காவல்துறை சம்மந்தமான கதைதான் அகிலன். அதிலும் இதில் நடித்திருக்கும் ஹீரோ சரவணன் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்றதுமே, இந்த படம் ஹீரோ புகழ் பாடும் படம் என்றும், ஒரே பஞ்சில் பத்து வில்லன்களையும், பஞ்ச் வசனங்களால் ரசிகர்களையும் படாத பாடு படுத்தப் போகிறார்கள் என்றும் நினைத்து படத்தை பார்க்க தொடங்கினோம்.
ஆனால், அறிமுக இயக்குநர் ஹென்றி ஜோசப், நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சியையும், அட! போடும் அளவுக்கு ஒரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பான ஒரு போலீஸ் ஸ்டோரியை காண்பித்தார்.
பெண்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று மதுரையை கதிகலங்க வைக்க, அவர்களை காவல்துறை எப்படி பிடிக்கிறது என்பதை கருவாக வைத்துகொண்டு, காவல்துறையின் உள்ளேயே இருக்கும் ஹீகோ விஷயத்தையும், அதனால் பாதிக்கப்படும் திறமையான அதிகாரிகளைப் பற்றியும் ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான திரைக்கதையோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஹென்றி ஜோசப்.
அகிலன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் சரவணன் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்றதுமே, பவர் ஸ்டாரைப் போல நம்மை படுத்தி எடுத்துவிடுவாரோ என்று நினைத்தால், மனுஷன் பக்க ஜென்டில்மேனாக நடித்திருக்கிறார். “நமக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.” என்று தனது நண்பனிடம் வசனம் பேசிவிட்டு அமைதியாக இருக்கும் ஹீரோ சரவணன், படம் முழுவதுமே அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஹீரோவாக ஒட்டிக்கொள்கிறார். பெரும்பாலான காட்சிகளில் வசனம் பேசியே சமாளித்திருக்கும் சரவணன், சில இடங்களில் போலீஸ் கதாபாத்திரத்திற்கான கம்பீரத்துடன் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது முதல் படம் தானே, அடுத்த படத்தில் அசத்துங்க பாஸ்.
ஹீரோயின் வித்யாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும், அவருடைய கதாபாத்திரமும், கதையுடன் பயணிக்கும் காட்சிகளும் நிறைவை ஏற்படுத்தியிருக்கிறது.
கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, மனோ பாலா. போண்டா மணி, மயில்சாமி ஆகியோர் காமெடிக்கு காரண்டி கொடுத்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு ஒரே இடத்தில் வரும் காட்சிகளில் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்க இவர்களை இயக்குநர் நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்த மதுரை முத்து முதல் முறையாக பெரிய திரைக்கு வந்திருக்கிறார். இவருடைய காமெடியும், வசனமும் கூடுதல் இனிப்பு.
வில்லத்தனமான போலீஸ் மேல் அதிகாரியாக நடித்திருக்கும் ராஜ்கபூர், சத்தம் போடாமல் தனது வில்லத்தனத்தை காண்பித்திருக்கிறார்.
சி.டி.அருள் செல்வனின் ஓளிப்பதிவும், மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பும் காட்சிகளின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.
கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அதிலும் “சும்மாவே சின்ன புள்ள…” என்ற பாடல் தாளம் போட வைக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் எஸ்.ஐ.ஹென்றி ஜோசப், கதையை மட்டுமே நம்பி புதுமுகங்களை வைத்து ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கிறார். போலீஸ் கதை என்றாலும் அதை சொன்ன விதத்தில் வித்தியாசத்தை கையாண்டு ஒரு பலமான திரைக்கதையோடு தனது முதல் பயணத்தை ஆரம்பித்திருக்கும் ஹென்றி ஜோசப்பை ஒரு பலமான சபாஷ் சொல்லி தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பார்கள்.
அகிலன் – பாராட்டுக்குரியவன்.
0 comments:
Post a Comment