அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.
முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி.
சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம். முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unsaturated fat) முட்டையில் உள்ளன என்கிறார் டாக்டர். டொனால்ட் மெக்மைரா.
1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு. இது போக, 1986ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், மிருக வைத்தியர்கள் என தினமும் முட்டை சாப்பிட்டனர். இந்த டாக்டர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது. இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவிக்கிறது.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துக் சாப்பிட்டால் கெடுதல்தான். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும்.
நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.
மற்றவர்கள் முட்டையைக் கண்டு பீதி கொள்ளாமல் சிறந்த சத்துணவாக முட்டையை தினமும் உணவில் சேர்த்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று அமெரிக்கன் எக் போர்ட்டின் நியூட்ரிஷியன் சென்டர் அறிவிக்கிறது.
0 comments:
Post a Comment