Friday, November 30, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்



விஜய் பேர் இருந்தாலே இப்போ வெற்றி என்கிற மாதிரியே போயிட்டு இருக்கு.  இளையதளபதி விஜய் நடித்த துப்பாக்கிக்கு முன் வந்த விஜய் சேதுபதி நடித்த பீட்சா சூப்பர் வெற்றி.  துப்பாக்கி சூப்பர் டூபர் வெற்றி.  இப்போ மறுபடியும் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெளியாகியுள்ளது.  படம் வெளியாகும் முன்பே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலர் இயக்குநரையும், இதில் நடித்த விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி உள்ளார்கள். லியோ விஷன் சார்பில் ராஜ்குமார் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை, நடிகர் தியாகராஜன் படம் வெளியாகும் முன்பே வாங்கியிருக்கிறார். இவற்றுக்கு மேல் யுடிவி தனஞ்செயன் வாங்கி வெளியிட முயற்சி செய்த படம் என்றால் எவ்வளவு நல்லா வந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
படத்துக்கு வருவோம்.  கதைன்னு பார்த்தா ரொம்ப கனமே இல்லாத கதை.  கல்யாணத்துக்கு தயாரா இருக்கும் மாப்பிள்ளைக்கு கிரிக்கெட் விளையாடும் ஏற்படும் சின்ன விபத்தால் ஏற்படும் கடந்த கால மறதியால் ஏற்படும் விளைவுகளே கதை. நகைச்சுவையோடு எளிமையாக மாபிள்ளையின் நண்பர்கள் எவ்வாறு மாப்பிள்ளை குணமாகமலேயே திருமண மேடை வரை அவரை கொண்டு சேர்கிறார்கள் என்று திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர்.  திருமணம் நடந்தாதா இல்லையா என்பதை திரையில் கண்டுகொள்ளுங்கள்.
விஜய் சேதுபதியை நம்பி இனி பெரிய பட்ஜெட் படம் எடுக்கலாம் என்று அடித்துக் கூறுமளவுக்கு நன்றாகவே நடித்துள்ளார்.  முகத்தில் சிரிப்பு காட்டாமல் மற்றவர்களை நன்றாகவே சிரிக்க வைக்கிறார்.  நண்பர்களாக வருபவர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் ஆகியோர்.  திரைப்படங்களில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் மிக சிறப்பாக திரைக்கதையை நகர்த்துவதற்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.  மணப்பெண்ணாக வரும்  காயத்ரியும் கதையின் படி என்ன தேவையை அதை பூர்த்தி செய்துள்ளார்.
படத்தில் நகைச்சுவை தான் பெரிய பலம்.  மேலும் படம் சிறு முதலீட்டில் எடுக்கப் பட்டது.  அதனால் ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாக இருப்பவர் இசையமைப்பாளர். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பட்டறையில் இருந்து வந்துள்ளார்.  படத்தொகுப்பு கோவிந்தராஜ்.  இருவரும் தேவையை நிறைவேற்றி உள்ளனர்.  ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்.  இயக்குநரும் ஒளிப்பதிவாளாரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையே கருவாக எடுத்து இயக்கியுள்ளார் இயக்குநர். அதனாலேயே படத்தை அனுபவித்து எடுத்துள்ளார் பிரேம்குமார்.  இவர் தான் நிஜ வாழ்க்கையில் ஹீரோ.
இந்த படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவர் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு பயின்று மாநில விருதினை பெற்றுள்ளார். அருமையான எதிர்காலம் உள்ளது.  கொடுத்த காசுக்கு நிறைவான ஒரு படத்தை கொடுத்துள்ளார்.  சீரியஸா போக வேண்டிய ஒரு கதையை நகைச்சுவையாக கொடுத்துள்ளதிலேயே அவரது திறமை தெரிகிறது.  ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உள்ளது.

0 comments:

Post a Comment