‘அடடா... அவங்களுக்கு கேன்சர் வந்திருக்கா... ஐயோ, பாவம். ஆனா, நமக்கெல்லாம் அது வரவே வராது!'
- சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்போது இப்படி பதிலளித்திருக்கிறார்கள் பெண்கள் பலரும்!
நம்பிக்கை நல்லதுதான். ஆனால், அலட்சியப்படுத்த வேண்டிய விஷயமல்ல, ஆரோக்கியம். கேன்சரை மிக எளிய பரிசோதனைகள் மூலமாக முன்கூட்டியே கண்டறிந்து, ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்திவிட முடியும். ஆனால், 'இதற்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வதற்கேகூட தமிழகப் பெண்களில் பெரும்பாலானவர்கள் தயங்குகிறார்கள்' என்கிற கவலைக்குரிய விஷயம் இந்த ஆய்வில் வெளியாகியிருக்கிறது!
உலக அளவில் கேன்சர் தாக்குதல் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதில், தமிழ்நாட்டுக்கும் கவலைக்குரிய இடமிருக்கிறது!
கேன்சர் தாக்குதல், யாருக்கு... எதனால் நேரும் என்பது குறித்து முடிவு செய்ய முடியாமல், இன்று வரை மருத்துவ உலகம் தவிக்கிறது என்பதே உண்மை.
பெரும்பாலான மருத்துவர்கள், 'சமச்சீரான உணவு, உடல் சுத்தம் போன்றவற்றில் அதிக அக்கறை வேண்டும்' என்று எச்சரிக்கிறார்கள்! அதிலும், கர்ப்பவாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்று நோய் ஆகியவற்றால் இங்கே பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில், முன்எச்சரிக்கை மிகமிகக் கூடுதலாகவே தேவை என்று வலியுறுத்துகிறார்கள்.
இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்க, போலியோ சொட்டுமருந்து போடும்போது... 'இதெல்லாம் என் குழந்தைக்கு வராது' என்று நாம் தயங்கி, தவிர்த்தோமா..? அப்படித் தவிர்த்திருந்தால்... இன்றைக்கு, 'போலியோ என்பதே தமிழகத்தில் இல்லை' என்கிற நிம்மதியான நிலையை நாம் எட்டியிருக்க முடியுமா! குழந்தைக்கு என்று வரும்போது ஓடோடிப் போய் சொட்டுமருந்து போட்டுவிட்ட தாய்க்குலங்கள்... தமக்கு என்று வரும்போது தயங்கினால் எப்படி?
கேன்சர் மற்ற நோய்கள் போல் அல்ல... கண்ணுக்கு எதிரில், கொஞ்சம் கொஞ்சமாக... ஒட்டுமொத்தக் குடும்பத்தையே பொருளாதார ரீதியாக, மனோரீதியாக... என பல ரூபங்களிலும் குலைத்துப் போட்டுவிடும். இதை சமீபத்தில் மிக நெருக்கத்திலேயே நான் பார்த்து துடித்திருக்கிறேன் தோழிகளே! எனக்குத் தெரிந்த அந்தக் குடும்பம், மிக அழகான ஒரு குருவிக்கூடு போல சந்தோஷத்தில் சிறகடித்துக் கொண்டிருந்தது. புற்றுநோய்க்கு குடும்பத்தலைவியை பலி கொடுத்த பிறகு, தெய்வம் இல்லாத கோயில் போல வெறிச்சோடி வேதனையில் தவிக்கிறது.
புற்றுநோயிடம் போராடுவதைவிட, அதை வராமல் தடுப்பது சுலபம்.... விவேகம்! அப்படியே வந்துவிட்டாலும், சோர்ந்து, கலங்கி ஸ்தம்பித்துவிடாமல், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம், சரியான சிகிச்சை எடுத்து, வெற்றிகரமாக வாழ்க்கையைத் தொடர முடியும்.
வருமுன் காப்பதே மிகமிக முக்கியம்! அதற்கு தயங்காமல் நாம் மேற்கொள்ளும் சோதனைகளே உதவும்.
இதுதான், உலக புற்றுநோய் தடுப்புத் தினமான பிப்ரவரி-4, நமக்கு சொல்லும் செய்தி!
உரிமையுடன்
ஆசிரியர்
Published by WebStory
0 comments:
Post a Comment