Sunday, January 6, 2013

கோழி கூவுது – விமர்சனம்

ஆங்கிலம் செய்தியை படிக்க

ஊர் ஊராக சுற்றி கோழிக் குஞ்சுகளை விற்பவனாக நாயகன் அசோக். சிறுவயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட இவருக்கு, தனது தாய் மற்றும் தங்கையை காப்பாற்றுவதற்காக இந்த தொழிலில் இறங்குகிறான். மயில்சாமியுடன் சேர்ந்து இந்த வேலையை செய்கிறார்.

இவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளை குறைந்த விலைக்கு வாங்கி அதற்கு சாயம் பூசி மக்களை ஏமாற்றி விற்று பணம் சேர்த்து வருகிறார்கள்.

அத்தை வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் நாயகி சிஜா ரோஸ் ஒருநாள் நாயகனிடம் ஒரு கோழிக் குஞ்சை வாங்குகிறாள். அந்த கோழிக்குஞ்சு சில நாட்களிலேயே இறந்துவிடுகிறது. இதனால் நாயகனிடம் சண்டை போட்டு வேறொரு கோழிக்குஞ்சுகளை வாங்கிக் கொண்டு அதை பத்திரமாக பார்த்து வருகிறாள்.

இதற்கிடையில், ஒரு விபத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள, அந்த மோதலே இருவருக்குள்ளும் காதலாக மாறுகிறது. ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை சொல்லிக்கொள்ளாமலேயே இருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் இருவரும் தங்கள் காதலை சொல்ல வரும் வேளையில், நாயகியின் சித்தப்பா போஸ் வெங்கட் நாயகியை திருவிழாவிற்காக தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். தன்னுடைய ஊர் பெரியவரான போஸ்வெங்கட் நாயகியை அழைத்துச் செல்வதன் காரணம் என்னவென்று புரியாமல் நாயகன் திகைத்து நிற்கிறார்.

அதன்பின், நாயகி போஸ் வெங்கட்டின் அண்ணன் மகள் என்பதை அறிகிறான். இருப்பினும், தனது காதலை தெரிவிக்க தனது சொந்த ஊருக்கே திரும்புகிறான் நாயகன். ஊருக்கு திரும்பிய நாயகன், நாயகியை சந்தித்து காதலை தெரிவிக்கிறான்.

ஒருநாள் திருவிழாவின் போது நாயகியின் வீட்டார் அனைவரும் கோவிலுக்கு சென்றுவிடுகின்றனர். திருவிழா முடிந்ததும் நாயகி மட்டும் வீட்டுக்கு திரும்புகிறாள். அவளை தனியாக சந்திக்க நாயகன் அவள் வீட்டுக்கு வருகிறான். இருவரும் அங்கு தனியாக இருப்பதை போஸ் வெங்கட் பார்த்துவிடுகிறார்.

கோபமடைந்த அவர் நாயகனை அடித்து அங்கிருந்து விரட்டுகிறார். அதன்பிறகு அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனது அம்மாவையும், தங்கையையும் மிரட்டிவிட்டு வருகிறார். பயந்துபோன நாயகனின் அம்மா இனிமேல் நாயகியை நீ சந்திக்கவே கூடாது என கண்டிப்புடன் கூறிவிடுகிறார்.

இதனால், நாயகன் உடைந்து போய் நாயகி நினைவில் வாடுகிறார். நாயகியின் வீட்டிலோ அவளுக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒருபக்கம் போஸ் வெங்கட் நாயகனை கொல்லவும் ஆள் அனுப்புகிறார்.

இவ்வளவு எதிர்ப்புக்கிடையில் நாயகன் நாயகியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

கோழி வியாபாரியாக வரும் நாயகன் அசோக் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் கிராமத்து இளைஞனாக நம்மை கவர்கிறார். இவர் கோழிகளை விற்பதற்காக கோழி கோழி என்று கூவுவது தனி ஸ்டைல். நாயகியை காதல் செய்வதாகட்டும், அவளிடம் சண்டை போடுவதாகட்டும் தனது பணியை சரியாக செய்திருக்கிறார்.

நாயகி சிஜா ரோஸ், மீண்டும் ஒரு மலையாள வரவு. ரொம்ப அழகு. இவருக்கு, படத்தில் தாயை இழந்துவிட்டு தந்தையின் பாசத்துக்கு ஏங்கும் கதாபாத்திரம். கோழிக்குஞ்சை வாங்கி வீட்டில் இவர் பராமரிக்கும்போது தன் பாசத்தை அக்கோழிக்குஞ்சிடம் வெளிப்படுத்தும் காட்சிகளில் நெஞ்சை நெருட வைக்கிறார். காதலனை பிரியமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார்.

நாயகியின் சித்தப்பாவாக வரும் போஸ் வெங்கட் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இறுதியில் தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும்போது பாசத்தில் நெகிழ வைத்துவிடுகிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் நரேன் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். சிறு வயதிலேயே தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்ட மகளிடம் இவர் ஒவ்வொரு முறை பேச முயற்சிப்பதும் மகள் மேல் தான் வைத்திருக்கும் பாசத்தை தன் மனதுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொள்வதுமான அப்பா கேரக்டர். எந்த கேரக்டராக இருந்தாலும் அப்படியே மாறிப் போய்விடும் திறமை கொண்ட நரேன் இந்தக் கேரக்டரை செய்திருக்கும் விதத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? நம்மை அறியாமலேயே இவரது கேரக்டர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகிறது.
நாயகனின் அம்மாவாக வரும் ரோஹிணி, மயில்சாமி, அருண் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான பணியை செவ்வனே செய்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் புளித்துப்போன காதல் கதையை வித்தியாசமான கதைக்களத்தில் சொல்லவந்த புதிய இயக்குனர் கே.ஐ.ரஞ்சித்-க்கு பாராட்டுக்கள்.

காதல் ஜோடிகளை கொல்வதற்காக மலையை நோக்கி அவர்கள் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் திக் திக் நிமிடங்கள் அமைந்திருக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ என்னும் திகிலை அந்த காட்சிகள் அதிகமாகவே ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு நிறைவைக் கொடுத்திருக்கிறது. குத்துப்பாடலும், மெலடி பாடல்களும் கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ராம்ராஜ். ஆனால் பின்னணி இசை ரொம்ப இடங்களில் அமைதியாகவே இருக்கிறது.

மொத்தத்தில் ‘கோழி கூவுது’ மன நிறைவு.

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment