Saturday, February 9, 2013

விஸ்வரூபம் – விமர்சனம்

viswaroopam

தயாரிப்பு – ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

இயக்கம் – கமல்ஹாசன்

இசை – சங்கர் எசான் லாய்

பாடல்கள் – வைரமுத்து

ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ்

படத்தொகுப்பு – மகேஷ் நாராயணன்

நடனம் – பண்டிட் பிர்ஜு மகாராஜ்

மக்கள் தொடர்பு – நிகில்

நடிப்பு – கமல்ஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர், நாசர், ஜரீனா வகாப், ஜெய்துப் அஹ்லாவத் மற்றும் பலர்.

வெளியான தேதித – 7 பிப்ரவரி (தமிழ்நாட்டில்)

மிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகக் கூடியவர்கள் என ஒரு சில இயக்குனர்களை மட்டுமே சொல்லி வந்தோம். இப்போது அதில் புதிதாக ஒரு இயக்குனர் இடம் பெற்றிருக்கிறார், அதிலும் ‘முதல் ரேங்கில் ‘, அவர்தான் கமல்ஹாசன்.

நாலு பாட்டு, நாலு ஃபைட்டு, வெளிநாட்டுல பாடல் காட்சி, யதார்த்தம் இல்லாத ச்சும்மா பறந்து பறந்து அடிக்கிறது, மிகவும் இளமையான ஹீரோயின்களுடன் ஜோடி என உள்ளூர் சினிமாவில் ஓணாணைப் பிடிக்காமல் அசலூரில் மதம் கொண்ட  யானையை அற்புதமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர் கமல்ஹாசன்.

ஷங்கர், முருகதாஸ், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் அவர்களின்  அடுத்த படங்களில் இன்னும் அதிகமாக சிந்திக்க வேண்டும் என  சவால் விடுத்திருக்கிறார் இயக்குனர் கமல். எதையும் முழுமையாக சொல்ல அவர் எடுத்திருக்கும் உழைப்பு நன்றாக வெளிப்படுகிறது. அறிவியல் படித்தவர்களைக் கூட விக்கி பீடியாவை தேட வைத்திருக்கிறார். நவீன கண்டுபிடிப்புக்களை படத்தில் பயன்படுத்தி படம் பார்க்கும் சராசரி ரசிகனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அமெரிக்காவில் கதக் நடன ஆசிரியராக இருக்கிறார் கமல்ஹாசன். அவருடைய மனைவி பூஜா குமார்  ’ நியூக்ளியர் ஆன்காலஜி ‘ யில் பி.எச்டி. பட்டம் பெற்றவர். அது சம்பந்தமான ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.  கொஞ்சம் பெண் தன்மையுடன் இருக்கும் கணவர் கமல்ஹாசனைப் பிடிக்காமல், ஆராய்ச்சி நிறுவன முதலாளியுடன் நெருங்கிப் பழகுகிறார்.

கமல்ஹாசனை    விவாகரத்து செய்ய முடிவெடுத்து, அவரைப்  பற்றி மேலும் அறிந்து கொள்ள ஒரு தனியார் துப்பறியும் அதிகாரியை ஏற்பாடு செய்கிறார். ஆனால், அந்த துப்பறியும் அதிகாரியோ போகக் கூடாத ஒரு இடத்திற்குச் சென்று கொலையாகிறார்.

அவரைக் கொலை செய்தவர்கள் அந்த துப்பறியும் ஆள் எதற்காக வந்தார் என தேட பூஜா குமார் பற்றிய விவரங்கள் அவர்களுக்குக் கிடைக்கிறது. பூஜாவையும், கமல்ஹாசனையும் கடத்திக் கொண்டு வருகிறார்கள். அப்போது , கமல்ஹாசனைப் பற்றி அறியும் அந்த கூட்டத்தின் தலைவன் ராகுல் போஸ் அதிர்ச்சியடைகிறார்.

கமல்ஹாசன், ஆப்கனில் தீவிரவாத குழுவில் இருந்த ஒரு இந்திய உளவுத் துறை அதிகாரி என்பதும், அவர் எதற்கு தீவிரவாதக் குழுவில் சேர்ந்தார், எதற்காக அமெரிக்காவில் பெண்மைத் தனம் கொண்ட நடனக் கலைஞராக இருக்கிறார் , இப்போது அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் விடை கிடைக்கிறது.

சீசியம் என்ற வேதியியல் தனிமத்தை வைத்து நியூயார்க் நகரம் முழுவதும் புறாக்களின் மூலம் அணுக் கதிர் வீச்சை பரப்பும் ராகுல் போஸ் திட்டத்தை கமல்ஹாசன் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மீதி கதை. (சீசியம் (ceasium or cesium) என்பது மிகவும் ஆபத்தான வேதியில் தனிமம். இதை மிகவும் பாதுகாப்பான முறையில் மட்டுமே கையாள வேண்டும்.  கேன்சர் உள்ளவர்களுக்கு இந்த சீசியத்தை வைத்து சிகிச்சை செய்ய முடியும். ஆனால், சாதாரணமானவர்கள் , அதாவது கேன்சல் இல்லாதவர்கள் இதைக் கையாண்டால் கேன்சர் வந்து விடும்).

தமிழ்த் திரையுலகில் கமல்ஹாசன் போன்ற ஒரு சிறந்த நடிகர் இருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம். எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தை முழு ஈடுபாட்டுடன் இவ்வளவு சிறப்பாகச் செய்யும் நிகழ் கால கலைஞன் யாருமேயில்லை. அதிலும் , அந்த பெண்மை கலந்த நடனக் கலைஞரின் கதாபாத்திரத்தை ஆஹா..ஓஹோவென பாராட்டாமல் இருக்க முடியாது. அவருடைய கையும், காலும் கூட அல்லவா நடிக்கிறது. இறுக்கமான உடை முதல் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட ஒருவர் எதிராளிகளின் கூடாரத்தில் வீரமகனாக பொங்கி எழும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. என்ன ஒரு மாற்றம்…அந்த காட்சியில்…அதன் பின் ஆப்கனில்  தீவிரவாதக் குழுவில் இருக்கும் போது, அப்படியே அந்த கதாபாத்திற்குத் தகுந்தபடி மாறுவதும் கமல்ஹாசன் என்ற கலைஞானியால் மட்டுமே முடியும். கமலின் நடிப்பைப் பற்றி பாராட்டாமல் வேறு எதை எழுதுவது…

கமலின் மனைவியாக பூஜா குமார். அமெரிக்க வாழ்வில் ஆசைப்பட்டு கமல்ஹாசனைக் கல்யாணம் கொண்டு முதலில் தவிக்கிறார். கமல் என்னதான் அவருக்கு பார்த்து பார்த்து செய்தாலும், அந்த தீராத வெறுப்பை பூஜா காட்டும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அருமை. அதன் பின், கமலின் உண்மையான சுயரூபத்தைத் தெரிந்து கொண்டு அவர் மீது தீராத காதலுடன் இருக்கிறார்.

கமலின் டீமில் ஒருவராக ஆன்ட்ரியா…ஒரு பாடலுக்கும் அதன் பின் கொஞ்சம்  காட்சிகளிலும் வருகிறார்.

தீவிரவாதத் தலைவனாக ராகுல் போஸ், ஆப்கனில் அவரது ஆவேசமும், அமெரிக்காவில் அவரது மறைமுக ஆட்டமும் கமலுக்கு சபாஷ், சரியான போட்டி என சொல்ல வைக்கிறது.

சேகர் கபூர்,   நாசர் ,  ஆகிய தெரிந்த முகங்கள் ஒரு சில காட்சிகளில் வருகிறார்கள்.  இன்னும் சில ஆங்கில நடிகர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சங்கர் எசன் லாய் இசையமைப்பில் ‘உன்னைக் காணாத….’ பாடலும், இவன் யாரென்று…..பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பாராட்ட வேண்டும் என்றால் இடம் போதாது. அனைவருமே அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அவ்வளவு சீக்கிரமாக  தீவிரவாதக் குழுவில் சேர்த்துக் கொள்வார்களா, தீவிரவாதக் குழுக்கள் அமெரிக்காவில் இப்படி இருந்து கொண்டு செயல்படுவதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இந்திய அதிகாரி கண்டு பிடிக்கிறாரே போன்ற சந்தேகங்கள் எழாமல் இல்லை, ஒரு வேளை இவற்றிற்கெல்லாம் விஸ்வரூபம்  2ம் பாகத்தில் விடை வைத்திருக்கிறாரா கமல்ஹாசன் ?

உலக அரசியலை சொல்லும் ஒரு தமிழ் சினிமா…

விஸ்வரூபம் – தமிழ் சினிமாவின் அடுத்த ரூபம்  ஆரம்பம்…

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment