கற்றவராக இருந்தால் மட்டும் போதாது, தான் கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது சிறப்பு மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலரே மக்கள் மனதில் ஆழமாக, நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அப்படி, மக்கள் இடத்தே ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், திரு. உ. சகாயம் அவர்கள். இவரை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை இங்கே! சிறுவயதில் என்ன நமக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறதோ, அது தான் ஆழமாக மனதில் நிற்கும். இவர் இந்த நிலையில், இத்தனை நல்லவராய் இருக்க முக்கியக் காரணம் இவரது தாய் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? சிறுவயதில், கீழே விழுந்து கிடந்த மாம்பழங்களை எடுத்துக் கொண்டு வந்து இவர் அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அந்த மாம்பழம் இவர்களுக்குச் சொந்தமானது இல்லை என்ற காரணத்தால், அதைத் தூக்கி ஏறியச் செய்திருக்கிறார் அவரது அம்மா. மற்ற சிறுவர்களும் மாம்பழம் எடுத்துச் சென்றதாகச் சொல்லி இருக்கிறார் இவர். எல்லோரும் செய்தார்கள் என்பதால், தவறு என்றுமே சரியாகிவிடாது, என்று அறிவுரை சொல்லி இருக்கிறார், அம்மா. அன்று அம்மா சொன்னதன் பயன் தான் இன்று, இவ்வளவு நேர்மையானவராக நிற்கிறார், நிமிர்ந்து நிற்கிறார் நமது சகாயம் அவர்கள். கொள்கை: ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும், அந்த கொள்கை எத்தகையது என்பதே, அவர் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கும். இதோ, நமது சகாயம் அவர்களின் கொள்கைகள் நாம் அறிந்தவையே, "உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து" “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்பவர். தீமைகள் எங்கிருந்தாலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி, என்றுமே இவர் அஞ்சியதில்லை. இவரது தன்னலமற்ற நல்ல சேவைக்குக் கிடைத்த பெரிய பரிசு என்ன? நாம் அறிந்தது போல,பதினெட்டு முறை வேலை மாற்றம் இருபது ஆண்டுகளில்! இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், பத்தொன்பது முறை இருபத்தி ஒரு ஆண்டுகளில்! இது போல் நல்ல நல்ல பரிசுகளை எல்லாம், உயர்ந்த சேவை செய்பவர்களுக்குக் கொடுக்க, இங்கு நம் நாட்டில் தானே முடியும்? ஏழைகளுக்கு மட்டும் அல்ல, மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறார் சகாயம் அவர்கள். மாணவர்களோடு பேசும் போது, மாணவர்கள் யாராவது நானும் உங்களைப் போல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று சொன்னால், " இன்று நீங்கள் நேர்மையாக இருப்பேன் என்று சொல்வது எளிது, ஆனால், இறுதி வரையில் உங்கள் வேளையில் நீங்கள் நேர்மையாக இருப்பீர்களா?" என்று கேட்பாராம். ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும், மாணவர்கள் மனத்திலும் நேர்மையை இப்போதே விதைக்க வேண்டும் என்ற அவரது அக்கறையை, இதை விட விளக்கமாக சொல்ல வேண்டுமா என்ன? ஒரு பெரியவர் புகார் கொடுத்திருக்கிறார், தான் வாங்கிய பெப்சியில் ஏதேதோ மிதப்பதாக, உடனே அந்த பெப்சியை பரிசோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு - அந்தப் பெப்சி அருந்த ஏற்றது இல்லை என்று வந்ததும், உடனே அந்த பெப்சி தயாரிக்கும் "யூனிட்டிற்கு" "சீல்" வைத்திருக்கிறார். அப்போது அவர் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார், "சீல்" வைக்க அவரோடு வந்த தாசில்தார் பயந்திருக்கிறார், "இதெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க வேண்டும்", என்று. அவருக்கும் தைரியம் கொடுத்து, இதைச் செய்யே நமக்கே அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி சீல் வைக்க அழைத்துச் சென்றிருக்கிறார். தனது மகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, கையில் நான்காயிரம் பணம் இல்லாமல் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தவர் இவர். அப்போது அவருக்கு மதுபானக் கடைகள் ஒரு கடைக்கு பத்தாயிரம் ரூபாய் தர தயாராக இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர் அந்த சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்கவில்லை, தெரிந்தவரிடம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்துவிட்டு கடனை உடனே அடுத்தமாதம் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று அவரது தொலைபேசி எண்ணி அவர் வெளியிட்டிருக்க, "சார், கேஸ் கம்பனிக்கு போன் போட்டா எடுக்க மாட்டிக்காங்க", இப்படி எல்லாம் அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும், பொறுமையாக இது போன்ற அழைப்புகளையும் விசாரித்து உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறார். மதுரையில் சரியாக தேர்தல் நடைபெறுவதற்கு இவர் ஆற்றிய பணியை சொல்லவும் வேண்டுமா? திருமங்கலம் தேர்தல் மிகவும் நேர்மையான முறையில் நடக்க இவர் தானே காரணமாய் இருந்தார். இன்று நடந்து கொண்டிருக்கும் "கிரானைட் ஊழல்" வழக்கு, அந்த ஊழல் குறித்த விபரங்கள் வெளி வருவதற்குக் கூட, இவர் முதன் முதலில் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்தது தான் காரணம். எதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது. ஆற்றிய பணிகள்: தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர் நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர் கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர் சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் மதுரை மாவட்ட ஆட்சியர் கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குகனர் (தற்பொழுது) சொந்தம்: ஊர் : புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமம். பெற்றோர்: உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள். மனைவி: விமலா. பிள்ளைகள்: யாழினி, அருண். இவர், இவரது பெற்றோருக்கு நான்கு மகன்களில், இளையவர். இவரது அப்பாவின் ஆசைக்காக, லட்சியத்தோடு படித்து இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி இருக்கிறார்.இப்போது, இவரது மகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது லட்சியமாம். இன்னும் வருங்காலத்தில் நாம் எதிர்பார்க்கலாம் இன்னொரு பெண் சகாயம் அவர்களை. இது போன்று நேர்மையானவர்கள் குறைவு தான், காரணம், நூறு தீயவர்களை அழிக்க, ஒரு நல்லவர் போதும். தீமையும் நன்மையையும் சமமான சக்தி கொண்டவை இல்லை தானே? அதனால் தான் போலும், சக்தி கொண்ட நல்லவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்! நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய ஒருவர் தற்போது கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வேதனைக்குரிய ஒன்றாகும்.... |
Published by WebStory
0 comments:
Post a Comment