ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரேஷனில் ஒரு சஸ்பென்ஸ் கதையை ரெடி பண்ணி , அதில் விஷால் , திரிஷா , யுவன் என்று ஒரு கூட்டணியுடன் கை கோர்த்தது வரை சமர்த்தாகத்தான் இருந்திருக்கிறார் இயக்குனர் திரு . ஆனால் அந்த கதையை விறுவிறுப்பாக படமாக்குவதில் மட்டும் ஏனோ அசடு வழிந்து விட்டார் ...
ட்ரெக்கிங் கைட் ஷக்தி ( விஷால் ) பிரிந்து போன பழைய காதலி ரூபா
( சுனைனா ) வின் அழைப்பின் பேரில் ஊட்டியில் இருந்து பேங்காக் போகிறார் . போகிற வழியில் மாயா ( திரிஷா ) வின் நட்பு கிடைக்கிறது . பேங்காக்கில் லேன்ட் ஆனவுடன் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே சமர் ...
விஷால் நல்ல உயரம் , உடற்கட்டுடன் கட்டுமஸ்தானாக இருக்கிறார் . முதல் சீனில் சண்டையுடன் அறிமுகமாகும் போதே " அச்சச்சோ அவ்வளவு தானா " என்று வயிற்றில் புளியை கரைத்தாலும் பின் பிரச்சனைகளில் சிக்கி தவித்து கதையுடன் வேறு ரூட்டில் பயணித்து ஆறுதல் அளிக்கிறார் . கேசுவல் லுக் என்கிற நினைப்பில் தலை கூட வாராமல் அழுக்கு பாண்டையாக படம் முழுவதும் சுற்றி வெறுப்பேற்றுகிறார் ...
திரிஷா வின் அறிமுகம் மொக்கையாக இருந்தாலும் பாடல் காட்சிகளில் தாராளமான நடிப்பால் ஸ்கோர் பண்ணுகிறார் . எவ்வளவு தண்ணி அடித்தாலும் ( படத்துல தாங்க ) ஸ்லிம்மாகவே இருக்கும் அம்மணியின் பரந்த முதுகை பார்க்கும் போது தான் டூப்போ என்று லேசாக சந்தேகம் வருகிறது ...
சுனைனாவிற்க்கு ஒரு சீன் , ஒரு பாட்டோடு வேலை முடிந்து விடுகிறது . ஜெயப்ரகாஷ் , ஜான் விஜய் , மனோஜ் பாஜ்பாய் , சக்ரவர்த்தி , சம்பத் , ஸ்ரீமன் இவ்வளவு பேர் இருந்தும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி ஏதுமில்லை . மனோஜ் பாஜ்பாயின் தமிழ் அறிமுகம் வீணாய் போனதில் சிறிது ஏமாற்றமே . ஸ்ரீமன் சீரியசாக பேசினாலும் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் .
காதலியிடம் " நீ எல்லாத்துக்கும் கணக்கு பாக்குற , நான் காதல்ல கணக்கே பாக்குறது இல்ல " என்று விஷால் சொல்கிற வசனத்தில் மட்டும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிகிறார் . ரிச்சர்டின் ஒளிப்பதிவு இதம் . வருடத்துக்கு ஒரு படம் யுவனுக்கு திருஷ்டியாக அமைந்து விடுவதுண்டு , இந்த வருடம் சமர் . தரன் குமாரின் பின்னணி இசை ஒ.கே...
சமர் என்றால் போர் ( யுத்தம் ) என்று அர்த்தம் , ஆனால் படம் முதல் அரை மணி நேரம் படு போராகவே நகர்கிறது , பிறகு சுதாரித்து இடைவேளை வரை விஷாலுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நம்மை இயக்குனர் கதைக்குள் தாமதமாக இழுத்தாலும் பிறகு அதற்கான விளக்கங்களில் கோட்டை விட்டு விடுகிறார் . த்ரில்லர் கதையால் சர்ப்ரைஸ் செய்தாலும் சறுக்கலான திரைக்கதையால் சமர் சுமாராகவே இருக்கிறது .
SAMAR - SURPRISED BUT NOT SUSTAINED ...
Published by WebStory
0 comments:
Post a Comment