‘16 வயதினிலே’ படத்துக்கு பாரதிராஜா வச்ச முதல் டைட்டில் இதுதான். அதனால படத்தையும் பாரதிராஜா பாணியிலேயே எடுக்க டைரக்டர் ஜீவன் ஆசைப்பட்டது தப்பில்லை. ஆனா பாரதிராஜா காலத்திலேயே இந்தப்படம் வராம போனதுதான் தப்பு.
முதல் சீன்லயே காதலியோட கையைப் பிடிச்சுக்கிட்டு காதலன் கிராமத்தை விட்டு பஸ்ஸைப் பிடிக்க ஓடி வரும்போதே “ஆஹா… இன்னம் நீங்க திருந்தலையா..?” ன்னுதான் கேக்கத் தோணுது.வழக்கமான கிராமத்துக் காதலர்களின் ‘சீண்டல்…’ அப்புறம் ‘தூண்டல்…’ கடைசியில ‘தீண்டல்’ங்கிற ஸ்கிரிப்டுதான். ஆனா வில்லன் வேணுமே..?
சாமியை நம்பாம தோழர்களோட சேர்ந்து வீதி நாடகங்கள் போட்டு சிவப்பு சிந்தனையோட இருக்கிற ஹீரோவைக் குல வழக்கப்படி ‘கோடாங்கி’யா குடும்பத்தினர் மாத்த, காதல்ல வெடிக்குது பிரச்சினை.கோடாங்கியாகிட்ட ஹீரோ இனி இல்வாழ்க்கைல ஈடுபடக் கூடாதுன்னாலும் அதுக்கு முன்னமே எல்லா லீலைகளையும் சப்ஜாடா முடிச்சுடறதால ஹீரோயின் வயித்துல வாரிசு நெளிய ஆரம்பிக்கிற சேதி தெரிய…
மேற்படி ஊரைவிட்டு ஓட்டம்… பஸ்… இத்யாதி..!இப்படிக் கதை பண்ணிட்டாலே ஒண்ணு ஹீரோ காதலியைக் கைகழுவிட்டு கோடாங்கியா வாழ்ந்து ஊரைக் காப்பாத்தணும். இல்லாட்டி சாமியைத் தள்ளி வச்சுட்டு ஆசாமியாகி பெண்டாட்டியைக் காப்பாத்தணும். ஆனா ரெண்டும் இல்லாம மூணாவதா ஒரு கிளைமாக்ஸ் வச்சு யாரையும் திருப்திப் படுத்தாம விட்டுட்டார் ஜீவன்.
ஹீரோ ‘ஸ்ரீ’ புதுமுகம்னாலும் அவரோட படத்துல புதுமுகங்களா நடிச்சிருக்க சின்ன கேரக்டர்களும் பின்னாளில ஹீரோ ஆகியிருக்கிறது புரியுது. அப்படி இப்போதைய ஹீரோக்கள் விதார்த், கதிர் எல்லாம் ஸ்ரீக்கு நண்பர்களா வந்து போகவே ‘சின்ன லெவல்’ மல்டிஸ்டார் படமா விரியுது ‘மயிலு.’
கோபப் படறதும், சிரிக்கிறதும் போதும்னு டைரக்டர் சொல்லிட்டதாலோ என்னவோ அதைத் தவிர ‘ஸ்ரீ’ வேற எதையும் செய்யலை.நியாயமா இந்தப்படத்துல அறிமுகமாகியிருக்க வேண்டிய ஷம்மு அதுக்குப் பிறகு சில படங்கள்ல பாத்துட்டதால இதுல அதிகமா கவரலை. ஆனா ஷம்முவோட நடிப்பும், கோணை சிரிப்பும் முதல் படம்கிற அளவுல பாராட்டற விதமாதான் இருக்கு.
படத்தோட பெரிய ப்ளஸ், நேட்டிவிட்டியோட சீன்கள், வசன உச்சரிப்புகள்ல கவனம் செலுத்தியிருக்கிறதும், இசைக்கு இளையராஜாவை ஃபிக்ஸ் பண்ணியதும்தான். கஞ்சா கருப்பு காமெடியை ரொம்ப நாளைக்குப் பிறகு ரசிக்க முடிஞ்சிருக்கு.
கதை நடக்கிறது எந்த காலக்கட்டத்துலேன்னு டைரக்டருக்கே குழப்பம் இருந்திருக்கணும். அதனால நமக்கும் அதே குழப்பம். அது கூட ஆன்மிகம், பகுத்தறிவு, மருத்துவம்னு எல்லாத்தையும் சேர்த்தும் இன்னும் குழம்பியிருக்கிறார்.
ராஜா இசைல 80 களோட மண்வாசம். இதைத் தாண்டி எல்லா பொறுப்புகளையும் ஜீவன் ஒருத்தரே சுமந்திருக்கார். அந்த அரிய முயற்சியைப் பாராட்டலாம்.
ஆனா அதுவே படத்தை முழுமையாக்கிடாதுங்கிறதும் உண்மை. சரி… கடைசியில ‘மயிலு’ வோட காதல் என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா..? அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க, விட்ருங்க..!
0 comments:
Post a Comment