Saturday, January 19, 2013

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாளருக்கு மட்டுமல்ல,நுகர்வோருக்கும் வேட்டு !

''இந்திய நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் மிகப்பெரிய சாபம், இடைத்தரகர்கள். தானியங்களை, மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அடிமாட்டு விலைக்கு மொத்தமாக கொள்முதல் செய்த பின், இடைத்தரகர்கள் அவற்றை பல மடங்கு லாபம் வைத்து, விற்பனை நிலையங்களுக்கு விற்கின்றனர். இதை நிவர்த்தி செய்யும் பொருட்டே, வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு வரவேற்கிறோம். நேரடியாக உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யலாம். இது விவசாயிகளுக்கு மாத்திரம் அல்ல... அனைத்து சிறு வர்த்தகர்களுக்கும் லாபம் தரக்கூடியது. நுகர்வோர்களாகிய பொதுமக்களுக்கும் லாபம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வந்துவிட்டால்... விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும்!''

- இப்படி இந்திய அரசாங்க மும், பன்னாட்டு நிறுவனங் களும் சேர்ந்து அடிக்கிற அடியில், தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன.
'அந்நிய நிறுவனங்களுக்கு... இந்திய விவசாயி மற்றும் நுகர்வோர் மீது எவ்வளவு அக்கறை பார்!' என நீங்கள் ஆனந்தக் கண்ணீர்விட்டால், கொஞ்சம் துடைத்துக் கொள்ளுங்கள். ஆம்... அந்த நிறுவனங்களின் வரலாறு அப்படி!
வால்மார்ட் நிறுவனம், உலகளவில் மிகப்பெரிய வலைப்பின்னல் உடைய, 27 நாடுகளில் வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் நிறுவனம். 2012-ல் உலகளவில் பிஸினஸ் செய்த தொகை, சுமார் 444 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 24 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்). அவர்களுக்கு கோடிகளில் வியாபாரம் செய்வது என்பது, நாம் சில்லறை கொடுத்து சேட்டா கடையில் 'எக் பஃப்ஸ்' சாப்பிடுவது போல.
இவ்வளவு பிரமாண்டமான பின்புல மூலதனப் பணத்தை வைத்திருக்கும் அவர்களுக்கு, 'ஒரு பிரதேசத்தில் தொழில் தொடங்கிய மாதமே வருவாயை ஈட்ட வேண்டும், இல்லை என்றால் தொழில் முடங்கிவிடும்’ என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. எனவே, தொழில் தொடங்கிய ஆரம்ப மாதங்களில் உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யவும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் கொடுக்கவும் முடியும். இதனால் ஏற்படும் நஷ்டத்தை, தாம் வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் மற்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் லாபத்தை வைத்து சரிகட்டவும் முடியும். இதன் காரணமாக உற்பத்தியாளர்கள், சில வருடங்களுக்குகூட நிச்சயமாக முன்பைவிட லாபம் ஈட்டுவார்கள். நுகர்வோருக்கும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
ஆனால், இவை எல்லாம் எத்தனை நாட்களுக்கு என்பதுதான் கேள்வி!
வால்மார்ட் கொடிகட்டிப் பறக்கும் 27 நாடுகளில் கவனமாக ஆராய்ச்சி செய்தவர்கள், ''ஓரிடத்தில் புதிதாக தொழில் ஆரம்பிக்கும் வால்மார்ட் நிறுவனம், அங்கு கால் ஊன்றிய சிறிது காலத்துக்கு மூன்று பிரதான கொள்கைகளுடன் இயங்கும்'' என்கின்றனர்...  
 உற்பத்தியாளர்களின் நன்மதிப்பைப் பெறுவது
 நுகர்வோரின் நன்மதிப்பைப் பெறுவது
 போட்டியாளர்களை ஒழிப்பது.
''இடைத்தரகர்களைவிட அதிக பணம் கொடுத்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதால், சுலபமாக அவர்களின் நன்மதிப்பைப் பெறும் பன்னாட்டு நிறுவனங்கள், அரிசி, பருப்பு என பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோரின் நன்மதிப்பையும்பெற்றுவிடும். இப்படி உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் லகுவாக கைக்குள் போட்டுக் கொள்ளும் இந்நிறுவனங்கள், இந்த இரு தரப்பும் தமது போட்டியாளர்கள் பக்கம் செல்வதைத் தடுப்பதன் மூலம், அவர்களை சீக்கிரமே துரத்தியடிக்கும். அப்படி போட்டியாளர்களை முழுவதுமாக ஒழித்து, விற்பனையில் தனிக்காட்டு ராஜா ஆன பின்புதான் ஆரம்பிக் கிறது வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் மங்காத்தா!'' என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.
அப்படி என்ன செய்வார்கள்..?
போட்டியாளர்களை அறவே ஒழித்த பின் அல்லது கணிசமாகக் குறைத்த பின், அவர்கள் வைப்பதே சட்டம். அவர்கள் நிர்ணயிக்கும் அடிமாட்டு விலைக்கு பொருட்களை கொள்முதலுக்குக் கொடுக்க உற்பத்தியாளர்கள் தள்ளப்படுகின்றனர். முன்பாவது பரவாயில்லை... 10 அல்லது 15 இடைத்தரகர்கள் இருப்பார்கள், எவர் அதிகமாக பணம் கொடுக்க முன் வருகிறாரோ, அவரிடம் விற்பனை செய்யக்கூடிய விற்பனைத் தெரிவு உற்பத்தியாளர்களுக்கு இருந்தது. ஆனால், போட்டியாளர்களை ஒழித்து தனிக்காட்டு ராஜா ஆன பின், பன்னாட்டு நிறுவனங்களிடம் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர் உற்பத்தியாளர்கள். அதாவது... எலியிடம் தப்பி, புலியிடம் சிக்கிய கதை.
அடுத்த இலக்கு... நுகர்வோர். பொருட்களைப் பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள். பின் பொருட்களின் விலையை உயர்த்துவார்கள். மக்களும் வேறு வழியில்லாமல் அவர்கள் நிர்ணயித்த விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுவார்கள். சீனாவில் வால்மார்ட் இதே விளையாட்டை செயல்படுத்த, விழித்துக்கொண்ட சீன அரசாங்கம், வால்மார்ட் மீது பல கிடுக்கிப்பிடிகளைப் போட, 'பிச்சை போட வேண்டாம்... நாயையாவது இழுத்துப் பிடி' என்கிற கதையாக தமது கிளைகளை சத்தமில்லாமல் மூடிக்கொண்டு அங்கிருந்து 'எஸ்’ ஆகிக்கொண்டு இருக்கிறது வால்மார்ட். சீன அரசு, தன் மக்கள் மேல் கொண்டிருக்கும் அக்கறையை, இந்திய அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
மக்கள்தான் உஷாராக இருந்து எதிர்ப்பு காட்ட வேண்டும்... அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க வேண்டும்!

'வால்மார்ட் வந்தால்..?’ - பதறும் சிலரின் வார்த்தைகள்!
மோகன், 'கோவை டிபன் செயின்’, பெங்களூரு: ''அமெரிக்காவின் உற்பத்தியாளர்கள், சில்லறை வணிகர்களின் வயிற்றில் அடித்த நிறுவனம்தான் இந்த வால்மார்ட். அங்கு வெற்றிகரமான தொழில்அதிபராக இருந்த பெங்களூருவைச் சேர்ந்த எனது நண்பன், வால்மார்ட்டின் ஏகாதிபத்தியத்துக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் இங்கேயே வந்துவிட்டான். ஒரு உணவக முதலாளியாக இடைத்தரகர்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் இப்போது இடைத்தரகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பொருட்களை வாங்குகிறேன். கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. எனவே, இடைத்தரகர்களின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதற்கு நிச்சயமாக வால்மார்ட் தீர்வாகாது. சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்தது போலத்தான் ஆகிவிடும்!''
அஜித் பீட்டர், சிறுதொழில் வணிகர், கேரளா: ''வால்மார்ட்டை இந்தியாவில் அனுமதிப்பது என்பது, என்னைப் போன்ற சிறு வர்த்தகர்களை தற்கொலை செய்யச் சொல்வதற்குச் சமமானது. ஏனெனில், வால்மார்ட் அனைத்து நாடுகளிலும் சிறு வர்த்தகர்களை ஒழிப்பதை தனது பிரதான கொள்கையாக செய்து வருகிறது. என்னைப் போன்ற சிறு வர்த்தகர்களுக்கு, ஆள் பலம், வாகன வசதி என உற்பத்தியாளர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பொருட்களை வாங்கும் வளங்கள் இல்லை. அதனால் இடைத்தரகர்களை நம்பி இருக்கிறோம்.
வால்மார்ட் வந்தால் தங்கள் பண பலத்தை பயன்படுத்தி இடைத்தரகர் களை அறவே ஒழித்து, உற்பத்தி யாளர்களிடம் இருந்து பொருட்களை தாங்களே நேரடியாக வாங்குவார்கள். உற்பத்தியாளர்களை கைக்குள் போட்ட பின்பு, அவர்களை தங்களுக்கு மாத்திரமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்து வார்கள். ஒரு கட்டத்தில் சிறு வர்த்தகர்களாகிய நாங்கள் உற்பத்திப் பொருட்கள் கிடைக்காமல் வியா பாரத்தையே முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை வரும். இது, என்னைப் போன்ற லட்சக்கணக்கான சிறு வர்த்தகர்களின் வாழ்க்கைப் பிரச்னை. என் வீட்டில் அடுத்த வருடம் அடுப்பு எரியுமா, இல்லையா என்பது தெரியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கியிருக்கும் ஆட்சியாளர்களின் கீழ்தான் வாழ்ந்து வருகிறோம். வேறென்ன செய்ய?''
Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment