Thursday, January 3, 2013

“விஸ்வரூபம்” டி டி எச் வருமானம் 300 கோடியா?


நடிகர் கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையில் 300 கோடி வருமானம் ஈட்டமுடியும் என்று சில திரைத்துறை நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இதுவரை சுமார் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்கள் தலா ரூ 1000 முன்பணம் கட்டி, “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் மூலம் பார்ப்பதற்கு தம்மை பதிவு செய்துகொண்டிருப்பதாக டி டி எச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பதாகவும், இதன் மொத்த வருமானம் 300 கோடி என்பதும் இவர்களின் கணக்காக இருக்கிறது. தமிழ் திரைத்துறை வரலாற்றில் 300 கோடி என்பது இதுவரை காணாத மிகப்பெரும் சாதனைத் தொகை என்றும் இவர்கள் வர்ணிக்கிறார்கள்.

அதேசமயம், இவர்களின் இந்த கணக்கு அவர்கள் கூறுவதைப்போல அவ்வளவு எளிமையானதல்ல என்கிறார் சென்னை கேபிள்டிவி உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம் ஆர் ஸ்ரீனிவாசன். காரணம் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறப்படும் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை முழுமையாக ஏற்கத்தக்கதல்ல என்கிறார் அவர்.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக வீட்டு தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையின் மூலம் 300 கோடி ரூபாய் ஈட்டமுடியுமா என்பதை ஆராய்கிறார் சென்னை கேபிள்டிவி உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம் ஆர் ஸ்ரீனிவாசன்

இந்த 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்களில் குறைந்தது 25 சதவீதம் பேராவது இலங்கை மற்றும் அரபுநாடுகளுக்கான டி டி எச் சேவைகளை தமிழ்நாட்டில் வந்து வாங்கிச் சென்றவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் மொத்தம் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் என்பதை அப்படியே ஏற்கமுடியாது என்கிறார் ஸ்ரீனிவாசன்.

அதேசமயம், “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் ஒளிபரப்புவதன் மூலம் 300 கோடி ரூபாய் ஈட்டமுடியும் என்பது இன்றைய நிலையில் சாத்தியமற்றதாக இருந்தாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் டி டி எச் மூலம் வருமானத்தை ஈட்டுவது சாத்தியமே என்றும் கூறுகிறார் ஸ்ரீனிவாசன்.

ஒரு தமிழ் திரைப்படத்தை ஒரே ஒருமுறை டி டி எச் வாயிலாக ஒளிபரப்புவதன் மூலம் அந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவையும், தயாரிப்பாளருக்கான நியாயமான லாபத்தையும் சேர்த்து திரும்ப எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தமிழில் சாத்தியமாகும் என்கிறார் அவர்.

“விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் மூலம் ஒளிபரப்பும் கமலஹாசன் முடிவுக்கு தமிழ்நாட்டின் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் கேபிள் டிவி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் இவர்களின் எதிர்ப்புகளை கடந்து திட்டமிட்டபடி “விஸ்வரூபம்” திரைப்படம் டி டி எச்சில் ஒளிபரப்பாகும் என்று கமலஹாசன் அறிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment