Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - சினிமா விமர்சனம்

திருவாரூரில் அதுவும் முன்னணி ஹீரோ இல்லா ஒரு படத்தில் இவ்வளவு கூட்டமா என வியந்து போனேன். ஆச்சரியம் தான். நண்பன் படத்துக்கே 35 பேர் மட்டுமே வந்த சிறுநகரம் இது. ஆனால் வந்த கூட்டம் அனைத்தும் சந்தானம் மற்றும் இயக்குனர் ராஜேஷூக்காக என்பது மட்டும் உண்மை. திமுக நகர செயலாளர் தியேட்டர் வாசலில் நின்று அனைவருக்கும் ஜாங்கரி கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த தலைவர் திமுகவில் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கு.

படம் எப்படி இருக்கு. சிறப்பான நடிப்பு, மிகச்சிறந்த கதை, ஆக்சன், செண்டிமெண்ட் இல்லாமல் வழக்கம் போல இயக்குனர் ராஜேஷின் படம் இது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கற பாஸ்கரன் போன்ற அதே டைப் காமெடி படம் இது. ஆனால் நமக்கு அலுக்கவேயில்லை.

படத்தி்ன் கதை என்ன? நாயகன் உதயநிதி ஹன்சிகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். பிறகு ஹன்சிகாவும் காதலித்து எப்படி இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் படம். இந்த மாதிரி படத்துல கதை இவ்வளவு தான் இருக்கும். ஆனால் சொன்ன விதத்தில் வழக்கம் போல அசத்துகிறார்.

உதயநிதி, ஆதவன் படத்தில் கடைசி காட்சியில் வந்து டயலாக் பேசும் போது எனக்கு பயமாயிருந்தது. இவர் படத்தில் ஹீரோவாக நடித்தால் பார்க்க சகிக்காது என்றே நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் சற்று முன்னேறியிருக்கிறார். டயலாக் பேசினால் உதடு அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால் நடிப்பு, போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இந்தப்படம் ஜாலியானபடம் என்பதால் நடிக்க சிரமப்படாமல் உணர்ச்சிகளை காட்டாமல் நகைச்சுவையிலேயே அசத்தி விடுகிறார். ஒரு சில இடங்களில் மட்டும் நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என்பது தெரிகிறார்.

ஹன்சிகா பொம்மை போல் இருக்கிறார். ப்ராம்ட்டில் வசனம் பேசுகிறார். படத்திலேயே சொல்லி விடுகிறார்கள். பார்ப்பதற்கு குஷ்பு போல இருக்கிறார் என்று, நான் என்ன சொல்ல. மற்ற படங்கள் போல சில காட்சிகளில் தலை காட்டுவது இல்லாமல் நிறைய காட்சிகளில் வருகிறார்.

சந்தானம் படத்தின் நிஜ ஹீரோ. ராஜேஷின் முதல் இரு படங்கள் போல இதிலும் படம் முழுக்க வருகிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. இதில் அய்யர் பையனாக வந்து சில இடங்களில் கோவத்தை கட்டுப்படுத்த காயத்ரி மந்திரம் சொல்லும் போது தியேட்டரில் பயங்கர கிளாப்ஸ். தனியாளாக படத்தினை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார். சினேகாவும் ஆண்ட்ரியாவும் அவ்வாறே வந்து செல்கின்றனர். சினேகா ஆண்ட்டியாகி விட்டார் என்பது தெரிகிறது.

பாடல்கள் ஏற்கனவே சின்னத்திரை விளம்பரத்தில் வந்து ஹிட்டாகி விட்டதால் சொல்வதற்கு ஒன்னுமில்லை. ஆனால் வேணாம் மச்சான் வேணா என் பாடல் வந்தவுடன் மொத்த தியேட்டரும் எழுந்து ஆடுகிறது. அதுவும் "கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா" என்ற வரிக்கு கூடுதல் அப்ளாஸ்.

சரண்யா வழக்கம் போல இன்னோசன்ட் அம்மாவாக வருகிறார். உதயநிதி மற்றும் சந்தானத்துடன் சேர்ந்து காமெடியிலும் அசத்துகிறார். அழகம் பெருமாளுடன் சிறு செண்ட்டிமெண்ட்டிலும் சூப்பர்.

படம் எப்படி என்று சொல்ல வேண்டியதெல்லாம் இல்லை. ஏன், எதற்கு என்று யோசிக்காமல் நான் சிறந்த விமர்சகன் என்று நோண்டாமல் சென்றால் பார்த்து சிரித்து குடும்பத்துடன் மகிழ அருமையான படம். பார்த்து சிரித்து ரசியுங்கள்.

இன்னும் நிறைய சொல்லலாம், ஆனால் நீங்கள் கண்டிப்பாக இந்தப்படத்தை தியேட்டரில் சென்று தான் ரசிக்க வேண்டும், இந்த ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு படம்.

0 comments:

Post a Comment