Tuesday, November 20, 2012

பீட்சா – திரை விமர்சனம்


விஜய் சேதுபதி பீட்சா கடையில் வேலை செய்பவர். அவர் காதலி ரம்யா நம்பீசனோடு சேர்ந்து வாழ்கிறார். இதில் ரம்யா கர்ப்பமாகிவிட கல்யாணம் செய்து கொள்கிறார். மென்மையான காதலுடன் நெருக்கமாக போகும் வாழ்க்கையில் திடீர் திருப்பம் இது விஜய் சேதுபதி பீட்சா டெலிவரி செய்ய போகும் பூஜாவின் வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறது.
படம் முடியும் வரை படத்தின் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும் ஒரு கணம் கூட சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார்கள். மைக்கேலாக வரும் விஜய் சேதுபதி ஆரவாரம் இல்லாமல் வளர்ந்து வரும் பெரிய நடிகர் என்பதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார்.
அந்த வீட்டில் இவர் மாட்டிக் கொண்ட அரைமணி நேரமும் தனி ஆளாக இருந்தே நடிப்பில் பட்டையை கிளப்புகிறார். அனுவாக வரும் ரம்யா நம்பீசன் முதலில் வரும் காதல் காட்சிகளில் இயல்பாக தோன்றி, காட்சியில் ஒன்ற செய்கிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன கதாபாத்திரங்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கின்றன. குறிப்பாக வீர சந்தானம், நரேன், ஜெயக்குமார் அனைவருமே கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் தொழில் நுட்ப கலைஞர்கள்தான். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். படத்தில் இவரும் ஒரு ஹீரோ என்றே சொல்ல வேண்டும். ஒரு வீட்டுக்குள் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை வைத்தே ஒளிப்பதிவில் வித்தை காட்டியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை. எங்கு தேவையோ அங்கு மட்டும் அதை தந்து படத்திற்குள் ரசிகர்களைக் கொண்டு போகிறார். முதலில் அறிமுகமான “அட்டை கத்தி”யை அவரே மிஞ்சி இருக்கிறார். படம் கச்சிதமாக வந்ததற்கு இன்னொரு காரணம் எடிட்டர் லியோ ஜான்பால்.
படத்தின் முடிவில் வரும் மாண்டேஜ் ரசனையான ஐடியா. ஒளிப்பதிவு, இசை, எடிட்டங், இயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த ரசனையான அனுபவத்தை தருகிறது. எழுதி, இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கனவே குறும்படங்களில் பெயரெடுத்தவர். இப்போது முதல் படத்திலேயே எந்த தடுமாற்றமும் இல்லாமல் தெளிவான திரைக்கதை. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
முன் பகுதி சிறிது நேரம் மெதுவாக நகர்ந்தாலும் பின் பகுதியின் வேகம் அதை மறக்கச் செய்கிறது. இவ்வளவு நல்ல திரைக்கதையோடு ஒரு சினிமா வந்து எவ்வளவு நாளாகிறது?… என்று கேட்க வைக்கும் “பீட்சா”வுக்கு கிடைத்திருப்பது ‘பாஸ்’ மார்க்.

0 comments:

Post a Comment