Thursday, July 26, 2012

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது
பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின்புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.

பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன.

0 comments:

Post a Comment