குறிப்பு: அந்த 'ஏழு’ காட்சிகள் நீக்கப்படுவதற்கு முன் பார்த்த 'விஸ்வரூபம்’ படத்தின் விமர்சனம் இது.
இந்திய உளவுத் துறை அதிகாரி, தலிபான் தீவிரவாதக் கூட்டத்துக்குள் புகுந்து ஆடும் உயிர்ப் பந்தய 'விஸ்வரூப’ விளையாட்டு.
அமெரிக்க வாழ் கதக் நடனக் கலைஞராக மென்மையும் பெண்மையுமாகத் தோன்றுகிறார் கமல். அவரது மனைவி, பூஜா குமார். தனது அலுவலக மேலதிகாரியுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் பூஜா. 'பெண் நளின’க் கமலிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக, அவருக்கு வேறு ஏதேனும் 'கனெக்ஷன்’ இருக்கிறதா என்று துப்பறியும் நிபுணர் மூலம் உளவு பார்க்கிறார் பூஜா. தவறுதலாக அல்கொய்தா தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் அந்த டிடெக்டிவ் கொலை செய்யப்படுகிறார். டிடெக்டிவை அனுப்பியது யார் என்று நூல் பிடித்துத் தேடி வரும் தீவிரவாதிகளிடம் சிக்குகிறார்கள் கமலும் பூஜா குமாரும். அப்போது கமல் ஒரு முஸ்லிம் என்று தெரியவருகிறது. கமலின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகும் தலிபான்களின் தலைவர் முல்லா முஹம்மது ஓமர், 'நான் வரும் வரை கமல் தப்பிவிடாதவாறு அவருடைய இரண்டு கால் முட்டிகளிலும் சுட்டுவிட்டு உயிருடன் வைத்திருங்கள்’ என்று சொல்கிறார். ஓமர் வருவதற்குள் கமல் எடுக்கும் ஆக்ஷன் விஸ்வரூபத்தைத் தொடர்ந்து, அவர் யார், எதற்கு அமெரிக்கா வந்தார், ஓமர் ஏன் அவரைப் பழிவாங்க எண்ணுகிறார் என்பதெல்லாம் விறுவிறு சினிமா!
ஹாலிவுட்டில் இதுபோல 500 படங்களாவது வந்திருக்கும். ஆனால், தமிழுக்கு..? படமாக்கப் பட்ட தரத்திலும், கதை சொல்லும் விதத்திலும், தொழில்நுட்பத்திலும் இது அடுத்தகட்ட அபாரப் பாய்ச்சல்!
நேச நாடாக இருந்தாலும், தன் அடையாளங்களை மறைத்து வாழும் ரகசிய உளவாளி, இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளாக உருமாற்றும் அல்கொய்தா பயிற்சிப் பட்டறை, சீசியம் கட்டப்பட்ட கதிர்வீச்சுப் புறாக்கள்... எனப் படம் முழுக்க செம ஃப்ரெஷ் விஷயங்களைத் தொட்ட விதத்தில் இயக்குநர் கமல்ஹாசனுக்குப் பாராட்டுகள்.
நளினம் மிளிரும் பரதக் கலைஞராக கண்கள் அபிநயம் பிடிக்க, பெண்மை கலந்து ஓடுவதும், ஆடுவதும், பேசுவதுமாக அந்த கதக் டான்ஸர் கமல்... அபாரம். தீவிரவாதிகளிடம் பிடிபட்ட சமயமும் பதற்றம் அடையாமல் கண்கள் சிமிட்டிச் சிமிட்டிச் சமாளிப்பது... கிளாஸிக் அப்ளாஸ்! 'சாகுறதுக்கு முன்னாடி ஒரு தடவை பிரேயர் பண்ணிக்கிறேன்’ என்று தீவிரவாதிகளிடம் அழுது விம்மி, அடுத்த நொடியில் அத்தனை பேரையும் பொளந்தெடுக்கும் அதிரடி அவதாரம்... கமலுக்கு ஒரு மைல்கல் ஆக்ஷன்.
அப்பாவி கமல் அடப்பாவி கமல் ஆகும்போது மருண்டு மிரளும் இடம் மட்டும் பூஜா குமாரின் ஸ்கோரிங் ஏரியா. இந்தப் படத்தில் எதுக்குங்க ஆண்ட்ரியா..? ஒருவேளை இரண்டாம் பாகத்துக்காக அவரது பாத்திரத்தை ரிசர்வ் செய்திருக்கிறார்களோ?
தலிபான் தலைவராக வரும் ராகுல் போஸ், அசத்தல் வில்லன். ஆங்கிலத்தில் பேசியதற்காகத் தன் மகனையே நெற்றிப்பொட்டில் விரல் வைத்து அவர் 'சும்மானாச்சுக்கும்’ சுடும்போதே தன் கதாபாத்திரம் எவ்வளவு டெரர் என்பதை உணர்த்திவிடுகிறார். ''அப்பா இல்லாம வளர்ந்த பசங்க விவரமா இருப்பாங்க'' என்று தான் சொல்லியதற்கு, ''யார் அப்பான்னே தெரியாம வளர்ந்த பசங்க அதைவிட விவரமா இருப்பாங்க'' என்று கமலிடம் கவுன்டர் வாங்கும்போது கெத்து கலைக்காமல் சிரிக்கவைக்கிறார்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் தமிழ் பேசும் காஷ்மீரி ஜிகாத்தாகச் சேர்ந்து, பயிற்சி கொடுத்து, பின் அங்கிருந்து கமல் தப்பிக்கும் காட்சிகள் படத்தின் படபடப்பு அத்தியாயங்கள். 'தலிபான்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்’ என்று 'செய்முறை’ விளக்கம் அளித்திருக்கும் கமல், உருவத்திலும் உடல் மொழியிலும் தேர்ந்த ஜிகாதி போலவே நடித்து மிரட்டுகிறார்.
''தீவிரவாதியைக் கடவுள்தான் காப்பாத்தணும்?'' என்று பூஜா குமார் சொல்ல, ''எந்தக் கடவுள்?'' என்று கமல் கேட்பதும், ''நான் இந்து. என் கடவுளுக்கு நாலு கை இருக்கும்!'', ''அப்படின்னா அவரை எப்படிச் சிலுவையில அறைவீங்க?'' ''நாங்க எங்க கடவுளைச் சிலுவையில அறைய மாட்டோம். கடல்ல தூக்கிப் போட்ருவோம்!'' போன்ற வசனங்களும் கமல் பிராண்ட் கிண்டல்ஸ்.
குழந்தை ஒன்றைத் தவறுதலாகக் கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வருந்துவதும், ''அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள்'' என்று தலிபான் தலைவரே அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பேசுவதும்... அடடே... அமெரிக்க ஜால்ரா!
'டர்ட்டி பாமை’ வெடிக்கவைக்கவிருக்கும் தீவிரவாதியைப் பிடிக்க, அவன் வீட்டுக்கு அருகில் ரயில் கடக்கும் இரைச்சலில் கதவை உடைத்துச் சென்று டார்கெட் அடிப்பது, வெடிகுண்டு ரிமோட்டில் தவறுதலாகக் கை பட்டு வெடித்துவிடாமல் இருக்க சேஃப்டி லாக் வைத்திருப்பது, தட்டான் போலப் பறந்து படம் எடுக்கும் ரிமோட் கேமரா, கதவிடுக்கில் வளைந்து சென்று படம் எடுக்கும் கேமரா எனப் படம் முழுக்க நவீன உத்திகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
''நான் ஒரு முஸ்லிம். என் பெயர் தௌபீக்'' என்று சொல்வதைத் தவிர, கமல் ஒரு முஸ்லிம் என்பதற்கான எந்தப் பின்னணி விவரமும் படத்தில் இல்லையே! அப்துல் கலாமோ, ஷாரூக் கானோ... யார், எவராக இருந்தாலும் விமான நிலையத்தில் துகிலுரியும் அமெரிக்காவில், ஓமரும் அவரது தளபதியும் சர்வ சுதந்திரமாக காரில் உலா வருவது, எஃப்.பி.ஐ-க்கு கமலைப் பற்றித் தகவல் தருவது, தனி விமானத்தில் பறப்பதெல்லாம்... லாஜிக் இல்லாத ஆப்கன் பாப்கார்ன். இந்திய உளவுத் துறை அதிகாரி அமெரிக்காவைக் காக்க உயிரைக் கொடுத்துப் போராடுவதும் 'ஹாலிவுட் கதவுக்கு காலிங் பெல்’!
அதிரடி அடிதடி படத்தில் பின்னணி இசையில் டெரர் கூட்டும் ஷங்கர் எஹ்சான் லாயின் இசை, 'உன்னைக் காணாது கண்’ பாடலில் தாலாட்டுகிறது. சானுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் அமெரிக்காவும் ஆப்கன் லொகேஷன் மலைகளும் அழகும் அபாரமுமாக மிரட்டுகிறது.
முன்னரே பல தமிழ்ப் படங்களில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தீவிரவாதி வில்லன்களைப் பார்த்திருக்கிறோம்தான். ஆனால், கமல் என்கிற நடுநிலையான கலைஞனுக்கு என்று ஒரு சமூகப் பொறுப்பு உண்டல்லவா? அந்த விதத்தில் குர்-ஆன் ஓதிவிட்டுக் கழுத்தை அறுப்பது, வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் முன் தொழுவது, 'முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும்’ போன்ற வசனங்களை ஒலிக்கவிட்டுஇருப்பது... தவிர்த்திருக்கலாமே கமல்!
ஆனால், அந்த சர்ச்சைகளைத் தாண்டி இது கமலின் 'விஸ்வரூபம்’தான்!
0 comments:
Post a Comment