Thursday, July 26, 2012

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.

0 comments:

Post a Comment