Saturday, February 2, 2013

டேவிட் – திரை விமர்சனம்

david-tamil 

 

விக்ரம், ஜீவா நடிப்பில், மணிரத்னத்தின் உதவியாளர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டேவிட்’. ஒரே பேர்(டேவிட்) கொண்ட இருவரின் வாழ்க்கையின் சில பகுதிகளை மட்டும் நாம் கதறக் கதறக் காட்டியிருக்கிறார்கள்.

1999-ல் மும்பையில் ஜீவா, தன் தந்தை நாசருடன் வாழ்ந்து வருகிறார். மதபோதகரான நாசருக்கு, சில மத அமைப்புகளால் அவமானம் நேர்கிறது. 2000-ல் கோவாவில், விக்ரம் வாழ்ந்து வருகிறார். விக்ரம் வரும் காட்சிகளிலெல்லாம் ‘மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது’ என்று திரையில் வருகிறது. நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்(இஷா ஷெர்வானி) மீது விக்ரமிற்கு திடீரென்று காதல் வருகிறது. விக்ரமிற்கு காதலி கிடைத்தாரா, நாசருக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர் பையன் ஜீவா துடைத்தாரா என்பதை நாம் சலிப்படையும் வகையில் திரையில் காட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தை போய் ஏன் இந்தி, தமிழ் என்று இரு மொழிகளில் வேறு எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

விக்ரமை விட ஜீவாவிற்குதான் ஸ்கோப் அதிகம்.விக்ரம், ஜீவா, நாசர் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. விக்ரம் வரும் போர்ஷனை விட, ஜீவா வரும் காட்சிகள் ‘கொஞ்சம்’ பரவாயில்லை. தன் குழந்தையுடன் இருக்கும் லார தத்தா ஜீவாவிற்கு நண்பி. அதேபோல் தபு, விக்ரமிற்கு.மொத்தப் படமுமே சுவாரஸ்யம் எதுவுமில்லாமல் நகர்கிறது. படத்தில் இறந்து போன விக்ரமின் அப்பா, ஆவியாக மற்றவர்களின் உடம்பில் புகுந்து பேசுவது எரிச்சல். படத்தின் ஒரே ஆறுதல், படம் இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடுகிறது.

படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக தம் மீது கோபம் கொள்வார்கள் என்று தெரிந்தோ என்னவோ, படத்தில் விவரமாக ‘உங்களுக்கு யார் தீங்கு செஞ்சாலும் மன்னிச்சுடுங்க’ என்று ஒரு வசனம் வருகிறது. அதேபோல் ‘கோடியில் ஒருத்தருக்குத்தான் கடவுள் வலியைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறார்’ என்றும் ஒரு வசனம் வருகிறது. அந்த ஒருவர் நீங்களென்றால் தாராளமாக இந்தப் படத்தைப் போய் பார்க்கலாம்.

டைரக்டர் சார், திரும்பவும் மணிரத்னம் கிட்ட போய் அசிஸ்டென்ட்டா சேர்ந்து, இன்னும் கொஞ்சம் தொழிலைக் கத்துக்கிட்டு வந்து படம் எடுங்களேன், ப்ளீஸ்!

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment