Saturday, April 7, 2012

3 - சினிமா விமர்சனம்



மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைப்படங்கள் பலவும் புஸ்ஸாகிப் போவதுதான் தமிழ்ச் சினிமாவின் நடைமுறை. இந்த நடைமுறையையே இப்போது புஸ்ஸாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா..! தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்..
சாதாரண சினிமா பாடல் ஒன்று 3 லட்சம் பேரால் பார்க்கப்படும் அளவுக்கு பேசப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கிடைத்ததை சர்வ நிச்சயமாக பயன்படுத்திக் கொண்டது 3 டீம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்..!
தனுஷ் நிச்சயமாக பள்ளி மாணவராக, கல்லூரி மாணவராக நடிப்பதை இந்தப் படத்தோடு நிறுத்திவிடுவதே இப்படத்திற்குக் கிடைக்கும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!
படத்தின் முதல் பாதியில் இருக்கும் கண்டவுடன் காதலும், அதைத் தொடர்ந்த காதல் தூது விடும் படலங்களும், எதிர்ப்புகளும், புறக்கணித்த திருமணக் கதைகளும் வாரவாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களில் இருக்கும் கதைதான். ஆனால் இதில் உண்மை இருக்கிறது.. உணர்ச்சி இருக்கிறது.. நடிப்பும், இயக்கமும் போட்டி போட்டிருக்கின்றன..!
தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.  பரவசப்படுத்தியிருக்கிறார்.. பள்ளி மாணவர் கெட்டப்பில் அவர் காட்டும் மேனரிசமும், நிமிடத்திற்கொரு முறை மாறும் நடிப்பும் அசத்தல்..! எந்த வகையிலும் தனுஷின் நடிப்பை குறை சொல்லவே முடியவில்லை..! சிவகார்த்திகேயனின் புலம்பலோடு, ஸ்ருதிக்காக காத்திருக்கும் தருணங்களில் அவர் காட்டும் ஆக்சன்கள் காதலிக்காதவர்களைக்கூட அது பற்றிய சிந்தனைக்குள் தள்ளி விடுகிறது..!
ஸ்ருதியை முதல் முறையாக பைக்கில் உட்கார வைத்து ஓட்டிக் காட்டும் காட்சியிலும், ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று “இன்னிக்கு நாம சந்திக்கலாமா..?” என்று டென்ஷன்படுத்துவதும், இரவில் தனிமையில் ஸ்ருதியைச் சந்திக்கும் காட்சிகள்.. டியூஷன் சென்டரில் முதல் முறையாக ஸ்ருதி அவரைப் பார்த்து ஸ்மைல் செய்தவுடன் காட்டும் எக்ஸ்பிரஷனும் சொல்ல முடியாதது..! நடிப்பில் தனுஷ் ஒரு படி மேலே போயிருக்கிறார்..!  இதற்கு நேர்மாறாக இடைவேளைக்குப் பின்னான வேறொரு களத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷம், ஸ்ருதிக்கு தன்னைப் பற்றித் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தவிக்கும் பரிதவிப்பு.. ஸ்ருதியுடன் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரு மன இடைவெளியில் அவர் வாழும் வாழ்க்கையில் பொய் சொல்லாமல் வாழ்ந்திருக்கிறார் தனுஷ்..!
இதற்கு மிகச் சரியான நடிப்பை ஸ்ருதியிடம் இருந்து வாங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் டைட் குளோஸப் ஷாட்டுகளும், அவருக்கு டப்பிங் பேசியவரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும் சேர்ந்து ஸ்ருதியை நடிப்பு கேரியருக்குள் தள்ளியிருக்கிறது.. ஏ.ஆர்.முருகதாஸ் அவசியம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இதே ஸ்ருதியை வைத்து தான் என்ன செய்தோம் என்பதை அவர் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் அவருக்கும் நல்லது.... அவரது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கும் ஹீரோயின்களுக்கும் நல்லது..!
முதன்முதலாக தனுஷிடம் அமைதியாக, அடக்கமாக பேசி வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்சினையாயிரும் என்று சொல்லும் ஸ்ருதியின் அந்தப் பேச்சு, டியூஷன் சென்டர்வரையிலான தொடர் பார்வையினால் சலனப்பட்டு ஓகே சொல்லும் அந்த ஒரு காட்சியே கவிதைதான்..! 
ச்சும்மா இருக்கும்போது அழகாக இருந்தால் அவர் நடிகையல்ல.. நடிக்கும்போது இன்னும் அழகாக இருந்தால் அவர்தான் நடிகை.. இதில் ஸ்ருதி சென்டமே அடித்திருக்கிறார்..! கோவில் வாசலில் “போடி. அமெரிக்காவுக்கே போயிரு” என்று தனுஷ் கோபப்படும் காட்சியில் கைகளை குறுக்கேக் கட்டிக் கொண்டு அழுதபடியே திரும்பிச் செல்கிறாரே, அந்த ஒரு காட்சிக்காகவே ஸ்ருதிக்கு ஒரு ஓ போடலாம்..! 
அதேசமயம் ஸ்ருதியின் நடிப்புத் திறமை இத்தனை இருக்கிறது என்பதற்காக இன்னும் அவருடைய மிச்ச, மீதி கேரியரில் அழுக வேண்டிய காட்சிகளுக்கு அனைத்தையும் சேர்த்து இந்த ஒரு படத்திலேயே அழுது தீர்த்திருக்கிறார் என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!
இப்போதுதான் மயக்கம் என்ன படத்தில் இதே போன்ற ஒரு கதையைப் பார்த்து நொந்து போயிருக்கும் நிலையில் இதே பேட்டர்னில் மீண்டும் ஒரு கதையை செய்ய ஐஸ்வர்யாவுக்கு எப்படி தைரியம் வந்த்து என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.  கதைக் களன் மட்டுமல்ல.. திரைக்கதையையும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளி மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை உரித்துக் காட்டினாற்போல் எடுத்திருக்கும் விதம் அசர வைக்கிறது..!
முதல் பாதிக்கு சிறிதுகூட சம்பந்தமே இல்லாத இரண்டாம் பகுதியில்தான் ஐஸ்வர்யா நிறையவே ஜெயித்திருக்கிறார். இதற்காக அவர் கொடுத்திருக்கும் ஓப்பனிங் லீடிங் எந்தவொரு இயக்குநருக்கும் வராத தைரியம்.. கணவர்தானே நடிகர் என்பதோடு சொந்தத் தயாரிப்பு என்பதாலும் துணிந்திருக்கிறார் ஐஸ்.. மானசீக நடிகர் பிணமாக இருக்கும் காட்சியோடு துவக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களா என்ற கேள்விக்குறியோடு வரும்கால இயக்குநர்கள் பாலோ அப் செய்தால் என்னவாக இருக்கும்..? யோசித்துப் பார்த்தால் வேறு எந்த இயக்குநருக்கும் இந்த அளவுக்கு நிச்சயமாக தைரியம் வராது..! வெல்டன் ஐஸ்..!
இயக்கத்தில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமாக செய்திருக்கிறார். பிரபு-பானுபிரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச் எதிர்பாராதது..! எத்தனை பணக்கார வீடுகளில் இது போன்று பக்குவப்பட்டு போயிருக்கிறார்கள்..! இதற்கு நேரெதிராக ஸ்ருதியின் வீட்டைக் காட்டுகிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் அப்பா தனுஷை பார்த்தவுடனேயே அறைகிறார். வீட்டிலும் கோபப்படுகிறார்.. அம்மா ரோகிணியும் ஆத்திரப்படுகிறார். வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஒரு மிடில் கிளாஸ் பேமிலியர்கள் என்றாலே இப்படித்தானோ என்று பேச வைத்திருக்கிறார் ஐஸ். திருமணம் முடிந்து தனுஷ் ரோகிணி வீட்டிற்கு வந்து அழைக்கும்போது அவரது பேச்சில் மருமகனது உண்மைத்தனத்தை ரோகிணி மட்டுமே கண்டறிவதாக இயக்கம் செய்திருப்பது நன்று..! 
தனுஷ்-ஸ்ருதி முதல் இரவு காட்சி மிகவும் ரசனையானது..! உண்மையாகவே ஆண், பெண் அடிமைத்தனம், திருமண பந்தம் என்ற சங்காத்தமே இல்லாமல் துவங்கியிருக்கும் அந்தக் காதல் வாழ்க்கைக்கு முதல் காட்சியே அமர்க்களம்..! “என்ன பேண்ட் போட்டிருக்க..?” என்ற தனுஷின் கேள்விக்கு “நீயென்ன வேஷ்டியா கட்டிருக்குற..?” என்ற ஸ்ருதியின் பதில் ரசனையானது..!  பிரச்சினை இப்படித்தான் வேறு கோணத்தைத் தொடப் போகிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் இடைவேளைக்குப் பின்பு அது வேறொருவிதமாகப் போகும் என்று நினைக்கவேயில்லை..!
தனது இயக்கத் திறமைக்கு தீனி போடும்விதமான காட்சிகளைத்தான் வைத்திருக்கிறார் ஐஸ். தனுஷின் நண்பர் சுந்தரிடம் விசாரிக்கத் துவங்கி அவர் மூலமாக காட்சிகளை தொடர்ச்சியாக பின்ன வைத்து, இடையிடையே ஸ்ருதியின் கதறலோடு படத்தின் முழு பாரத்தையும் தனுஷின் மீது சுமத்தியிருக்கிறார் இயக்குநர். ஹோட்டல் கார் பார்க்கிங் ஏரியாவில் நடக்கும் சண்டை காட்சியில் தனுஷ் தனது உச்சக்கட்ட நடிப்பைக் காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்..! 
நடிப்பு, இயக்கத்திற்கு தோதான வேல்ராஜின் கேமிராவும் அழகையே பதிவு செய்திருக்கிறது..! சென்னையின் எந்த ஏரியாவில் தனுஷ் சைட் அடிக்கும் அந்தப் பகுதியைப் படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. லாங் ஷாட்டில் பார்ப்பதற்கு ஸ்கிரீனெஸ் சூப்பர்ப்..! கிரேடிங்கை கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பது பலவித காட்சிகளிலும் தெரிகிறது..! 
பல லட்சம் பேர் ஏற்கெனவே கேட்டு முடித்து ஆவலுடன் எதிர்பார்த்ததாலோ என்னவோ, கொலைவெறிடி பாடல் காட்சி மட்டும் சப்பென்றுதான் இருக்கிறது ரசிகர்களுக்கு.. எனக்கு ஓகேதான்.. வேறென்ன செய்ய முடியும்..? ஏர்செல்லின் 2 கோடி ரூபாய் ஸ்பான்ஸரில் இந்த ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்..! படத்தின் தரத்திற்கு இதுதான் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது..! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின்பு ஒரே படம், ஒரே பாடலின் மூலமாக மிகப் பெரிய பெயர் கிடைத்திருப்பது அனிருத்திற்குத்தான்.. இதனை இவர் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று பார்ப்போம்..! படத்தின் மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.. ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்ருதியும், தனுஷும் பின்னிப் பிணைந்து கொண்டிருக்க.. யார் பாடலைக் கேட்டிருப்பார்கள்..!
மனைவி என்றில்லை.. ஒரு தமிழ்ப் பெண் இயக்குநராக இருந்ததினால் கிஸ் சீன்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, தனுஷிற்கு பெரும் ஏமாற்றமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே ஹிந்தி, தெலுங்கு படமென்றால் ஸ்ருதியின் மூக்கிற்கு பதிலாக உதடுகள் புண்ணாகிப் போயிருக்கும்.. தப்பித்தார் ஸ்ருதி..!
தமிழகம் முழுவதும் படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்க.. வழக்கம்போல படத்திற்கு எதிர்ப் பாட்டுக்களும் குறைவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன..! காரணம் என்ன என்றுதான் தெரியவில்லை. கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என்ற வரிசையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத படம்தான் இது..!
மயக்கம் என்ன படத்திலேயே பார்த்துவிட்டோம் என்பதுதான் இவர்கள் சொல்லும் விளக்கமெனில் அதனைவிட அழகாக, அழுத்தமாக இப்படம் அந்த நோயின் கொடுமையை பதிவு செய்திருக்கிறது என்பதுதான் ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் செய்தி..! தமிழ்ச் சினிமாவிற்கு ஒரு மிகச் சிறந்த பெண் இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி..
தமிழகம் முழுவதிலும் படத்திற்கு நல்ல வசூல் என்று விநியோகஸ்தர்கள் பாராட்டுகிறார்கள். போட்ட காசை முதல் வாரத்திலேயே கலெக்ட் செய்துவிடலாம் என்பது லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு. அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம்தானாம்..! முதல் மூன்று நாட்களிலேயே ஒன்றரை கோடியை சென்னையில் மட்டும் வசூல் செய்திருப்பது சாதனைதான்..! ஐஸ்வர்யா அவரது அப்பனுக்கும் சேர்த்தே கொஞ்சம் சவால் விட்டிருக்கிறார் போல் தெரிகிறது..! படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்..!
 
நன்றி: உண்மைதமிழன்

0 comments:

Post a Comment