உலகின் மிக விரும்பப்பட்டுப் படிக்கப்படும் நான்கு சூப்பர்ஹீரோக்கள். அவர்களின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு வில்லன். இந்த சூப்பர்ஹீரோக்களைக் கட்டி மேய்க்கும் ஆற்றல்வாய்ந்த அதிகாரி ஒருவர். ஒவ்வொரு சூப்பர்ஹீரோவுக்கும் உள்ள பிரச்னைகள். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, ஹாலிவுட்டின் அரதப் பழைய ஃபார்முலாவான அமெரிக்க அழிவு - அதை ஹீரோக்கள் காப்பாற்றுதல் என்ற வீக்கான கதையை ஒப்பேற்ற முடியுமா? அதுவும், இதுவரை காமிக்ஸ் ஹீரோக்களை வெற்றிகரமாகத் திரையில் காட்டியிருக்கும் ஸாம் ரெய்மி, க்ரிஸ்டோஃபர் நோலன் போன்ற பெரிய கை கை எதுவும் இல்லாமல், சாதாரண இயக்குநர் ஒருவரால்?
Hell Yeah !
ஜாஸ் வீடன் (Joss Wheadon) எப்படி இந்த அளவு அட்டகாசமான திரைப்படம்
ஒன்றைக் கொடுத்திருக்கிறார்? பிற பிரபல இயக்குநர்களிடம் இல்லாத ஒன்று,
வீடனிடம் அபரிமிதமாகக் குவிந்திருப்பதே காரணம். காமிக்ஸ் புத்தகம் ஒன்றைத்
திரைப்படமாக எடுக்கும்போது, அந்த இயக்குநரே ஒரு காமிக்ஸ் வெறியராக மட்டும்
இல்லாமல், காமிக்ஸ் கதைகளை எழுதிக் குவித்து, காமிக்ஸிலேயே ஊறித்
திளைத்தவராக இருந்தால், எப்படி இருக்கும்? அதுதான் வீடனின் வெற்றிக்கு
முழுமுதல் காரணம். வீடனைப் பற்றித் தெரிந்தவர்கள், அவர் பல காமிக்ஸ்
கதைகளுக்கு எழுத்தாளராக இருந்திருப்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள்
(Astonishing X Men, Fray ஆகியவை இரண்டு உதாரணங்கள்). இதுமட்டும் இல்லாமல்,
வெற்றிகரமான தொலைக்காட்சி ஸீரியலாக இருந்த Buffy the Vampire Slayer (பழைய
ஸ்டார் ப்ளஸில் இது வந்ததை ஆங்கில ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று
நம்புகிறேன்) இவரது கைவண்ணமே. இந்த ஸீரியலை இவர் எழுதி இயக்கியதற்குக்
காரணம், ஆல்ரெடி 1992ல் இதே பெயரில் வந்த திரைப்படத்துக்கு இவர் திரைக்கதை
எழுதிக்கொடுத்ததே.
இப்படி ஒரு பலத்த அஸ்திவாரம் வீடனுக்கு இருக்கிறது.
மேலே சாதாரண இயக்குநர் என்று வீடனைப் பற்றிச் சொல்லியிருப்பது, ஓரளவே சரி.
ஏனெனில், ஹாலிவுட்டில் வீடன் ஒரு பாப்புலர் நபர். அவெஞ்சர்ஸ் படத்தை இவர்
இயக்கப்போகிறார் என்று தெரிந்ததுமே குஷியான மார்வெல் ரசிகர்களே அதிகம்.
இந்தியாவில் இந்தப் பெயர் அந்த அளவு அறிமுகமில்லாத ஒன்று என்பதாலேயே
அப்படிப் போட்டது.
2007லேயே அவெஞ்சர்ஸ் படத்தின் திரைக்கதை எழுதும் முயற்சி தொடங்கியாயிற்று. The Incredible Hulk திரைக்கதையை எட்வர்ட் நார்ட்டனுடன் சேர்ந்து எழுதிய ஸாக் பென் (Zak Penn - Last Action Hero, Behind Enemy Lines, Inspector Gadget, X men: The Last Stand
போன்ற பல திரைக்கதைகளை மற்றவர்களுடன் சேர்ந்து எழுதியிருப்பவர்),
அவெஞ்சர்ஸ் படத்துக்கும் திரைக்கதை எழுத அமர்த்தப்பட்டார். இவரது
திரைக்கதையைத் திருத்தியது, இயக்குநர் ஜாஸ் வீடனே தான்.
படத்துக்கு இசையமைத்தவர், அலன் ஸில்வெஸ்ட்ரி.
படத்தின் தக்குனூண்டு கதை என்ன?
‘Thor' படத்திலேயே, பட இறுதியில், ஒரு பெட்டியை நிக் ஃப்யூரி, விஞ்ஞானி ஸெல்விக்கிடம் அளித்து, அதனை ஆராயச் சொல்லும் காட்சி நினைவிருக்கிறதா? இந்தக் காட்சிதான் அவெஞ்சர்ஸ் படத்தின் கதைக்கு ஒரு கரு.
அவெஞ்சர்ஸ் படத்தின் கதை நடைபெறும் காலத்தில், அந்தப் பெட்டியில் உள்ளதை எடுத்து ஆராய்ந்து, அது என்ன என்றும் கண்டுபிடித்தாகிவிட்டது.
ஆங்கிலத்தில் Tesseract என்ற வார்த்தைக்கு, நாற்பரிமாண கனசதுரம் என்று அர்த்தம். இதைப் படித்ததும் பீதியடைந்து ஓடிவிடாதீர்கள். வழக்கமான முப்பரிமாண கனசதுரத்தை, Cube என்று அழைப்போமல்லவா? இருபரிமாண சதுரத்தை Square என்று அழைப்போம். இப்படி சதுரத்துக்கு ஒரு பரிமாணம் அதிகரித்தால் அது க்யூப். க்யூபுக்கு ஒரு பரிமாணம் அதிகரித்து, அது நாற்பரிமாணமுள்ள வஸ்துவாக மாறினால் அது டெஸராக்ட். இப்படிப்பட்ட டெஸராக்ட் ஒன்று, விஞ்ஞானி ஸெல்விக்கால் (தோரின் காதலி ஜேன் ஃபாஸ்டரின் தந்தை) ஃப்யூரி அளித்த ஸூட்கேஸிலிருந்து கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், தற்போது, இந்த டெஸராக்டை கட்டுப்படுத்த முடிவதில்லை. அது ரியாக்ட் செய்கிறது. அப்படியொரு நாள், அதிலிருந்து பீறிப்பாயும் எனர்ஜியால், அஸ்கார்ட் கிரகத்தைச் சேர்ந்த தோரின் அண்ணன் லோகி வெளிப்படுகிறான். S.H.I.E.L.D. அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரையும் செயலிழக்கச் செய்து, அந்த டெஸராக்டையும் எடுத்துக்கொண்டு, கூடவே ஏஜெண்ட் Hawkeye (தோரில் வரும் வில்லாளி) மற்றும் விஞ்ஞானி ஸெல்விக் ஆகியவர்களை மனம் மாற்றி, தன்னுடனே அழைத்துச் சென்றுவிடுகிறான்.
ஏன்?
தோர் படத்தின் க்ளைமாக்ஸில், அஸ்கார்டிலிருந்து தூக்கியெறியப்பட்டுவிடும் லோகி, மற்றொரு கிரகத்தைச் சேர்ந்த வில்லன் க்ரூப் ஒன்றைப் பார்க்க நேர்கிறான். அந்த க்ரூப்பின் லட்சியமே, விண்வெளியில் இருக்கும் அத்தனை கிரகங்களையும் கைப்பற்றுவதே. இவர்களுடன் இணைகிறான் லோகி. இந்த கும்பலின் பெயர், ச்சிடௌரி (Chitauri). இந்த டெஸராக்ட் அவர்களுக்குத் தேவை. ஏனெனில், அதனை உபயோகித்தால், எந்த கிரகத்துக்கும் ஒரு பாதை ஏற்படுத்தலாம். இந்தப் பாதையின் வழியே தங்கள் படைகளை அனுப்பி, அந்த கிரகத்தை கைப்பற்றலாம். ஆகவே, அவர்களுக்கு இந்த டெஸராக்டைக் கொடுப்பதாகவும், பதிலுக்கு பூமியை தனக்காகக் கைப்பற்றித் தரவேண்டும் என்றும் லோகி அவர்களிடம் கோரிக்கை விடுக்கிறான். சம்மதிக்கும் ச்சிடௌரி மர்மத் தலைவர் (இவரது பெயரும் அடையாளமும் கடைசியில்தான் வெளிவரும்), லோகிக்கு ஒரு புதிய ஆயுதத்தை அளிக்கிறார்.
இப்போது புரிந்திருக்குமே? லோகி டெஸராக்டை ஏன் திருடினான் என்று?
இப்போது நிக் ஃப்யூரியின் ஒரே நம்பிக்கை - இதற்கு முந்தைய படங்களின் கடைசி ஸீன்களிலெல்லாம் யாரிடமெல்லாம் பேசினாரோ, அந்த ஹீரோக்களை ஒன்றுதிரட்டுவதே. இந்த அத்தனை ஹீரோக்களுக்கும், இந்த டெஸரக்டுடன் அனுபவம் இருக்கிறது. அதனைக் கடலின் அடியிலிருந்து கண்டுபிடித்தவனே டோனி ஸ்டார்க்தான்.
அதுதான் - அவர்கள்தான் - The Avengers.
இந்தப் படத்தில், நான் ஏற்கெனவே சொல்லியபடி, நான் எதிர்பார்த்தது மெகா ஸிஜி அல்ல. ஒவ்வொரு ஹீரோக்களைப் பற்றியும் தெரிந்திருந்ததால், இந்த ஹீரோக்கள் எப்படி ஒருவரோடொருவர் பழகுகிறார்கள் என்றே பார்க்க விரும்பினேன். இந்த உறவுமுறையில் கவனம் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படம் வெற்றிபெறும் என்றும் எண்ணினேன். காரணம், வெறும் ஸிஜி, சண்டைகள் போன்றவற்றால் ஒரு படம் வெற்றிபெற முடியாது அல்லவா? உணர்ச்சிகளைத் தூண்டவேண்டும். Conflict - அதுதான் திரைக்கதையின் மூலாதாரமாக இருக்கவேண்டும் என்றுதான் ஸிட் ஃபீல்ட் திரும்பத்திரும்ப சொல்லிவருகிறாரே?
நான் என்ன நினைத்தேனோ, அதைவிடவும் அருமையாக இவ்விஷயத்தில் வீடனும் பென்னும் புகுந்து விளையாடிவிட்டனர்.
படத்தில் காண்பிக்கப்படும் முதல் அவெஞ்சர் - Black Widow நடாஷா ரொமனாஃப் (ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்). லோகி டெஸராக்டுடன் தப்பித்த மறுகணம் இவளைத் தொலைபேசியில் அழைக்கும் நிக் ஃப்யூரி, உடனடியாக ஹல்க்கைத் தேடிப்பிடித்து அழைத்துவருமாறு ஆணையிடுகிறார். அதேசமயம், டோனி ஸ்டார்க்கைத் தேடிச் செல்கிறார் ஏஜெண்ட் கால்ஸன் (முந்தைய அவெஞ்சர் படங்களிலெல்லாம் கௌரவ வேடத்தில் வருபவர்). ஹல்க் என்ற பெயரைச் சொல்லாமல், Monster என்ற பெயரையே ஃப்யூரி சொல்கிறார். உடனே, அது டோனி ஸ்டார்க் என்று எண்ணும் நடாஷாவைத் திருத்தி, ’நிஜ மான்ஸ்டர்’ என்று ஃப்யூரி சொல்லிய அந்தக் கணத்தில், தியேட்டரில் விசில் அடி பின்னியது. ரஜினி படத்தில் ரஜினியின் இண்ட்ரோவில் எப்படி கரகோஷம் இருக்குமோ அப்படி.
அடுத்ததாக நாம் பார்க்கும் சூப்பர்ஹீரோ, டோனி ஸ்டார்க் (சற்றே அளவில் குறைந்த கரகோஷம்). விஷயத்தை கால்ஸனிடமிருந்து தெரிந்துகொள்ளும் ஸ்டார்க், தனக்கேயுரிய அலட்சியத்துடனும் கர்வத்துடனும் ஒத்துக்கொள்கிறார். அதன்பின் நாம் பார்ப்பது, கேப்டன் அமெரிக்கா. இவரிடம் ஃப்யூரியே சென்று விஷயத்தை சொல்கிறார். அதன்பின், கல்கத்தாவில் (யெஸ்) ஏழைகளுக்கு உதவி, காலம் கழித்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானி ப்ரூஸ் பேனர்ஸை (ஹல்க்) காண்கிறோம். நடாஷாவின் வற்புறுத்தலின் பேரில், அவரும் சம்மதிக்கிறார்.
நிக் ஃப்யூரியின் வசம், பிரம்மாண்டமான ஒரு பறக்கும் வஸ்து (Helicarrier) இருக்கிறது. இந்த வஸ்துவில் ப்ரூஸ் பேனர்ஸும் கேப்டன் அமெரிக்காவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்கின்றனர். அங்கே, லோகி ஜெர்மனியில் இருப்பதாகவும், தனது வேற்றுக்கிரக பாதை அமைக்கும் முயற்சிக்குத் தேவையான இரிடியம் திருட முயற்சிப்பதாகவும் தெரிந்துகொள்ளும் ஃப்யூரி, அவனைப் பிடிக்க கேப்டன் அமெரிக்காவை அனுப்புகிறார்.
கிட்டத்தட்ட லோகியைப் பிடித்தேவிடும் கேப்டன் அமெரிக்காவுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. திடும்மென வானத்தில் இருந்து வந்து இறங்கும் IronMan (அயர்ன்மேனின் முதல் அறிமுகம். மிக பலத்த விசில் மற்றும் கரகோஷம்). எப்படியோ இந்தக் கூட்டணி லோகியைப் பிடித்துக்கொண்டு திரும்பும்போது, வானில் பலத்த இடி (புரிந்திருக்குமே). தோரின் அறிமுகம்.
அதன்பின் நான் எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு ஹீரோவும் மற்றவர்களுடன் இணைய மறுத்து, ஈகோ வெளிப்பாட்டில் அடித்துக்கொள்கின்றனர் (நிஜமாகவே). இக்காட்சிகள் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
அதன்பின் இந்த எல்லா ஹீரோக்களும் மனம் திருந்தி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணையும் காட்சி, வழக்கப்படி ஒரு மரணத்தால் சாத்தியப்படுகிறது.
இப்படத்தின் க்ளைமேக்ஸ் போன்ற ஒரு பயங்கர பிரம்மாண்டமான க்ளைமேக்ஸ், இதுவரை நான் பார்த்ததே இல்லை. பின்னே? மொத்தம் ஆறு சூப்பர்ஸ்டார்கள். இவர்களுக்கு இணையான வாய்ப்பு தரவேண்டாமா? மிரட்டுகிறது இப்படத்தின் க்ளைமேக்ஸ். க்ளைமேக்ஸ் மட்டுமன்றி, படத்தில் அவ்வப்போது இந்த ஹீரோக்களின் ஈகோ வெளிப்படும் காட்சிகள் அத்தனையும், மிக மிக நகைச்சுவையாக, எளிதில் புரிந்துகொள்ளும் அளவு எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஆடியன்ஸ் கரகோஷம் செய்வதை வைத்தே இப்படிச் சொல்கிறேன்.
படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை, வந்த ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமான வரவேற்பு பெற்ற ஹீரோ யார் என்று நினைக்கிறீர்கள்? நான் ஆரம்பத்தில் IronMan தான் அப்படியொரு வரவேற்பு பெறுவான் என்று நினைத்தேன். ஆனால், ஐயர்ன்மேனை பின்னுக்குத் தள்ளி, பெருவாரியான வரவேற்பு பெற்றது - ஹல்க் !
இப்படத்தில், ஒவ்வொரு சூப்பர்ஹீரோவுக்கும் ஈக்வலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். அதேபோல், ஒவ்வொரு ஹீரோவின் சிறப்பு அம்சத்தையும் அட்டகாசமாக வெளிக்காட்டியுள்ளனர் (உதா: கேப்டன் அமெரிக்கா, மனித தாங்கும் சக்தி மற்றும் அத்லெடிக் அக்ரோபேடிக்ஸின் உச்சம். அவர் ஸ்டண்ட் செய்யும்போதெல்லாம் அது கச்சிதமாக வெளிப்படுகிறது. அதேபோல், அவரது பன்ச் மூவ்மென்டான கேடயத்தை எறிந்து அது எதிரிகளைத் தாக்கிவிட்டு திரும்பும் மூவ்). இப்படி ஒவ்வொரு ஹீரோவின் ஸ்பெஷாலிடியும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, க்ளைமேக்ஸில் ஹல்க்கின் அற்புதமான இரண்டு மெகா ஷாட்கள் இருக்கின்றன. சொல்லமாட்டேன். நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் கட்டாயம் வந்தே தீரும். அதேபோல், இதுவரை வந்த அத்தனை அவெஞ்சர் படங்களைப் போலவே, இதிலும் டைட்டில்களுக்குப் பின் ஓடும் ஒரு சிறிய காட்சி உண்டு. அதில்தான் இரண்டாம் பாக மெகா வில்லன் அறிமுகம். அவெஞ்சர் காமிக்ஸின் இன்றியமையாத வில்லன்களில் ஒருவனான அவனது பெயர் -Thanos. இவனைப் பற்றி இரண்டாம் பாகத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்தைப் பற்றிய எனது இறுதிக் கருத்து - படம் அட்டகாசம் ! The movie is worth the wait.
பி.கு -
1. படத்தின் முதல்பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதைப் போல் தோன்றலாம். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியும் அறிந்தவராக நீங்கள் இருந்தால், அப்படித் தோன்றாது.
2. படம் தமிழில் பார்க்கப்பட்டால் இன்னும் பட்டையைக் கிளப்பும். உதாரணமாக: லோகியிடம் பேசும் ஸ்டார்க், லோகியின் கேள்விக்கு பதிலாக ‘எங்கிட்ட ஹல்க் இருக்காண்டா’ என்று சொல்லும் காட்சியைப் போல் இதில் பல காட்சிகள் இருக்கின்றன.
3. இப்படத்தில் பாவமான ஹீரோ - கேப்டன் அமெரிக்கா. படம் பூரா வந்தாலும், அவர்மீது அந்த பச்சாதாப பாவ ஃபீலிங் எனக்கு இருந்தது. உங்களுக்கும் அப்படி இருந்ததா என்று ஃபேஸ்புக்கில் வந்து சொல்லுங்கள்.
சரி. இப்படம் முடிந்தது. இனி அடுத்த அவெஞ்சர் படம் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவரப்போகும் இப்படத்தின் அடுத்த பாகம்தானா? என்று கவலையோடு கேட்கும் அவெஞ்சர் ரசிகர்களுக்கு ஒரு மிக இனிப்பான செய்தி. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த சூப்பர் மெகா பவர்ஸ்டார் ஒருவரது படம் விரைவில் வர இருக்கிறது. எப்படி ஆல்ரெடி வெளியான Hulk படத்தை மீறி, Incredible Hulk அவெஞ்சர் கதையில் இடம்பெறும் ஹல்க்குக்கு வித்திட்டதோ, அப்படி ஆல்ரெடி வெளியான இந்த ஹீரோவின் முந்தைய மூன்று படங்களை மீறி, இப்படமும் அவெஞ்சர் கதையில் இனிமேல் இடம்பெறப்போகும் இந்த ஹீரோவின் இடத்தை உறுதிசெய்யும் படமாக அது இருக்கப்போகிறது.
ஜூலை 3ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம்(The Dark Knight Rises ரிலீஸ் தேதி - ஜூலை 20) - The Amazing Spiderman! ஆல்ரெடி வெளியான ஸாம் ரெய்மியின் மூன்று பாக படங்களுக்கு அடுத்த நான்காவது பாகமாக இல்லாமல், புதியதொரு படமாக (க்ரிஸ்டோஃபர் நோலனின் Batman series போல) இது இருக்கப்போகிறது. ராக்கும் ஸ்டோன்கோல்டும் அவ்வப்போது WWFல் கௌரவ வேடம் அளித்துக்கொண்டிருந்ததைப்போல, அவெஞ்சர் காமிக்ஸ்களில் ஸ்பைடர்மேன் வருவது உண்டு. ஆகவே, இந்தப் படக் குழுவினர் இதைப்பற்றி எதுவும் இதுவரை சொல்லாதபோதிலும், என் மனம் சொல்கிறது - கட்டாயம் அடுத்த அவெஞ்சர் படத்தில் ஸ்பைடர்மேன் இருக்கப்போவதாக.
பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment