Saturday, July 14, 2012

பில்லா II - பில்லா 2



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.

அஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)
அஜித் பில்லா 2இல் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் இன்னும் மூன்று ஹீரோக்கள் படம் முழுவதும் படத்தை மேலும் பிரம்மாண்டம் ஆக்குகிறார்கள்.
ஒருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
மற்றவர் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர்
இன்னுமொருவர் வசனகர்த்தா இரா முருகன் 
(ஜாபார் கான் என்று இன்னொருவரின் பெயரும் வந்தது.. அவர் ஹிந்தி வசனங்களை எழுதினாரோ?)

பில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை.. 
அஜித்.. அஜித்தின் பெயர் 
சில பாத்திரப் பெயர்களால் தொடுத்துள்ளார்கள். (ரஞ்சித், ஜெகதீஷ்)
அதே மாதிரியான Stylish making , கவர்ச்சி, mafia, கொலைகள் ..

மற்றும்படி அந்த பில்லாவின் தொடர்ச்சி என்றால் இல்லை.

படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.
தனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.
ஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் - ஒரேயொரு இடத்தில் ஒரு அட்டை/ பலகையில் SL என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கக் கோவை வருகிறது.
(இராணுவம் கூட வேறு மாதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது.. - எச்சரிக்கை??) பவளத்துறை, அகதி என்று சும்மா பம்மாத்தாக மேலோட்டாமாக ஓட்டுகிறார்கள். 

அகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே?
பிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை?
ஆனால் தப்புத் தப்பா இலங்கைத் தமிழ் பேசிக் கொல்வதை விட இந்த சினிமாத் தமிழ் எவ்வளவோ மேல் தான்...

"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை " வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது. 
வாழ்க ;)

அஜித்துக்கு அளந்து பேசும் பாத்திரம்.. ஆனால் பேசுகின்ற ஒவ்வொரு வசனமுமே பஞ்ச். அழுத்தமாக அர்த்தத்தோடு வந்து விழுகின்றன.

உட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உசிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு

எனக்கு நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் (அட்டகாசம் - உனக்கென்ன பாடலில் வைரமுத்துவின் வரிகள்)

மத்தவங்களோட பயம் நம்ம பலம்

நல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம் 

ஆசை இல்லை; பசி (இந்த ஒற்றை வசனம் தான் படத்தின் ஒற்றை வரிக்கதை)

சாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்

தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான்! ஜெயிச்சுட்டா போராளி! தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி 

ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது

சொன்ன நேரத்துக்கு முன்னாலேயே போனா வேற வேலை இல்லாதவன்னு நினைச்சிடுவாங்க..
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லிடுவாங்க..
அதனால சொன்ன டைமுக்கு போனாத் தான் நம் மேல ஒரு நம்பிக்கை வரும்

இதுவரை காட்டிக் குடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தைப் புரட்டிப் பாரு

இவை எல்லாமே கரகோஷங்களை அள்ளிக் கொள்ளும் இடங்கள்.
வசனகர்த்தா முருகன் இனித் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறுவது உறுதி.

மனோஜ் K ஜெயனுக்கு முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்று.. 
(அப்பாடா எத்தனை வில்லன்கள்.. அஜித் உண்மையில் பெரிய ஆள் தான்.. இத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறதே)
பில்லா 1இல் நடித்திருந்த யோக் ஜபீ (ரஞ்சித்) அஜித்துடனே படம் முழுவதும் வருகிறார். பரவாயில்லை.. தேவையான காட்சிகளில் நடிக்கிறார்.

இளவரசு கொஞ்ச நேரம் கலக்குகிறார்.
ஸ்ரீமன் பாவம்.. கொஞ்ச நேரம் தலைகாட்டி பரிதாமாக செத்துப்போகிறார்.



முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள்.
கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். உலக அழகியாமே.. அப்படியா? 
அஜித்தை விட உயரமாக பொருத்தமில்லாமல் இருக்கிறார். வேறு யாரும் கிடைக்கலையா?

வில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.
ரஜினிக்கு பிறகு வில்லன்கள் விளையாட அதிக இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே ஒருவர் அஜித்தாகத் தான் இருக்க முடியும்.
இந்த வில்லன்களுக்கும் தனியான ரசிகர்கள் உருவாகலாம். 

அதிலும் அபாசியாக வரும் சுதன்சு பாண்டே Superb. 
கொஞ்சமாக நரைத்த தலைமுடி + தாடியுடன் மனிதர் அமைதியாக அசத்துகிறார். அந்த நேரிய பார்வையும் அசைவுகளும் செம வில்லத்தனம்.

டிமிட்ரி என்ற பொரோவிய (என்ன பெயரோ? ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ?)
நாட்டு வில்லனாக வரும் வித்யுத் ஜம்வாலும் ஒரு ஹீரோ போலவே அழகும் உயரமும் கம்பீரமும்.
ஒரு சண்டைக் காட்சியில் கலக்குகிறார்.

கவர்ச்சிக்கென்று வெளிநாடுகளில் இருந்தும் ஹிந்தியிலிருந்தும் இறக்கப்பட்டிருக்கும் பலரில் புருனா அப்துல்லா இன்னொரு நாயகி..
கவர்ச்சியில் தாராள மழை.
பார்வதியை விட இவர் கொஞ்சமாவது நடித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். 

எடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும் சுரேஷ் அர்ஸ் முதல் பாதியில் சும்மா பின்னியிருக்கிறார். அதே வேகத்தை இரண்டாம் பாதியில் அவரைக் காட்ட வைத்திருப்பது டோலேட்டியின் கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்ததை இயக்குனர் நிறைவேற்றவில்லை என்பது அஜித்துக்கும் கொஞ்சம் சறுக்கலே...

இரண்டாம் பாதி நாம் எண்ணுவது அச்சுப் பிசகாமல் அமைந்துபோகிறது இயக்குனரின் அனுபவமின்மையே.. (அவருக்கு இயக்கத்தில் இரண்டாம் படம்.. ஆனால் நாங்க எத்தனை படம் பார்த்திருப்போம் ;))
சுரேஷ் அர்சின் எடிட்டிங்கும் டோலேட்டி & யுவனின் திறமையும் இடைவேளையின் பின்னர் பளிச்சிடும் இடமாக உனக்குள்ளே மிருகம் பாடலைக் குறிப்பிடலாம்.

அஜித்தின் ஹெலிகொப்டர் ரிஸ்க் சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.
ஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.

சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சிகளிலும், எப்படி நடக்கிறது என்றே தெரியாமல் இலகுவாக முடிந்துவிடும் மாபெரும் ஆயுதக் கடத்தல்களை லொஜிக் உடன் எடுப்பதிலும் காட்டி இருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் ரசிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்.

அதீத கவர்ச்சியும், எடுத்ததெற்கெல்லாம் கொலையும், ஏனென்று கேட்க யாருமே இல்லாத அளவுக்கு சட சடவென செத்து விழும் உயிர்களும் என்று   நம்ப முடியாத காட்சிகள் ஏராளம். தொடர்ச்சியாக மாறி மாறி இவையே எனும்போது கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.

ஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.

அகதி முகாம் போலீஸ் அகதிகளையும் அஜீத்தையும் துன்புறுத்தும் காட்சிகளும் நாயகன் படத்தையும் அஜீத் + அந்த டீக்கடை காட்சி, கமல் + நாயகன்  காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. 
அத்துடன் படத்தின் சில காட்சிகள் அல் பசினோ (Al Pacino) நடித்து 80களில் வெளிவந்த Scarface படத்தை ஞாபகப்படுத்துகின்றன.

அஜித் என்ற ஒரு Match winnerஐ நம்பிக் களம் இறங்கிய இயக்குனர் டேவிட் பில்லா என்ற ஒரே பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடித்துவிட்டு அதுவே போதும் என்று ஒதுங்கிவிட்டது தான் எமக்கு முழுத் திருப்தியைத் தரவில்லைப் போலும்.
அஜீத் ரசிகர்களுக்கு தலயைத் தல ஆகப் பார்ப்பதில் புளகாங்கிதப்படலாம்...
பில்லா 2 ஆரம்ப வசூலை ஈட்டி சுமார் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.


ஆனால் மீண்டும் ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா காலம் மாதிரி இயக்குனர்களை நம்பி தல கவிழ்ந்துவிடுவாரோ என்பது தான் கொஞ்சம் கவலை தருகிறது.


பில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்....
அஜீத்... அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார்; ஆழமாக + அழுத்தமாகப் பேசுகிறார்.

யுவனின் பின்னணி இசை.. தீம் இசை ஜொலிக்கிறது, சோகக் காட்சியிலும் தீம் இசையையே கொஞ்சம் வேறுபடுத்தி உருக்குகிறார்.

ஒலிப்பதிவு - R.D. ராஜசேகர் கலக்குகிறார். ஒவ்வொரு இடங்களிலும் அற்புதம் & துல்லியம்.

சண்டைக்காட்சிகள் - விறுவிறு சுறுசுறு.. தீயாக இருக்கிறது.
அதிலும் அந்த போத்தல் சண்டை & ஹெலிகொப்டர் சண்டைகள் class
'பவுடர்' விற்கப் போய் பரபரப்பாக வில்லன்களை வீழ்த்து வெளியேறும் அந்தக் காட்சியும் கலக்கல்.

ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் வருகின்ற ஜோர்ஜிய நாட்டின் பனி சூழ்ந்த, அரண்மனை வரும் காட்சிகள்

படம் முழுக்க எடுக்கப்பட்ட வர்ணம் - color tone

முதல் பாதி

முதலமைச்சர் - பில்லா உரையாடல் 

கூரிய நறுக் வசனங்கள் 


குறைகள்... இவற்றைக் குறைத்திருந்தால் முன்னைய விஷ்ணுவர்தனின் பில்லாவை இது நிகர்த்திருக்கும்

நம்பக்கூடிய மாதிரி எடுத்திருக்கப்படக் கூடிய இரண்டாம் பாதி

கதாநாயகி

கொத்துக் கொத்தாக செத்து விழுவோர்

அளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..
தம்மிழ்படமா என்று சந்தேகமே வந்திடும் சில நேரம் 
(கொஞ்சம் தமிழ் உப தலைப்பு போட்டிருக்கலாமே.. ரஷ்ய வசனங்களுக்கு மட்டுமே வருகின்றன)

கொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி

இலகுவாக தன் எதிரிகளை வீழ்த்திவிடும் பில்லா முடிவு சுபம் என்பதைக் காட்டிவிடுகிறார்.

சப்பென்று முடியும் உச்சக்கட்டம்..

படத்தில் வராமல் கடைசியில் எழுத்தொட்டத்துடன் வரும் யுவன் பாடிய பாடல்


பில்லா 1 & அண்மைய மங்காத்தாவில் அஜித்தின் ஆற்றல் + உன்னைப் போல் ஒருவனில் சக்ரி டோலேட்டியின் திறமை பார்த்து பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன்.
அலுப்பிலாமல் ரசித்தாலும், ஒரு action & stylish பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.


பில்லா 2 - செதுக்கியது போதாது - அஜித் மட்டும் ஆகா

0 comments:

Post a Comment