வீட்டுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் அடங்காகாத மாணவர்கள் ஐந்து பேர். பள்ளிக் கூடத்தில் உடற் கல்வி ஆசிரியருக்கும் இவர்களுக்கும் அடிக்கடி மோதல் வருகிறது. இவர்களாலேயே அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் இந்த மாணவர்களின் சதித் திட்டத்தால் ஆசிரியரின் வேலையும் பறி போகிறது. இதனால் கோபமான ஆசிரியர், அந்த பையன்களை பழி வாங்குவேன் என்று கோபத்தில் சொல்கிறார். இந்நிலையில் அந்த மாணவர்களையும் அவர்களுடன் உடற் கல்வி ஆசிரியரின் மகளையும் கடத்துகிறது ஒரு கும்பல். ஏன் கடத்தினார்கள் அவர்களிடம் இருந்து மாணவர்களும் அந்த மாணவியும் தப்ப முடிந்ததா? என்பது மீதி கதை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நல்ல கதைக்களம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதை படமாக்கியவிதத்தில் படம் பார்ப்பவர்களை இயக்குநர் திருப்திப்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டார். படத்தின் முதல் பாதியில் அந்த மாணவர்களின் அடாவடி செயல்கள் முழுக்க ஆக்ரமித்துவிடுகின்றன. மாணவர்கள் மோசமானவர்கள் என்பதை ஒன்றிரண்டு காட்சியிலேயே சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அதைவிட்டுவிட்டு படத்தின் துவக்கத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு அந்த மாணவர்களின் மோசமான செயல்களையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காட்சிகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை ரசிக்கவும் முடியவில்லை.
ஆசிரியர் ஒருவர், கேள்வித்தாள் தருகிறேன் என்று சொல்லி மாணவியை நடுக்காட்டுக்குள் அழைத்து அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் காட்சி படத்தில் ஒரு அழுத்தமான காட்சி ஆனால் அதைத் தொடர்ந்து வருகிற காட்சிகள் அந்த அழுத்தத்தை பிசுபிசுக்க வைத்துவிட்டன.
அந்த மாணவர்கள் பட்டம் விட்டு பைக்கில் வருபவரை பழி வாங்குவது, கரும்புத் தோட்டம் வரப்பில் நடந்து போகும் பெண்ணை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாயமாவது என சில காட்சிகளை சென்சார் போர்டு எப்படித்தான் அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை.
பள்ளி மாணவர்வர்களா அவர்கள்? அடிக்கடி அவர்கள் கெட்டவார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதால் ஏகப்பட்ட இடங்களில் ‘மியூட்’தான். இடைவேளைக்குப் பிறகு துப்பாக்கி சம்பந்தப்பட்ட கதையுடன் இந்த மாணவர்களை இணைக்கிறார் இயக்குநர். அப்போது கூட அதை அழகாக காட்டியிருக்கலாம்.
ஆனால் அந்த ரவுடிகள் கொலைகளாக செய்து கொண்டே இருப்பது, ரவுடிகளை போலீஸ் சுட்டுக் கொன்று கொண்டே இருப்பது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியான காட்சிகளாகவே தெரிகின்றன. மாணவர்கள் கடத்தப்பட்டவுடன் அடுத்து என்ன நடக்குமோ… என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும் நமக்குள் அதிகரிக்கிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அதை கொஞ்சம் அதிகப்படுத்தினாலும் அந்த விறுவிறுப்பை சரியான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள்.
படத்தில் நம் பாராட்டைப் பெறுகிற ஒரே ஒருவர் என்றால் அது உடற் கல்வி ஆசிரியராக வருகிற சம்பத்ராம். இதுவரை சின்னச் சின்ன கேரக்டர்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த சம்பத்ராமின் நடிப்பு திறமையை வெளிக்காட்டுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது இந்த கேரக்டர். முரட்டு ஆசிரியராக இருந்த போதிலும், மாணவர்களிடம் இவர் ஒவ்வொரு தடவையும் மோதித் தோற்றுப் போவதும், அதே நேரத்தில் வீட்டிலும் இவருக்கு மரியாதை இல்லாதது அவரது கேரக்டர் மீது நமக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. பையனை அடிக்கப் போகும் இடத்தில் பையன் கல்லை எடுத்துக் காட்டி மிரட்டும் காட்சியில் சம்பத் ‘வேணாம்டா…’ என்று கெஞ்சுகிற அந்த ஒரு காட்சியே போதும் அவரது நடிப்புக்கு உதாரணம் சொல்ல. ஆனால் மனுஷன் படம் முழுக்க வருகிற காட்சியில் எல்லாம் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். பள்ளி மாணவியாக வருகிறார். ஷாவந்திகா. நன்றாகவே நடிக்கிறார். ஆனால் இவர் பள்ளி மாணவி என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள்.
க்ளைமேக்ஸ் காட்சியில் ஹீரோயின் தன் வீட்டுக்கு வரும் போது அம்மா, பாட்டி எல்லோரும் குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் எந்த தாயும் அப்படி ஒரு கல்நெஞ்சோடு உட்கார்ந்திருப்பாளா என்பது ஆச்சரியம்தான். ஓடிப் போய் மகளை அடிப்பாள்… இல்லையென்றால் அரவணைத்துக் கொள்வாள் இதில் ஏதாவது ஒன்றுதானே நடத்திருக்க வேண்டும். அதாவது பரவாயில்லை அவள் அப்பாதான் மகளை அணைத்துக் கொள்கிறாரே. அவரிடம் கூடவா நடந்தது என்ன என்பதை அவள் சொல்லாமல் இருந்திருப்பாள்? அதுவும் அந்தப் பெண்ணின் தாத்தா க்ளைமேக்ஸில் என்ட்ரி கொடுத்து செய்யும் அந்த காரியத்தை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
படத்தை இயக்கியிருக்கிறார் லோகியாஸ். மாணவர்களை வைத்துப் படம் எடுக்கும் போது இனியாவது கொஞ்சம் கவனமாக படம் எடுங்கள். தவறு செய்யும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக எல்லா மாணவர்களும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. இது போன்ற படங்கள் எல்லா மாணவர்களுமே மிக மோசமானவர்கள் என்கிற ரீதியிலான பதிவைத்தான் மக்கள் மனங்களில் பதிய வைக்கும். அது மட்டுமிற்றி தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பது போன்று அமைந்துவிடுகின்றன இது போன்ற படங்கள். சினிமாவில் மாணவர்களை நல்லவர்களாக காட்ட வேண்டிய கடமை இயக்குநர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கடமையாகும். ஆசிரியர்களுடனேயே மோதும் மாணவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதை ஒரு படம் எடுத்துத்தான் சொல்ல வேண்டுமா என்ன…?
அந்த மாணவர்களை நல்லவர்களாக காட்டி, துப்பாக்கி அவர்கள் கைக்கு கிடைக்கும் சம்பவத்தையும் நீங்கள் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காக சொல்லியிருந்தால், ஒருவேளை இந்த படம் மிகப் பெரிய அளவுக்கு பாராட்டைப் பெற்றிருக்கக் கூடும்… ரசிகர்களும் துப்பாக்கியை விட கள்ளத் துப்பாக்கிக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருந்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் கோட்டை விட்டுட்டீங்களே லோகியாஸ்…!
0 comments:
Post a Comment