Sunday, February 3, 2013

பங்கு சந்தையில் பணம் அள்ளுவது எப்படி?-

பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிது.தொலைப்பது அதை விட எளிது.இந்திய பங்கு சந்தைகளில் தான் பணம் செய்ய முடியும்.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளில் பெரியதாக ஒன்றும் சம்பாதிக்க முடியாது.வளரும் நாடுகளின் சந்தையில் தான் பணம் சம்பாதிக்க முடியும். "பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எளிது" என்று மிக சுலபமாக சொல்லிவிட்டேன் என்று நினைக்காதீர்கள்.உண்மை அதுதான்.பங்குசந்தை என்பது ஒரு தொழில்.அதை தொழிலாக நினைத்து செய்தால் பணம் வரும்.சூதாட்டமாக நினைத்து ஆடினால் தருமபுத்திரன் நிலை தான் ஏற்படும். பங்குசந்தையில் என்னுடைய அனுபவத்தை முதலில் சொல்லிவிடுகிறேன்.பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்று முடிவெடுத்தேன்.பெரிதாக முதலீடு செய்ய பணமில்லை.முதலில் நான் செய்த காரியம் பங்குசந்தை பற்றி படித்தது தான்.படித்து நான் தெரிந்து கொண்டது பங்கு சந்தையில் பணம் பண்ணுவது எப்படி என்று ஒரு பயலுக்கும் தெரியாது என்பதுதான்.இந்தியாவில் விற்கும் மூலதன பத்திரிக்கைகள் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை."இந்த பங்கை வாங்கு.3 மாதத்தில் நீ கோடீஸ்வரன்" என்று பழைய பத்திரிக்கைகளில் எழுதி இருக்கும்.இப்போது அந்த பங்கின் விலை அதளபாதாளத்தில் இருக்கும். "பத்திரிக்கையை நம்பாதே,புரோக்கரை நம்பாதே,புத்திமதி சொல்லும் ஒருவரையும் நம்பாதே" என்பது தான் நான் பல,பல,பல மணிநேரம் லைப்ரரியில் செலவு செய்து கற்றுகொண்ட பாடம். ஆனால் உபயோகமாக பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.டீமாட் அக்கவுண்ட் என்றால் என்ன,எப்படி புரோக்கரிடம் ஏமாந்து போகாமல் இருப்பது,மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன இப்படி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.அடுத்ததாக தெரிந்து கொண்ட விஷயம் பங்குசந்தையில் பணம் செய்தவர் என்று கைகாட்ட முடியுமானால் வாரன் பப்பட் என்ற மனிதரை தான் கைகாட்ட முடியும்.உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர்.பேப்பர் போடும் பையனாக தனது வாழ்வை துவக்கியவர்.பங்கு சந்தையில் முதலீடு செய்து உலகின் இரண்டாவது பெரிய பணக்காரணனானவர் என்று தெரிந்ததும் என்பது தெரிந்ததும் அவர் எனது ஆதர்ச குருவானார். அதை விட என்னை ஈர்த்த விஷயம் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் கலை பற்றி அவர் புத்தகம் எழுதியிருக்கிறார் என்பதுதான்.அந்த புத்தகங்கள் இந்தியாவில் அப்போது எங்கும் கிடையாது.புத்தக விலை எனது அப்போதைய ஒரு மாத சம்பளம்.அதை வாங்கிப்படித்தால் பயணுண்டா இல்லையா என்பது கூட தெரியாது. "சரி,காசு போனால் போய் தொலையட்டும்,ஒன்றும் பிரயோஜனமில்லா விட்டாலும் சரி" என்று அமெரிக்காவில் இருந்த ஒரு பழைய நண்பருக்கு ஈமெயில் அனுப்பி 3 மாதம் கழித்து அவருக்கு தரும சங்கடத்தை கொடுத்து அந்த புத்தகத்தை பெற்றேன்.பாவம் அவர்.பணம் நான் தருவேனோ மாட்டேனோ என்று கேட்க அவருக்கு சங்கடம்.அதை கேட்கவும் தயக்கம்."பணம் தருகிறேன்" என்று சொல்லிவிட்டேனே தவிர அதை அப்போது எப்படி அமெரிக்காவுக்கு அனுப்புவது என்பது எனக்கு தெரியவில்லை. கடைசியில் அந்த பிரச்சனை ஒருவழியாக தீர்ந்து புத்தகம் கைக்கு வந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.புத்தகம் கைக்கு வருவதற்குள் நான் ஆடிய ஆட்டம் சொல்ல முடியாது.லைப்ரரிக்கு ஓடிப்போய் பைனான்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எடுத்து படித்து நேரத்தை கழித்துக்கொண்டிருந்தேன்.அந்த புத்தகம் புரியுமோ புரியாதோ அதில் என்னென்ன வகை கணக்குகள் இருக்குமோ என்றெல்லாம் குழப்பம். புத்தகம் கைக்கு வருவதற்கு ஒரு வாரம் இருக்கும்.பங்கு சந்தை தட தட என்று சரிந்தது.என் நம்பிக்கையும் தட தட என்று சரிந்தது.பத்திரிக்கைகளில் பங்கு சந்தையில் ஏமாந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் கதைகள் தொடர்ந்து வெளிவந்தன.விரக்தியில் இருந்தேன்.புத்தகம் வந்தது.பளா பளா என்று அட்டைபடம். அவநம்பிக்கையோடு புத்தகத்தை பிரித்தேன்.படித்தேன்.ஒரே நாள்.புத்தகத்தை முழு மூச்சில் படித்து முடித்தேன்.இனி பங்கு சந்தையில் அடித்து தூள் கிளப்பலாம் என்ற நம்பிக்கை மனதில் வந்தது.இது தெரியாமலா இத்தனை பேர் பணத்தை தொலைக்கிறார்கள் என்று பாவமாக இருந்தது.வாரன் பப்பட்டின் முறை மிகவும் எளிதான முறை.எந்த கடினமான பைனான்ஸ் முறையும் அந்த புத்தகத்தில் இல்லை.சொல்லபோனால் அவர் ஒன்றும் கணிதத்திலோ,பைனான்ஸிலோ சூரப்புலியல்ல.6 வகுப்பு படித்த மாணவனுக்கு புரிவது போல் தான் அவர் அந்த புத்தகத்தை எழுதியிருந்தார். "பங்கு சந்தையில் பணம் பண்ணுவது எப்படி என்று தெரிந்துகொண்டேன்" என்று என் நண்பர்களுக்கு சொன்னேன்."இப்படித்தான் நாங்களும் ஒரு காலத்தில் நினைத்துக்கொண்டிருந்தோம்" என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்கள்.They dismissed it as a stock market novice's initial enthusiasam.
Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment