படத்தோட கதை என்னனா ...
'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டு வாய் பேசாமல் இருக்கும் தனது மகனை வயதான அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியாக சென்னையில் வேலை பார்த்து வருகிறார் கிஷோர். சென்னையில் அவருக்கு பிரபல ரௌடியை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளவேண்டும் என்ற பொறுப்பு கொடுக்கப்படுகிறது. இதற்காக தனது மகனை கூட வைத்திருக்காமல் தன்னுடைய அம்மாவுடன் சொந்த கிராமத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.ஆனால், வயதான அம்மா இறந்த செய்தி சென்னையில் இருக்கும் கிஷோருக்கு தொலைபேசி மூலமாக தெரிய வருகிறது. அதன்பின்னர் சொந்த ஊர் திரும்பும் கிஷோர் தனிமைப்படுத்தப்பட்ட தன் மகனுக்கு இனி தான் தான் எல்லாம் என்ற சூழ்நிலையில் கிராமத்திலிருந்து அவனை சென்னைக்கு அழைத்து வருகிறார்.
எதையுமே உணர்ந்து கொள்ளமுடியாத மனநிலையில் இருக்கும் அவனை டாக்டர் யூகி சேதுவிடம் கொண்டு போகிறார். அவரோ, உங்கள் மகனுடைய உடலில் எந்த பிரச்சினையும் இல்லை, மனதில்தான் பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஒரே வழி அவனை இந்த உலகத்துக்கு கொண்டு வர முயற்சிப்பதைவிட, நீங்கள் அவனுடைய உலகத்துக்குள் செல்லுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.
அவர் சொன்னபடியே தன் மகனுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க முடிவு செய்கிறார் கிஷோர். இதற்காக தான் ஏற்றிருந்த என்கவுன்டர் வேலையை தனது நண்பருக்கு சிபாரிசு செய்துவிட்டு மகனை கவனிக்க புறப்படுகிறார்.
அவனை பள்ளியில் சேர்க்கும் கிஷோர், மகன் பக்கத்திலேயே அமர்ந்து அவனுக்கு பணிவிடை செய்கிறார். அங்கு டீச்சராக வரும் சினேகா, கிஷோரின் மகன் மேல் இறக்கப்பட்டு அவனை தான் இனி பார்த்துக் கொள்வதாக உறுதி கூறுகிறார். ஒரு கட்டத்தில் கிஷோரின் மகனை தனது மகனாகக்கூட ஆக்கிக் கொள்ள முடிவு எடுக்கிறார். ஆனால், சினேகாவின் தாய்க்கு இதில் துளியும் சம்மதமில்லை.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட கிஷோர் மகன் என்னவானான்?
மகனாக ஏற்றுக்கொள்ளத் துணிந்த சினேகாவுக்கு அது நிறைவேறியதா?
என்பதே மீதிக்கதை.
படத்துல எனக்கு பிடித்த சில ....
கிஷோர்மிடுக்கான போலீஸ் அதிகாரி + பாசக்கார தந்தை என்று இருவேறு பரிமாணங்களில் மிரட்டி இருக்கிறார் கிஷோர்.
கம்பீரமான போலீஸ் அதிகாரியகட்டும், பாசமான, பொறுப்பான அப்பாவாகட்டும் அவரை தவிர அந்த வேடத்தில் வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அபாரமான இயல்புத்தனம் மாறாத நடிப்பு.
தொழிலா, குறைபாடுள்ள மகனா? எனும் நிலையில், இருதலைகொள்ளி எறும்பாக தவித்து, பின் மகனுக்கு சரியானதொரு எதிர்காலத்திற்கு வித்திட்டுவிட்டு, தொழில் எதிரிகளையும் தீர்த்துகட்டி, தானும் மடிந்துபோகும் பாத்திரத்தில் கிஷோர் செம ஜோர்!
சினேகா
கதாநாயகியாக சினேகா, கதாநாயகி என்று சொல்வதைவிட டீச்சர் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவு கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டார். படத்தில் இவருக்கு டூயட் இல்லை, காதல் காட்சிகள் இல்லை, முழுவதும் டீச்சராகத்தான் வருகிறார்.
மாநகராட்சி பள்ளி ஆசிரியையாக சினேகா அசத்தலான தேர்வு!
கிஷோரின் ஆட்டிசம் பாதித்த மகனுக்காக கிஷோரையே திருமணம் செய்து கொள்ள துணிந்து, பின் அப்பாவையும் இழந்த அந்த குழந்தையின் எதிர்காலத்திற்காக தன் எதிர்காலத்தையும் தியாகம் செய்து நம்மையும் உருக வைத்து விடுகிறார் அம்மணி! பலே, பலே!!
பிருத்விராஜ் தாஸ்
மேற்படி இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறான் படத்தின் ரியல் ஹீரோ சிறுவன் ஹரியாக வரும் பிருத்விராஜ் தாஸ். ஆட்டிசம் பாதித்த சிறுவனாகவே வாழ்ந்திருக்கிறான் பிருத்வி என்றால் மிகையல்ல!
பொடியன் ஏகப்பட்ட விருதுகளுக்கு வீட்டில் இப்பொழுதே இடத்தை காலி செய்து வைத்துக் கொள்ளலாம்!
பரோட்டா சூரி
காமெடிக்கு என்று ‘பரோட்டோ’ சூரியை வைத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ரசித்து சிரிக்க முடிகிறது. பல இடங்களில் சலிப்பே மேலோங்கி இருக்கிறது.
ஒளிப்பதிவு vs இசை
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கதையோட்டத்துக்கு பக்கபலமாக இருக்கிறது. காட்சிக் கோர்வைகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை நம்மை படத்தோடு பயணிக்க உதவியிருக்கிறது.
இயக்குனர் குமரவேலன்
தான் எடுக்க நினைத்த விஷயத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகிறார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள்.
இதுபோன்ற சிறந்த படங்களைத் தரவேண்டிய கடமை ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் உண்டு என்பதை நீரூபித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் ஜி.ஆர்.குமரவேலன்.
ஆட்டிச சிறுவனின் கதையில் அழுத்தமா ஆக்ஷ்ன் கதையையும் கலந்துகட்டி, ஆர்ட் படத்தை கமர்ஷியல் படமாக தந்திருக்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலின் சாமர்த்தியம்.!
கோழி இடும் முட்டைகள் : 4 / 5
எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து காப்பாற்றும் ரசிகர்கள் இது போன்ற தரமான படத்தை ஆதரிக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
ஹரிதாஸ் - ஹிட்பாஸ்! திரைப்படம் மிக மிக அருமை!
0 comments:
Post a Comment