சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, 16 வயது தான் நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.
முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.
சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.
இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.
பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.
இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் 'சர்' பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல் 'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.
Published by WebStory
0 comments:
Post a Comment