அலகாபாத்தில் இவ்வருடம் ும்பமேளா துவங்கி இருக்கிறது. உலகின் பலதரப்பட்ட மக்கள் ஒருசேரும் இந்த பாரம்பரியக் கொண்டாட்டம் பற்றி சத்குரு பேசுகிறார்.
இந்தியா, பல வகைகளையும், வண்ணங்களையும் கொண்ட அதிஅற்புதமான கலாச்சாரம். இங்கே வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, உணவு, அவர்கள் உடை உடுத்தும் விதம், இசை, நாட்டியம் என அனைத்துமே ஒவ்வொரு 50, 100 கிலோமீட்டருக்கும் மாறுபடுகிறது. இப்படி வேறுபட்டு நிற்கும் இந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால், அது கும்பமேளா.
2001 ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில், 6 கோடி மக்கள் அலகாபாத்தில் சங்கமித்தார்கள். இது போன்ற இடங்களுக்குச் செல்ல நான் ஏங்கியதில்லை, ஆனால் இதைப்பற்றி நிறைய பேச்சுக்கள் அடிப்பட்டதால் கற்பனைக்கு எட்டாத இந்த பிரம்மாண்ட நிகழ்வைப் பார்க்க நான் கோவையிலிருந்து காரில் பயணப்பட முடிவு செய்தேன்.
நான் காலை 2 மணியளவில் அங்கே சென்றபோது நாட்டின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரையிருக்கும் பலதரப்பட்ட மக்கள் வந்திருந்தனர். பார்ப்பதற்கே ஒருவரை வியப்படையச் செய்யும் அற்புதக் காட்சி அது. அவர்கள் தூங்குவதற்குக்கூட இடமில்லை, அதனால் தீயை மூட்டி, அதைச் சுற்றி தத்தமது மொழிகளில் பேசிக் கொண்டு ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் இருந்தனர்.
அங்கு போலிச் சாமியார்களும் இருந்தனர், யோகத்தில் உயர்ந்தவர்களும் இருந்தனர். போலியானவர்களுக்கு அவர்கள் தொழில் பிரதானமாய்ப் போக, சித்தி பெற்ற யோகிகளோ தங்கள் நோக்கமே கதி என்றிருந்தனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் இதுபோல் இவ்விடத்தில் கூடுகின்றனர். இது அழிக்க முடியாத ஒரு கலாச்சாரமாக வடிவம் பெற்றிருக்கிறது. சமூக நிலையிலும் உசிதமானதாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலை அமைவதற்கு அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக பலமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த பூமியும் நிலவும் சுழற்சியில் பயணிக்கிறது. நாம் அனைவரும் இந்த சுழற்சிக்கு உட்பட்டவர்கள் தான். இது பிணைப்பிற்கான சுழற்சியாகவும் மாறலாம் அல்லது பிறவியைக் கடந்து செல்வதற்கான ஒரு வழியாகவும் அமையலாம். முக்திக்காக ஏங்குபவர், தான் உருவாக்கிய சுழற்சிகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறார்.
பலவித சுழற்சிகள் உள்ளன, அதில் 144 வருடங்களுடைய சுழற்சியே மிக நீண்டது. ஒவ்வொரு 144 வருடங்களுக்கும் சூரிய மண்டலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏற்படும், அதனை ஒட்டித்தான் மகாகும்பமேளா நடைபெறுகிறது. இது சென்ற முறை 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது.
நாட்டின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும்தான் இந்த மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. அதைச் சுற்றி சக்தி நிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூமி சுழல்வதால், மையவிலக்கு விசையை உண்டு செய்கிறது. பூமத்திய ரேகையிலிருந்து 33 டிகிரி ரேகை வரை உள்ள பகுதிகளில், மையவிலக்கு விசை உங்கள் உடலில் செங்குத்தாக வேலை செய்கிறது, குறிப்பாக 11 டிகிரியில், சக்தி உடலில் நேர்கோடாக மேலே செல்கிறது.
இதன் அடிப்படையில்தான் முன்காலத்தில், இந்த பூமியில் எந்தெந்த இடங்கள் மக்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை கணித்தும், அந்த இடங்களை குறித்தும் வைத்தார்கள்.
இப்படி கணிக்கப்பட்ட இடங்களில் பல, நதிகள் சங்கமிக்கும் இடமாகவே இருந்தன. அந்த குறிப்பிட்ட நாளில் ஒருவர் அவ்விடத்தில் இருந்தால், அரிதான வாய்ப்புகள் அவருக்குக் கிட்டும். இதை அறிந்த மக்கள் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதற்காக அங்கு சென்றனர்.
இந்த மக்களில் பலர் கல்வியறிவு இல்லாத, மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட கிராமப்புற மக்களே. ஆனால் முக்திக்காக ஏங்கி, நெடுந்தூரம் பயணம் செய்து அவ்விடத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றனர். இந்த உலகில் வேறு எங்கும், மக்கள் தொகை முழுவதுமே இவ்வளவு தீவிரமாக முக்திக்காக ஏங்கியதில்லை.
பெரும்பாலான இந்தியர்களுக்கு இங்கு வழக்கத்தில் உள்ள ஆன்மீக செயல்முறைகள் பற்றியும் ஞானத்தின் ஆழம் பற்றியும் கவனமில்லை.
இந்த பாரதம்தான் உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்று அறியப்பட்டிருக்கிறது. இதைப்போல வேறு எந்த கலாச்சாரமும் உள்நிலைக்கான விஞ்ஞானத்தை இவ்வளவு ஆழமாக பார்த்ததில்லை. இங்கே முக்தி மட்டும்தான் உச்சபட்ச இலக்காக இருந்தது. கடவுள்கூட முக்திக்கான ஏணிப்படியாகத்தான் கருதப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக இன்று நாம் காணும் ஆன்மீகக் கலாச்சாரம், படையெடுப்பினாலும், நீண்ட கால வறுமையினாலும் பல விதங்களில் சிதறடிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருந்தாலும், அடிப்படை ஆன்மீகப் பண்பு இங்கு இன்னும் அழியவில்லை, அதை அழிக்கவும் முடியாது. இந்த ஆழமான பாரம்பரியத்தின் பலன்களை, அதன் முழுப் பெருமையும் ஓளிரும் விதமாக அறுவடை செய்வதற்கான சரியான நேரம் இதுவே.
0 comments:
Post a Comment