவு பிரமாதமான ஆரம்பம், பின் அங்கே டம்மி யானையுடன் வரும் விக்ரம் பிரபு கோஷ்டி. அவர்களை நிஜமான கும்கி ஆட்கள் என நம்பி அவர்களை கடவுளுக்கும் மேலாய் பில்டப் பண்ணி மரியாதை செய்யும் கிராம மக்கள் என அழகான தொடக்கத்தில் காதல் என்ற ஒன்று வருகிறது.

அதன் பின் நடப்பவையெல்லாம் தான் துரதிஷ்டவசமாய் ஒன்றன் பின் ஒன்றாய் ஏமாற்றம் தரும் சறுக்கல்கள்.
படத்தின் இறுதிவரை விக்ரம் பிரபு காதலில் உருகிக்கொண்டேயிருக்கிறார். கொம்பன் வரும் வரும் என காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். கடைசியில் கொம்பன் வருகிறது. அந்த நேரத்தில் லேசாய் மதம் பிடித்த நிலையிலிருந்த மாணிக்கம் யானை தன் பாகனை கொல்லப்போகும் காட்டு யாணையை முட்டி மோதி கொன்று பாகனைக் காப்பாற்றுகிறது. விக்ரம் பிரபு தன் மாமாவையும், உதவியாளனையும் இழந்து அழுகிறார். அடுத்த சில நொடிகள் ப்ளாக் ஸ்கீரீன். திரையரங்கில் அனைவரும் என்னமோ வரப்போகிறது..ஏதோ நடக்கப்போகுது என ஒருவித எதிர்பார்ப்பில் இருக்க, எ ஃபிலிம் பை பிரபு சாலமன் என டைட்டில் கார்டு போட்டு படத்தை முடித்துவிட்டார்கள்.
களம் புதிது என நம்பிக்கை கொடுத்த பிரபு சாலமன் “தன் மீது பாசமாய் இருந்த தன் பாகனை கடைசியில் காப்பாற்றி செத்துப்போகும் யானை “என்ற எம்.ஜி.ஆர் காலத்து கதையைக் கொடுத்து பெரிய ஏமாற்றத்தை தருகிறார். அதிலும் திரைக்கதை என்பது சுத்தமாய் இல்லை. காதலிக்கிறார் காதலிக்கிறார் காதலிக்கிறார். கடைசியில் யானை வருது. இவ்வளவுதான் இவர் பண்ணிய திரைக்கதை. ஏன் சார்? மைனாவின் இருந்த திரைக்கதை ஆளுமையும் சின்ன சின்ன காட்சிகளிலும், ஷாட்களிலும் இருந்த நுணுக்கமும் இதில் மொத்தமாய் மிஸ்ஸிங்.
மேலும் படத்தின் ஒரே ஒரு நம்பிக்கையாய் இருந்த மாணிக்கம் யானைக்கும் கொம்பன் யானைக்கும் இடையிலான இறுதிகட்ட மோதல் என்பது சப்பென முடிந்துவிட்டது. எதிர்பார்த்த பிரம்மாண்டத்தையோ, வியப்பையோ தராமல்.
இமானின் இசை சில பாடல்களில் தாளமிட வைக்கிறது.
விக்ரம் பிரபு நன்றாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். லட்சுமி மேனன் சொன்ன வேலையை செய்திருக்கிறார். தம்பி ராமையா சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், வளவள ராமையாவாய் இரட்டை அரத்தங்களை வலியத்திணித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து என்ன அடுத்து என்ன என்ற விருவிருப்பு எதுவும் இல்லாத நிலையில் அழகாய் காண்பிக்கப்பட்ட காடும், கேமரா வேலைகளும் எந்த அளவுக்கு படத்தை ரசிக்க வைத்துவிட முடியும்.
மைனா அட்டகாசமாய் உயரப் பறந்தது என்றால் கும்கி சோம்பேறியாய் அசைந்தபடி நிற்கிறது. ஏமாற்றமே.

0 comments:

Post a Comment